கிண்ணியா, பெரியாட்டுமுனை ஜாவா வீதி பகுதியிலிருந்து 7.56 கிலோகிராம் ஜெலிக்னைற் வெடிபொருள் குச்சிகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்
நேற்று (09) மாலை கிழக்கு கடற்படை பிரிவினர் மற்றும் திருகோணமலை மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவினர் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின்போது குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர் கிண்ணியா பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதுடையவர் என, பொலிஸார் தெரிவித்தனர். மேலும் இவரிடமிருந்து குறித்த வெடிபொருளுக்கு பயன்படுத்தப்படும் 50.6 அடி நீளமான கம்பி/ நூலும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களுக்கு வழங்கும் பொருட்டு குறித்த நபர் ஜமாலியா, நிலாவெளி, எரக்கண்டி ஆகிய பிரதேசங்களுக்கு குறித்த வெடிபொருளை வழங்கி வந்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் சூரிய பண்டார தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட நபர், திருகோணமலை மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவினரால் கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
அப்துல்சலாம் யாசீம்
No comments:
Post a Comment