புத்தளம் - அறுவைக்காடு பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் கழிவகற்றல் திட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் கடந்த காலங்களில் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இந்நிலையில், மரமுந்திரிகை செய்கை பண்ணப்பட்டு வந்த காணி இந்தத் திட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
அறுவைக்காடு பிரதேசத்தில் சீமெந்து கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான சுண்ணாம்புக்கல் அகற்றிய பின்னர் கைவிடப்பட்டுள்ள குழிகள் நிறைந்த பகுதியிலேயே புத்தளம் -அறுவைக்காடு கழிவகற்றல் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
இந்த பகுதியை அண்மித்துள்ள 100 ஏக்கருக்கும் அதிகமான காணிகளில் பல வருடங்களாக மக்கள் மரமுந்திரிகை செய்கையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
2015 ஆம் ஆண்டு இரண்டு ஏக்கர் வீதம் செய்கையில் ஈடுபட்ட மக்களுக்கு இந்த காணி பகிர்ந்தளிக்கப்பட்டு, காணிக்கான அனுமதிப்பத்திரம் அப்போதைய வண்ணாத்திவில்லு பிரதேச செயலாளரினால் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், புத்தளம் - அறுவைக்காடு கழிவகற்றல் திட்டத்திற்காக இந்த காணியை தற்போதைய வண்ணாத்திவில்லு பிரதேச செயலாளர் வழங்கியுள்ளதாக மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
மரமுந்திரிகை செய்கை அழிக்கப்பட்டு தற்போது யானை வேலிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கடந்த ஒரு மாத காலமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையிலேயே தாமுள்ளதாகவும் மக்கள் குறிப்பிட்டனர்.
இந்த விடயம் தொடர்பில் பலருக்கும் அறிவித்த போதிலும் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என மக்கள் கூறினர்.
No comments:
Post a Comment