அனைத்து கட்சி உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவித்த ஜனாதிபதி - News View

About Us

About Us

Breaking

Monday, November 19, 2018

அனைத்து கட்சி உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவித்த ஜனாதிபதி

அனைத்துக் கட்சி உறுப்பினர்களுக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளதன் மூலம் அவர் இதனை தெரிவித்துள்ளார். 

நேற்று இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் பின்னர் இன்று பாராளுமன்றத்தில் மிகவும் அமைதியாவும் ஒற்றுமையாகவும் செயற்பட்டமைக்கு, அனைத்து கட்சி உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவிப்பதாக அவர் அதில் குறிப்பிட்டுள்ளார். 

பாராளுமன்றத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் சிக்கலை தீர்ப்பதற்கு கடந்த ஞாயிறு அனைத்து கட்சிகள் மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளைப் பற்றி விளக்கிக் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை அரசியலமைப்பின்படி தனக்கு கிடைத்துள்ள அதிகாரத்தின் கீழ் புதிய பிரதமர் ஒருவரை ஜனாதிபதி நியமித்ததையடுத்து சிலர் பாராளுமன்றத்தில் பதற்ற நிலையை உருவாக்க முயற்சித்தனர். எழுந்துள்ள நிலை தொடர்பாக ஜனாதிபதி முன்னுரிமை வழங்கி நடவடிக்கையில் இறங்கினார்.

இதன்படி கடந்த 15ம் திகதியும் 18ம் திகதியும் ஜனாதிபதி இரு கூட்டங்களை நடத்தினார். அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் நடைபெற்ற இந்த கூட்டங்களில் பாராளுமன்ற அமர்வுகளின்போது மோதல் போக்கினை கைவிட்டு நிலையியற் கட்டளைகளின்படி பாராளுமன்ற சம்பிரதாயம் பேணப்பட வேண்டும் என்று ஜனாதிபதி கூறியிருந்தார்.

ஜனாதிபதி வழங்கியிருந்த அறிவுறுத்தல்கள் மற்றும் ஆலோசனைக்கு ஏற்ப இன்று பாராளுமன்றம் கூடியபோது நடந்துகொள்வதென நேற்று நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இணக்கம் காணப்பட்டது. 

நிலையியற் கட்டளைகளின்படி பிரமருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை இடம்பெறுமானால் அது பாராளுமன்ற சம்பிரதாயங்களுக்கு ஏற்ப நடைபெற வேண்டும். என்பதுடன் பாராளுமன்றத்தின் எவ்வித நெருக்கடியையும் ஏற்படுத்துவதைத் தவிர்ப்பதென கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இணக்கம் காணப்பட்டது.

ஜனாதிபதியின் வழி காட்டல்களின்படி பாராளுமன்றத்தில் நடந்துகொண்ட அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஜனாதிபதி அவரது விசேட நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டார்.

No comments:

Post a Comment