ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ஆட்சேபனைக்குட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள ரிட் மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று பரீசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. கொழும்பு மாநகர சபை உறுப்பினர் ஷர்மிலா கோனவலவினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ரணில் விக்ரமசிங்க தமது குடும்ப நிறுவனமான லேக் ஹவுஸ் பிரின்டர்ஸ் மற்றும் பப்ளிஷர்ஸ் தனியார் நிறுவனத்தின் பிரதான பங்குதாரர் என்பதுடன், அந்த நிறுவனத்தின் தனிப்பட்ட இலாபத்தைக் கருத்திற்கொண்டு சில அரச நிறுவனங்களுடன் அவர் உடன்படிக்கைகளை கைச்சாத்திட்டுள்ளதாக மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.
அரசியலமைப்பிற்கமைய பாராளுமன்ற உறுப்பினரொருவர் அரசாங்கத்துடன் வர்த்தக உடன்படிக்கையில் கைச்சாத்திட முடியாது என மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கமைய, ரணில் விக்ரமசிங்க பாராளுமன்ற உறுப்பினராக செயற்படுவதற்கு தடை விதித்து அல்லது யாதுரிமை எழுத்தாணை உத்தரவை பிறப்பிக்குமாறு மனுதாரர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ஷிரான் குணரத்ன மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் மனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
ரணில் விக்ரமசிங்க சார்பில் ஆஜராகிய ஜனாதிபதி சட்டத்தரணி, மனுவை ஆரம்பத்திலேயே நிராகரிக்குமாறு அடிப்படை ஆட்சேபனையை முன்வைத்து கோரிக்கை விடுத்தார்.
மனு தாக்கல் செய்யப்படுகையில், உறுதிப்படுத்தப்படாத பிரதியுடனான ஆவணத்தை மனுதாரர் அடிப்படையாகக் கொண்டுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி கே.கனக ஈஸ்வரன் சுட்டிக்காட்டினார்.
மேன்முறையீட்டு நீதிமன்ற விதிகளின் மூன்றாம் உறுப்புரைக்கமைய, அவ்வாறான ஆவணத்தை ஆராய முடியாது என்பதால் இந்த மனுவை நிராகரிக்குமாறு அவர் கோரிக்கை விடுத்தார்.
ரணில் விக்ரமசிங்க கைச்சாத்திட்டுள்ளதாகக் கூறப்படும் உடன்படிக்கைக்குரிய ஆவணத்தை சமர்ப்பிப்பதற்கு மனுதாரர் தவறியுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி இதன்போது குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், கொடுக்கல் வாங்கலுடன் தொடர்புடைய காசோலைகளுக்கான மூலம் மனுவில் இணைக்கப்பட்டுள்ளதாக, மனுதாரர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி உதித்த இகலஹேவா தெரிவித்தார்.
முன்வைக்கப்பட்டுள்ள அடிப்படை ஆட்சேபனைகளுக்கு எதிர்வரும் 26 ஆம் திகதி மனுதாரர்கள் பதிலளிக்கவுள்ளனர்.
No comments:
Post a Comment