இலங்கையில் இடம்பெற்ற போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய ஐவர் பங்களாதேஷில் கைது - News View

About Us

About Us

Breaking

Tuesday, January 29, 2019

இலங்கையில் இடம்பெற்ற போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய ஐவர் பங்களாதேஷில் கைது

இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தும் சர்வதேச வலையமைப்புடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் பங்களாதேஷ் பிரஜைகள் ஐவர் அந்நாட்டு விசேட பொலிஸ் குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

23 மற்றும் 26 வயதான மூன்று பெண்கள் அடங்கலாக 5 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. டாக்கா நகரில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நாட்டில் கைப்பற்றப்பட்ட பாரிய அளவு ஹெரோயின் போதைப்பொருளை இலங்கையில் விற்பனை செய்யும் நடவடிக்கையில் குறித்த சந்தேகநபர்களும் தொடர்புபட்டுள்ளார்களா என்ற சந்தேகம் உள்ளதாகவும் பங்களாதேஷ் பாதுகாப்புப் பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த வருடம் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி இரத்மலானை பகுதியில் கைப்பற்றப்பட்ட 278 கிலோகிராம் ஹெரோயினுடன் பங்களாதேஷ் பிரஜைகள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.

இதேவேளை, கடந்த டிசம்பர் மாதம் 14 ஆம் திகதி தெஹிவளையில் கைப்பற்றப்பட்ட 32 கிலோகிராம் ஹெரோயினுடன் மற்றுமொரு பங்களாதேஷ் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டார்.

இதேவேளை, பாரிய அளவு போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கொள்ளுப்பிட்டியில் கைது செய்யப்பட்ட அமெரிக்க பிரஜை இருவர் உள்ளிட்ட 05 சந்தேகநபர்களும் எதிர்வரும் 08 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு கோட்டை பதில் நீதவான் பிரியந்த லியனகே முன்னிலையில் சந்தேகநபர்கள் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர்களிடமிருந்து 95 கிலோகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment