வர்த்தக முரண்பாடுளை அரசியல் பழிவாங்கலுக்கான காரணமாக பயன்படுத்தி தன்மீது சேறுபூசியவர்களுக்கு எதிர்வரும் காலங்களில் மக்கள் ஜனநாயக ரீதியாக பதில் அளிப்பார்கள் என்றும் எத்தகைய சவால்கள் ஏற்படுத்தப்பட்டாலும் தலைநகரில் தன்னுடைய அரசியல் பணி தொடரும் என்றும் மேல் மாகாண சபை உறுப்பினர் சண். குகவரதன் தெரிவித்துள்ளார்.
அண்மையில் குற்றப் புலனாய்வு துறையினரால் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் விளக்கமளிக்கும் நோக்கில் கொழும்பில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அங்கு அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைமையோடு ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக, கடந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் இருந்து தனித்துவமாக செயற்பட்டு வந்தமையினால் தன்னுடைய வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள், நீண்ட காலமாக வர்த்தக முதலீட்டாளராக தன்னுடன் இணைந்து செயற்பட்டுவந்த திரு. சற்குணநாதன் என்கின்ற லண்டன் வாசிக்கும் தனக்கும் இடையில் ஏற்பட்ட கொடுக்கல் வாங்கல் முரண்பாட்டை சாதகமாக பயன்படுத்தி தன்மீது அவதுாறு பிரசாரம் மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், உள்ளுராட்சி மன்றத் தேர்தலிலை தொடர்ந்து கொழும்பு மாநகர சபைக்கு கட்சி தீர்மானத்திற்கு மாறாக தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களின் அடிப்படையில் உறுப்பினர்களை நியமித்தமை, வடக்கு கிழக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பலத்தை வலுவிழக்கச் செய்யும் செயற்பாடுகளை மேற்கொண்டமை மற்றும் கட்சி வளர்ச்சிக்கு ஆரோக்கியமற்றவர்களை கட்சிக்குள் உள்வாங்கியமை உட்பட பல்வேறு தீர்மானங்களுக்கு எதிராக கட்சிக்குள் குரல் கொடுத்தமையே கட்சி தலைமைக்கும் தனக்கம் முரண்பாடு ஏற்படக் காரணம் எனவும் சண். குகவரதன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் எதிர்கால அரசியல் கட்சி தொடர்பில் ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த குகவரதன், தனிக் கட்சி ஆரம்பிக்க வேண்டிய தேவையிருப்பதாக தான் உணரவில்லை எனவும், ஏற்கனவே பல்வேறு கட்சிகளில் இருந்தும் அழைப்பு வந்து கொண்டிருப்பதால் எந்தக் கட்சியின் ஊடாக பயணிப்பது என்பது தொடர்பில் தன்னுடைய ஆதரவாளர்களுடன் ஆலோசித்து வருவதாகவும் விரைவில் அதுதொடர்பில் அறிவிப்பு வெளியாகும் எனவும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment