13 வைத்தியசாலைகளுக்கு 6000 மில்லியன் ரூபா செலவில் கட்டடங்கள் - பைசல் காசிம் தெரிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Friday, February 8, 2019

13 வைத்தியசாலைகளுக்கு 6000 மில்லியன் ரூபா செலவில் கட்டடங்கள் - பைசல் காசிம் தெரிவிப்பு

நாட்டில் உள்ள 13 வைத்தியசாலைகளுக்கு 6000 மில்லியன் ரூபா செலவில் கட்டடங்களும் 6000 மில்லியன் ரூபா செலவில் அவற்றுக்கு வைத்திய கருவிகளும் வழங்கப்படவுள்ளன என்று சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் கூறினார்.

இது தொடர்பில் விளக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று [08.02.2019] வெள்ளிக்கிழமை அமைச்சில் இடம்பெற்றது. இதன்போதே இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்;

சீனாவின் வேலைத் திட்டத்தின் கீழ் 13 வைத்தியசாலைகளில் 6000 மில்லியன் ரூபா செலவில் கட்டடங்கள் நிர்மாணிக்கப்படவுள்ளன. மஹியங்கன, மீரிகம, தர்ஹா நகர், அளுத்கம, மெதிரிகிரிய, பதவிய, வலஸ்முல்ல, கல்பிட்டிய, ஏறாவூர், சம்மாந்துறை, பொத்துவில், கலவான, ரிகிரிக்கஸ்தல ஆகிய இடங்களில் உள்ள வைத்தியசாலைகளே இத்திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.

இந்த வாரம் 10ஆம் திகதி முதல் ஒரு வாரத்துக்கு இதற்கான அடிக்கல் நாட்டப்படும். 10ஆம் திகதி ஏறாவூர், சம்மாந்துறை மற்றும் பொத்துவில் வைத்தியசாலைகளில் அடிக்கல் நாட்டு வைபவங்கள் இடம்பெறவுள்ளன. அதனைத் தொடர்ந்து மேற்குறிப்பிடப்பட்டுள்ள ஏனைய இடங்களில் அடிக்கல் நாட்டப்படும்.

அமைச்சரவையின் அனுமதியுடன் 6000 மில்லியன் ரூபா நிதி இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல், இந்த வைத்தியசாலைகளுக்கு வைத்திய உபகரணங்களை பெற்றுக்கொடுப்பதற்கும் 6000 மில்லியன் ரூபா நிதி கிடைக்கவுள்ளது.

இதற்கு மேலதிகமாக இந்த வைத்தியசாலைகளுள் இரண்டு வைத்தியசாலைகளுக்கு MRI இயந்திரங்கள் இரண்டு பெற்றுக் கொடுக்கப்படும். அவை இரத்தினபுரிக்கும் பதுளைக்கும் வழங்கப்படும். கமபஹா, மன்னார், கல்முனை, மாத்தளை போன்ற இடங்களுக்கு CT இயந்திரங்கள் நான்கு வழங்கப்படும்.

அதேபோல், நாட்டு மக்கள் அனைவருக்கும் சுகாதார அட்டைகளை வழங்குவதற்கு ஏற்பாடுகளை செய்து வருகின்றோம். அதில் ஒருவரின் சுகாதார நிலைமைகள், அவருக்குத் தேவையான மருந்துகள் பற்றிய விவரங்கள் என அனைத்தும் அதில் அடங்கி இருக்கும். அவர் எந்த வைத்தியசாலைக்குக்குச் சென்றாலும் அந்தக் காட்டினைப் பார்த்து வைத்தியர்கள் உரிய மருந்துகளை வழங்குவர்.

இந்தத் திட்டம் மூலம் வருடம் ஒன்றுக்கு 250 மில்லியன் ரூபாவை மருந்துகளுக்கு செலவிடுவதில் இருந்து மீதப்படுத்த முடியும்.

2015 இல் ஆட்சி மாற்றம் இடம்பெற்றது முதல் சிறந்த சுகாதார சேவையை வழங்குவதற்கான பல்வேறு திட்டங்களை நாம் அமுல்படுத்தி வருகின்றோம். எதிர்காலத்திலும் இதுபோல் மேலும் பல திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.-என்றார்.

ஊடகப் பிரிவு

No comments:

Post a Comment