முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமித்து மக்களிடத்தில் அவருக்கு காணப்பட்ட செல்வாக்கை சீர்குலைத்தமைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே முழு பொறுப்பையும் ஏற்க வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய அரசியல் நிலைவரம் தொடர்பாக இன்று (02) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், “பெரும்பான்மையை ஐக்கிய தேசிய கட்சி நான்கு முறை நிரூபித்துவிட்டன. ஆகையால் பெரும்பான்மை பெறாமல் ஆட்சியை முன்னெடுத்து செல்லமுடியாது என்பதை பலமுறை மஹிந்தவுக்கு தெளிவுபடுத்தியுள்ளேன்.
மேலும் அதிகாரங்களை தக்கவைத்து கொள்வதற்காகவே சில அமைச்சர்கள் தொடர்ந்து போராடுகிறார்களே தவிர, அரசியல் பிரச்சினைக்கு தீர்வை முன்வைப்பதற்கு முனைவதாக இல்லை.
அந்தவகையில் நாட்டின் நிலைமையை கவனத்திற்கொள்ளாமல் பதவி ஆசைக்காக மாறுபட்ட தர்க்கங்களை முன்வைப்பதுடன் அதனை நியாயப்படுத்த ஒரு தரப்பினரை அவர்கள் வைத்துள்ளனர்.
இதேவேளை தற்போது தோன்றியுள்ள பிரச்சினை தேசிய அரசாங்கத்துக்குள்ளே காணப்பட்ட பிரச்சினையாகும். அதனை அவர்களே பேசித் தீர்த்திருக்க வேண்டும்.
ஆனால், இவ்விடயத்தில் எதிர் தரப்பினரான மஹிந்த ராஜபக்ஷ அணியையும் உள்வாங்கி பாரிய பிரச்சினையை உருவாக்கியமைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே பொறுப்பு கூற வேண்டும்” என குமார வெல்கம மேலும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment