கூட்டமைப்பின் விருப்பத்திற்கு ஏற்றவாறு அரசியலமைப்பு சீர்திருத்தத்தை கொண்டு வர முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையகத்தில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “புதிய அரசியலமைப்பை பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதிக்கு முன்னர் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
புதிய அரசியலமைப்பொன்றை கொண்டு வந்து, அதனை நடைமுறைப்படுத்துவது வரையான 33 கட்டமைப்புக்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இதனை மீறி எதையும் முன்னெடுக்க முடியாது என்பதுவே உண்மையான நிலவரமாகும்.
வழிநடத்தல் குழுக்கூட இது தொடர்பில் இறுதி முடிவுகளை எடுக்கவில்லை. இந்த நிலையில், புதிய அரசியலமைப்பை கொண்டுவருவது தொடர்பில் சுமந்திரன் தெரிவித்து வரும் கருத்துக்கள் அனைத்தும் தமிழ் மக்களை ஏமாற்றும் ஒன்றாகவே கருதப்படுகிறது.
புதிய அரசியலமைப்பின் ஊடாக தமிழர்களுக்கு ஒரு நன்மை ஏற்படுமாக இருந்தால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்ற ரீதியில் நாம் என்றும் தடையாக இருக்கவே மாட்டோம்.
ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இணங்க அரசியலமைப்பொன்றை கொண்டுவர நாம் ஒருபோதும் இணங்க முடியாது.
தற்போது நாடாளுமன்றில் எந்தவொரு தரப்புக்கும் பெரும்பான்மை இல்லை. இவ்வாறான நிலையில், அரசியலமைப்பொன்று கொண்டுவரப்பட்டு அது தோற்கடிக்கப்படுமாக இருந்தால், அது சுதந்திரக் கட்சியைத் தான் இனவாதக் கட்சியாக காண்பிக்கும்.
மேலும், தெற்கிலுள்ள இனவாதிகள் புதிய அரசியலமைப்பைத் தோற்கடித்து விட்டார்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது இதனையே தமது தேர்தல் பிரசாரத்துக்காகப் பயன்படுத்திவிடும்.
நாடாளுமன்றில் கொண்டுவரப்பட்டால் தோற்கடிக்கப்பட்டுவிடும் என்றுத் தெரிந்தும், சுமந்திரன் உள்ளிட்ட தரப்பினர் இவ்வாறான கருத்துக்களை வெளியிடுவது தமிழர்களை முட்டாளாக்கும் ஒரு செயற்பாடாகவே எம்மால் கருதப்படுகிறது. இந்த யதார்த்தத்தை தமிழர்கள் உணர்ந்துக்கொள்ள வேண்டும்.” என கூறினார்.
No comments:
Post a Comment