அரசியல் நெருக்கடி ஐக்கிய தேசிய கட்சிக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம், அதன் காரணமாகவே முன்பை விடவும் அதிக சேவைகளைச் செய்ய தற்போது சந்தர்ப்பம் கிடைத்துள்ளது என்று தபால் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் தெரிவித்துள்ளார்.
கண்டி மாவில்மடையில் அமைந்துள்ள ஐக்கிய தேசிய கட்சி அலுவலகத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர், ஐக்கிய தேசிய கட்சி நீண்ட காலமாக எதிர்க்கட்சியில் இருந்து கடந்த 2015ம் ஆண்டு ஆட்சியை கைப்பற்றியது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பொது வேட்பாளராக நிறுத்தியது.
ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த எங்களதும் ஐக்கிய தேசிய முன்னணியினரின் முயற்சியினால் அவரை வெற்றிபெறச் செய்ய முடிந்தது. அதன்படி அரசை அமைத்தோம். இருந்த போதும் எங்களுக்கு ஒரு ஸ்திரமான அரசை நடாத்துவதற்கு சிறிலங்கா சுதந்திர கட்சியைச் சேர்ந்த சிலரையும் சேர்த்துக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதன் விளைவாக எங்களுக்கு அரச வளங்களையும் நாம் மேற்கொள்ளும் பொதுச்சேவையையும் இரண்டாக கூறு போட வேண்டி வந்தது. இதன் காரணமாக எங்கள் கட்சி அங்கத்தவர்களுக்கு சரியான சேவையை வழங்க முடியவில்லை அதனை நாங்கள் ஏற்றுக் கொள்கின்றோம்.
இந் நிலையில் அண்மையில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டது. இந்த அரசியல் ஸ்திரமற்ற தன்மை ஐக்கிய தேசிய கட்சிக்கு கிடைத்த அதிர்ஷ்டமாகும்.
தற்போது நாங்கள் தனி ஆட்சியை அமைத்துள்ளோம். எங்கள் கட்சி அங்கத்தவர்களுக்கு எங்களால் முன்பை விடவும் அதிக சேவைகளை தற்போது செய்ய முடியும் என்றார்.
No comments:
Post a Comment