மஹிந்த ராஜபக்ஷவின் பிரதமர் பதவி மற்றும் அமைச்சரவை செயற்படுவதற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மேன்முறையீட்டு மனுவை பெப்ரவரி மாதம் 06ம் திகதி விசாரணைக்கு அழைக்க உச்ச நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
குறித்த மனு பிரதம நீதியரசர் நளின் பெரேரா பிரசன்ன ஜயவர்தன மற்றும் எல்.டி.பி தெஹிதெனிய ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
ஐக்கிய தேசிய கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் 122 பாராளுமன்ற உறுப்பினர்கள் சார்பாக ஆஜராகியிருந்த சட்டத்தரணி, இது சம்பந்தமாக மேன்முறையீட்டு நீதிமன்றில் நிலுவையில் உள்ள வழக்கை வாபஸ் பெறுவது சம்பந்தமாக எழுத்துமூல கோரிக்கையை விடுப்பதற்கு காலம் வழங்குமாறு கோரிக்கை விடுத்தார்.
இதனையடுத்து மனுதாரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி, மேன்முறையீட்டு நீதிமன்றில் உள்ள வழக்கை வாபஸ் பெறுவதாக இருந்தால், உச்ச நீதிமன்றில் உள்ள இந்த மேன்முறையீட்டு மனுவை வாபஸ் பெறுவதற்கு தமது சேவையாளர்கள் தயார் என்று நீதிமன்றில் தெரிவித்தார்.
அதன்படி குறித்த நடவடிக்கையின் முன்னேற்றம் குறித்து ஆராய்வதற்காக வழக்கை எதிர்வரும் பெப்ரவரி 06ம் திகதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
No comments:
Post a Comment