'நாட்டை நெருக்கடியிலிருந்து மீட்கவே ஜனாதிபதி இந்த முடிவை எடுத்தார்' என்று இன்றைய அரசியல் நிலைவரம் தொடர்பாக கருத்துக் கூறுகிறார் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளருமான டியூ குணசேகர.
கேள்வி: அரசியலமைப்பின் 42, 4ம் பிரிவுக்கு அமையவே உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதியால் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்த உங்கள் கருத்தென்ன?
பதில்: இன்று நாடு முகங்கொடுத்துள்ள நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்க ஜனாதிபதிக்கு மாற்றுவழி இருக்கவில்லை. அவர் கடந்த காலத்தை எண்ணாது எதிர்காலத்தைப் பற்றியே எண்ணியுள்ளார் என எனக்குத் தோன்றுகின்றது.
கேள்வி: அரசியலமைப்பில் இவ்வாறான வாய்ப்புகள் இருக்குமென்றால் ஜனாதிபதி இவ்வளவு நெருக்கடி ஏற்படும் வரை ஏன் முடிவு எடுக்கவில்லை?
பதில்: நெருக்கடி உருவாகும் வரை அவருக்கு முடிவு எடுக்க முடியாது. எங்களுக்கு புரியாத சில விடயங்கள் பொறுப்பு வாய்ந்த பதவி வகிக்கும் அவருக்குப் புரியும். ஜனாதிபதி சரியான தருணம் வரும் வரையில் காத்திருந்தார் என்றே கூற வேண்டும்.
கேள்வி: ஜனாதிபதி எதிர்பார்க்கும், அவர் வாக்குறுதியளித்த அரசியல் மாற்றம் எதிர்காலத்தில் ஏற்படுமா?
பதில்: 2015இல் அவரை ஜனாதிபதியாக்க இணைந்தவர்கள் பலவித கருத்துக்கள், நோக்குகள் உடைய சமூக சக்திகளேயாவர். அன்று அவர்களது ஒரே நோக்கம் முன்னாள் ஜனாதிபதியை நீக்குவதாகும். அதன் பின்னரான நாட்டை ஆட்சி செய்யும் சமூக, பொருளாதார கொள்கைகள் பற்றி யாரும் எண்ணவில்லை.
அரசாங்கத்தை அமைத்து ஆட்சியை முன்னெடுத்துச் செல்ல பொதுவான ஒருமைப்பாடு அவசியமாகும். அன்று அந்த அரசாங்கத்தில் அந்த ஒற்றுமை காணப்படவில்லை. பல கொள்கைகளைக் கொண்டவர்கள் அரசாங்கத்தை பிரதிநிதித்துவம் செய்தார்கள். அதனால் கொள்கை ரீதியாக மோதல் ஏற்பட்டது. அதனால் இணைந்து முடிவுகளை எட்ட இயலாத நிலைமை உருவானது.
கேள்வி: முன்னாள் பிரதமரால் செய்ய முடியாது போன விடயங்களை புதிய பிரதமரால் செய்ய முடியுமா?
பதில்: அதை உடனடியாகக் கூற முடியாது. புதிய பிரதமர் என்ன செய்வார் என்பதை எண்ணுவதை விட முன்னாள் பிரதமருக்கு கட்சியின் தலைமைப் பொறுப்பும் இல்லாமல் போகுமா என எண்ணத் தோன்றுகின்றது. புதிய எதிர்க்கட்சித் தலைவர் ஒருவர் நியமனம் பெறுவார் என எண்ணுகின்றேன்.
கேள்வி: 2015இல் மக்களின் ஆதரவு இந்த நாட்டில் புதிய அரசியலமைப்பு மற்றும் இனப்பிரச்சினைக்குத் தீர்வு கண்டு ஊழல் மோசடியை தடுக்கவே வழங்கப்பட்டது. அது பற்றிய உங்கள் கருத்தென்ன?
பதில்: அரசாங்கத்தில் கடந்த மூன்றரை வருட காலமாக கொள்கை மோதல் காணப்பட்டது. நான் ஏற்கனவே கூறினேன் பல சமூக பொருளாதார கொள்கைகளை உடையவர்களே இணைந்திருந்தார்கள். அன்று அவர்கள் நிறைவேற்று அதிகாரத்தைப் பற்றியே எண்ணினார்கள்.
ஆனால் அதிகாரம் கிடைத்த பின்னர் எவ்வாறு செயல்படுவது என்ற பொதுவான ஒருமைப்பாடு அவர்களிடம் இருக்கவில்லை. அன்று அந்த மாற்றத்துக்கு ஜே.வி.பி., ரி.என்.ஏ. போன்ற கட்சிகளும் ஆதரவை வழங்கின.
ஆனால் ஸ்ரீல.சு.கட்சியும் ஐ.தே.கட்சியுமே அரசாங்கத்தை அமைத்தன. இலங்கை அரசியலில் முதற் தடவையாக இவ்வாறான ஆட்சி முயற்சி செய்து பார்க்கப்பட்டது. அன்று அவர்கள் பொதுவான திட்டமொன்றுடன் இணைந்திருந்தார்களானால் இந்த மோதல் ஏற்பட்டிருக்காது. அன்றைய நூறுநாள் ஆட்சியின் ஐம்பதாவது நாளிலேயே பிணைமுறி மோசடி இடம்பெற்றது.
அரசாங்கம் வீழ்ச்சியடைய இதுவும் ஒரு காரணமாகும். நல்லாட்சி அரசாங்கத்தில் முதலாம் இடத்தில் புதிய அரசியலமைப்பே காணப்பட்டது. அரசாங்கத்தை அமைத்தவர்கள் அதற்கு முக்கியத்துவம் அளித்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு நடக்கவில்லை.
கேள்வி: நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிகள் அனைவரும் ஜனாதிபதி அபேட்சகர்களாக இருக்கும் போது நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறையை மாற்றுவதாக கூறினார்கள். ஜனாதிபதியான பின்னர் அதை செய்வதில்லை. அதற்குக் காரணம் என்ன?
பதில்: சந்திரிக்கா அம்மையாரும் இதனைக் கூறினார். நாம் அன்று அவரை வற்புறுத்தினோம். அவர் தாமதமாகவாவது மாற்றுவதற்கு தேவையான முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால் நிறைவேற்று அதிகாரத்தை இரத்து செய்ய முடியாமற் போனது. அதற்குப் பின்னர் வந்த எவரும் முயற்சி செய்யவில்லை.
கேள்வி: 19வது அரசியல் திருத்தத்தின் மூலம் தற்போதைய ஜனாதிபதி அதிகாரங்களை குறைத்துக் கொண்டாரல்லவா?
பதில்: 19வது திருத்தச் சட்டத்தின் இறுதி விவாதத்தின் போதும் பொதுவான ஒருமைப்பாடு எட்டப்பட்டிருக்கவில்லை. இறுதியில் ஜனாதிபதியையும் பிரதமரையும் ஒரே மேசையில் அமரச் செய்து கலந்துரையாடப்பட்டது. அவ்வேளையில் பிரதமர் எழுந்து சென்று விட்டார்.
அதன் பின்னர் ஜனாதிபதியும் சென்று விட்டார். இறுதியில் நானும் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தனவும் இணைந்து அவர்களை மீண்டும் அழைத்து வந்தோம். இவ்வாறான திருத்தமொன்றை இடைநடுவில் கைவிட முடியாதெனக் கூறி ஜனாதிபதியை இணங்கச் செய்து பொதுஇணக்கத்திற்கு வந்தோம்.
கேள்வி: 19வது அரசியலமைப்பு திருத்தத்தில் சில அதிகாரங்கள் குறித்து பிரச்சினைகள் ஏற்படுகின்றன. அதற்கு அதிகாரம் வழங்கும் வகையில் கொண்டுவரப்பட்ட 20வது திருத்தம் இடைநடுவில் நிறுத்தப்பட்டதல்லவா?
பதில்: நல்லாட்சி அரசாங்கத்தின் 100 நாள் திட்டத்தின் கீழ் 19வது திருத்தம் கொண்டுவரப்பட்டது. அந்தத் திட்டத்தில் பாராளுமன்றத்திற்கு நிறைவேற்று ஜனாதிபதி முறையின் ஒரு பகுதியும், பாராளுமன்ற முறைமைகளின் ஒரு பகுதியும் உள்ளடக்கப்படுகின்றன. இந்நிலைமை காரணமாக ஏற்பட்டுள்ள அரசியலமைப்பு பிரச்சினை காரணமாக அதற்குத் தீர்வு காண புதிய நிர்வாகம் முயற்சி செய்ய வேண்டும்.
கேள்வி: மக்கள் விடுதலை முன்னணி 20வது அரசியலமைப்பு திருத்தத்தைக் கொண்டுவர முயற்சி செய்வது மேலே குறிப்பிடப்பட்ட அரசியலமைப்பு பிரச்சினை காரணமாகவா?
பதில்: ஆம். தற்போதுள்ள பிரச்சினையிலிருந்து மீள்வதற்கு உள்ள ஒரே தீர்வு 20வது அரசியலமைப்பு திருத்தத்தைக் கொண்டு வருவதாகும். மக்கள் விடுதலை முன்னணித் தலைவர்கள் இத்தீர்வுக்கு, இத்திருத்தத்துக்கு தேவையென்றால் மக்கள் வாக்கெடுப்புக்கு செல்வோமென்று கூறுகின்றார்கள்.
எவ்வாறாயினும் இறுதியில் மக்களின் அங்கீகாரம் கிடைக்க வேண்டும். மக்கள் தேவையில்லை என்றால் அதனை நிராகரிக்கலாம். அதனால் 20வது திருத்தத்தைக் கொண்டு வருவதை நான் ஆதரிக்கிறேன்.
கேள்வி: 20வது திருத்தத்தைக் கொண்டுவந்தால் நாடு பிரிக்கப்படுமென சிலர் கூறுகின்றார்களல்லவா?
பதில்: அதை நான் நம்பவில்லை. அவ்விடயம் அரசியல் இலாபம் கருதி மேடைகளில் கூறப்படும் ஒரு விடயமாகும்.
கேள்வி: அரசியலமைப்பில் பிரச்சினை இருப்பதாக நாட்டு மக்களுக்கு அரசியல் கட்சியின் பிரதிநிதிகள் ஏன் கூற மறுக்கிறார்கள்?
பதில்: எனக்கும் உள்ள பிரச்சினை இதுதான். இங்கு தலைமை தாங்க வேண்டியது அரசியல் கட்சி தலைவர்களாவர். இந்நாட்டில் பொருளாதார பிரச்சினையொன்று இருப்பதாகக் கூட அரசியல்வாதிகள் மறுக்கிறார்கள்.
கேள்வி: நாடு நெருக்கடிக்குள் வீழ்வதற்குக் காரணம் மக்களின் தவறா? அரசியல்வாதிகளின் தவறா?
பதில்: உண்மையில் மக்களைக் குறை கூற முடியாது. மக்களிடம் அதிகாரத்தைக் கேட்கும் போது அவர்கள் கொடுக்கின்றார்கள். ஆனால், அரசியல்வாதிகளோ தேர்தலுக்கு முன்னர் அளித்த வாக்குறுதிகளை அதிகாரத்துக்கு வந்த பின்னர் மறந்து விடுகிறார்கள்.
அது எமது நாட்டு அரசியலின் தன்மையாகும். ஆட்சிக்கு வரவும் ஆட்சியில் நிலைக்கவும் கொள்கையாகவும் அரசியல் கலாசாரமாகவும் இவ்விடயம் அமைந்து விட்டது.
கேள்வி: ஆனால், எமது நாட்டுக்கு தேசிய கொள்கையொன்றின் தேவை குறித்து அநேகமானோர் சுட்டிக்காட்டுகிறார்கள் அல்லவா?
பதில்: இந்நாட்டில் அமைந்திருந்த செயல்திட்ட வழங்கல் அமைச்சை இல்லாமல் செய்தது பாரிய குறையாகும் என எண்ணுகிறேன். அந்த அமைச்சு செயற்படாமை காரணமாக நாடு பெரும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளது.
அமைச்சர்களுக்கு வரவு செலவுத் திட்டத்தின் மூலம் நிதியொதுக்கப்படும் போது அவர்கள் தங்களுக்குத் தேவையானவற்றைச் செய்கிறார்கள்.
அவர்களுக்கு அவ்வாறு செய்ய உரிமையில்லை. இந்த நிதி மக்களுடையது அதற்கு என்ன நடக்கின்றதென ஆராய வேண்டும். முழுநாட்டிலும் பணம் எவ்வாறு செலவு செய்யப்படுகின்றதென்பதை மக்கள் அறிய வேண்டும்.
எமது நாட்டின் இயற்கை வளங்கள், மனித வளங்கள், நில வளங்கள் போன்ற விடயங்களை ஆராய்ந்து உலக பொருளாதாரத்துக்கு முகங்கொடுக்கக் கூடிய கொள்கைத் திட்டமொன்றை தயாரிக்க வேண்டும். இன்று அவ்வாறு நடைபெறுவதில்லை.
கேள்வி: நாட்டை முன்னேற்றமடையச் செய்வதற்கு தேவையான விடயங்கள் என்ன?
பதில்: இந்தப் பிரச்சினை பற்றி சமூகத்தில் கலந்துரையாடப்பட வேண்டும். இன்று நாட்டில் புத்திஜீவிகள், மதத் தலைவர்கள் அமைதியாக இருக்கிறார்கள். இவர்கள் அனைவருக்கும் சுதந்திர பொருளாதார பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அதனால் தற்போதைய நிலைமைக்கு ஏற்றவாறு நாட்டை முன்னெடுத்துச் செல்ல தேவையான திட்டங்களையும் கொள்கைகளையும் தயாரிப்பது குறித்து தேவையான அடிப்படை கலந்துரையாடலை மேற்கொள்ள வேண்டும். அதன் பிரகாரம் அரசியல் அதிகாரத்துடன் நாட்டை முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்ல திட்டம் தீட்டப்பட வேண்டும்.
துமிந்த அலுத்கெதர
(தினமின)
No comments:
Post a Comment