அரசியமைப்பின் பிரகாரம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ள மாகாண சபைகளுக்கான தேர்தல்களை நடத்தாது இழுத்தடித்துக் கொண்டே வருவது ஒரு ஜனநாயக விரோதச் செயற்பாடாகும் என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் இன்று வியாழக்கிழமை (03.01.2019) வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, நாட்டின் ஒன்பது மாகாண சபைகளில் தற்போது ஆறு மாகாண சபைகளின் ஆட்சிக்காலம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு பல மாதங்கள் கடந்து விட்டன.
அதிலும், கிழக்கு, வடமத்திய, சப்ரகமுவ ஆகிய மாகாண சபைகளின் ஆட்சி முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு இப்பொழுது ஒன்றரை வருடங்கள் கழிந்து விட்டன. ஆனால், குறிப்பிட்ட மாகாணங்களில் மக்களாட்சி இல்லாதது பற்றி அரசாங்கம் அலட்டிக் கொண்டதாகத் தெரியவில்லை.
மாகாண சபைகளுக்கான தேர்தல்களை நடத்தாது இழுத்தடிப்பதன் மூலம் மக்களாட்சியைக் கேலிக் கூத்தாக்கி விட்டு மத்தியில் நல்லாட்சி நிலவுகிறது என்று கூறுவதில் எந்தவித அர்த்தமுமில்லை. கலப்புத்தேர்தல் முறையைக் கொண்டு வந்து கபட நாடகமாட எடுக்கப்படும் முயற்சியில் குறிப்பாக, முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் முழுமையாக இல்லாமற் செய்யப்படுகின்றது.
எனவே, அரசாங்கம் பழைய விகிதாரப்பிரதிநிதித்துவ முறையின்படி தேர்தல்களை நடத்தி சிறுபான்மையினருக்குள்ள ஜனநாயகத்தை உயிர்ப்பூட்ட உதவ வேண்டும். நாட்டில் முன்னெப்போதுமில்லாத வகையில் தற்போது தேர்தல்கள் பிற்போடப்பட்டு வருகின்றன. இந்த ஜனநாயக மறுப்பு நிலை முடிவுக்குக் கொண்டு வரப்படாவிட்டால், மக்கள் அணிதிரள வேண்டிய நிலையேற்படும். எனவே, இது பற்றி அரசாங்கம் முக்கியத்துவமளித்துச் சிந்திக்க வேண்டும்.
நல்லாட்சி என்ற அர்த்தத்துக்கும் ஜனநாயகத்துக்கும் ஏற்புடையதல்லாத வழிகளில் அரசு காய் நகர்த்துவது அப்பட்டமான உரிமை மீறலாகும். மக்களைத் தொடர்ந்தும் முட்டாள்களா வைத்திருக்கும் நிலைப்பாட்டை அரசாங்கம் தெரிவு செய்யுமாயின், அதன் விளைவுகளை அரசாங்கம் அடுத்து வரும் தேர்தல்களில் சந்திக்கும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment