நாட்டை அழிவிலிருந்து மீட்கும் பொருத்தமான நடவடிக்கை - கல்வியாளர்கள், மதத் தலைவர்கள் கருத்து - News View

About Us

About Us

Breaking

Friday, November 2, 2018

நாட்டை அழிவிலிருந்து மீட்கும் பொருத்தமான நடவடிக்கை - கல்வியாளர்கள், மதத் தலைவர்கள் கருத்து

நாட்டின் பிரதமராக மஹிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதி நியமித்தமை அரசியலமைப்பில் வழங்கப்பட்ட அதிகாரங்களுக்கு அமைவானதென மதத் தலைவர்களும், நிபுணர்களும் கருத்துத் தெரிவித்துள்ளார்கள்.

நாட்டை பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீட்கவும், நாட்டில் ஏற்பட்டுள்ள ஜனநாயக விரோத நடவடிக்கைகளிலிருந்து நாட்டைக் காப்பாற்றவும் ஜனாதிபதி தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி இவ்வாறான நடவடிக்கையை மேற்கொண்டது காலத்துக்கு ஏற்ற செயலென அவர்கள் சுட்டிக்காட்டுகின்றார்கள்.

"ஜனாதிபதி எடுத்த இந்த முடிவை நாம் மதிக்கின்றோம்" என்கிறார் பேராசிரியர் தெரகொட அபயதிஸ்ஸ தேரர்.

"இந்த நாட்டிற்கு வளமான நன்மையான எதிர்காலத்தை உருவாக்க ஜனாதிபதியால் எடுக்கப்பட்ட முடிவை மதத் தலைவர்களான நாம் மதிக்கின்றோம். இது முடிவல்ல ஆரம்பமேயாகும். எதிர்காலத்தில் நிச்சயமாக பொதுத் தேர்தலுக்கு முகங்கொடுக்க வேண்டும். 

அதன் மூலம் நாட்டில் நிரந்தரமான ஆட்சியை ஏற்படுத்தி நாட்டு மக்களின் வாழ்க்கைச் செலவுப் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும். நாட்டில் மக்கள் பயமின்றி வாழவும், முதலீடுகளை மேற்கொள்ளத் தேவையான பின்னணியையும் உருவாக்க வேண்டும்.

நாட்டின் பல கோடி பெறுமதியான சொத்துகளை வெளிநாட்டுக்கு கொண்டு செல்லும் திட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்து நாட்டை வளமாக்க வேண்டும். அதற்கான ஆரம்பமாக இச்சந்தர்ப்பம் அமைய வேண்டுமென பிரார்த்திக்கின்றேன்" என்று அவர் மேலும் தெரிவித்தார்.

"தேவையான தருணத்தில் எடுக்கப்பட்ட அவசியமான முடிவு இது" என்று சர்வதேச இந்துமத அமைப்பின் பொதுச் செயலாளர் பாபு சர்மா குருக்கள் கூறுகிறார்.

"ஜனாதிபதி தேவையான தருணத்தில் முக்கிய முடிவை எடுத்துள்ளார் என்பதே எனது எண்ணமாகும். வாழ்க்கைச் செலவை சமாளிக்க முடியாமல் மக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளார்கள். இந்த மக்களுக்கு உதவி செய்ய முடியாத அரசாங்கத்தால் நாட்டுக்கும் மக்களுக்கும் எந்தப் பயனுமில்லை. 

பொருளாதாரத்தை வளப்படுத்தி வளமான நாடாக உருவாவது நாம் இன்று முகம்கொடுக்கும் சவாலாகும். முப்பது வருட கால யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த மஹிந்த ராஜபக்ஷவால் இந்த சவாலை எதிர்கொள்ள முடியுமென நம்புகின்றேன். 

அதனால் ஜனாதிபதி எடுத்த இந்த முடிவை மதிக்கின்றோம். இந்த முடிவினால் இலங்கை மக்களுக்கு இனமத பேதமின்றி எதிர்காலத்தில் நன்மைகள் கிடைக்குமென நாங்கள் எண்ணுகின்றோம்" என்று அவர் மேலும் தெரிவித்தார்.

"தைரியமான இம்முடிவு நாட்டிற்கு பெரும் அதிர்ஷ்டமாகும்" என்று அருட்தந்தை கலாநிதி குருகுலசூரிய தெரிவித்தார்.

"பசியால் அடுப்பைப் பற்றவைக்க முடியாமல் சமையலறைகளில் பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்த மக்களின் துன்பத்தைப் போக்க ஜனாதிபதி தைரியமாக எடுத்த முடிவு நாட்டிற்கு பெரும் அதிர்ஷ்டமாகும். நாடு அடைந்துள்ள பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீள்வதற்கு மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமித்தது நாடு பெற்ற பாக்கியமாகும் என்பது எனது எண்ணம். 

அவரும் அவரது அமைச்சரவை உறுப்பினர்களும் ஜனாதிபதியடன் இணைந்து அந்நடவடிக்கையை வெற்றிகரமாக நிறைவேற்ற தேவையான பலம் கிடைக்க வேண்டுமென மதத் தலைவர்கள் என்ற ரீதியில் ஆசீர்வதிக்கின்றோம்.

மஹிந்த ராஜபக்ஷ மீன்பிடி அமைச்சராக இருந்த வேளையிலிருந்து நான் அவருடன் மிகவும் நெருக்கமாக இருந்தேன். மீனவ மக்களின் பிரச்சினைகளில் தலையிட்டு அவற்றிற்கு தீர்வு கண்டு அவர்களுக்கு உதவி செய்தார். அதேபோல் யுத்தகாலத்தில் அவர் எமது நாட்டு இராணுவத்தை பலப்படுத்த வேண்டுமெனக் கூறினார். 

அதேபோல் இராணுவத்தை பலப்படுத்தி மூன்று தசாப்த கால யுத்தத்திலிருந்து நாட்டைக் காப்பாற்றி மக்களுக்கு சுதந்திரமாக மூச்சுவிட சந்தர்ப்பத்தை ஏற்படுத்தினார். அந்த உயர்ந்த பணியை நிறைவேற்றிய மஹிந்த ராஜபக்ஷ இந்நாட்டின் பொருளாதார பிரச்சினைக்குத் தீர்வு காணுவார். 

இந்நாடு அடைந்துள்ள பொருளாதார வீழ்ச்சி மிகவும் மோசமானது. அதிலிருந்து மீண்டு நாட்டை பலப்படுத்தவே ஜனாதிபதி இந்த முடிவை மேற்கொண்டுள்ளார்" என்று மேலும் அவர் கூறினார்.

"இது மிக முக்கிய முடிவு" என்று சப்ரகமுவ கல்லைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சந்தன உடவத்த கூறினார்.

"நாடு வீழ்ந்திருந்த படுகுழியிலிருந்து மீள ஜனாதிபதி எடுத்த காலத்துக்குப் பொருத்தமான மிகவும் முக்கியமான முடிவென இதனை நான் கருதுகின்றேன்.

ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் மீதான கொலை முயற்சி, சூழ்ச்சி தொடர்பான விசாரணைகள் மிகவும் மந்தகதியில் நடைபெற்றமை பொதுமக்களை கவலை கொள்ளச் செய்தது. நாட்டுத் தலைவர் மீதான கொலை முயற்சி குறித்து தெரியவந்த நேரம் கடந்த அரசாங்கம் செயற்பட்ட விதம் குறித்து நாம் அதிருப்தி அடைந்தோம். 

அதேபோல் பிணைமுறி சம்பவம் தொடர்பாகவும் மக்கள் அரசாங்கத்தின் மீது வைத்திருந்த நம்பிக்கை பழுதுபட்டு போனது. மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றவில்லை. ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி அடைந்த போது அது சர்வதேச நிலைமை எனக் கூறி திருப்பி விட முயற்சி செய்தார்கள். பொருளாதார நோக்கொன்று காணப்படவில்லை.

வேலை தருவதாகக் கூறினாலும் வேலைவாய்ப்புக்களை ஏற்படுத்தவில்லை. தற்போது பங்குச் சந்தை பங்குகள் ஒரே நாளில் அதிகரிப்பைக் காட்டுகின்றன. பொருளாதாரம் உறுதியடைந்து அந்நிய செலாவணி அதிகரிக்கும் என எதிர்பார்க்கின்றோம். 

தேர்தலை தள்ளிப்போடுவதையும் மக்கள் விரும்பவில்லை.மேலே குறிப்பிட்ட விடயங்களை நிறைவேற்றும் நோக்கில் ஜனாதிபதி புதிய பிரதமரை நியமித்தது சரித்திர முக்கியத்தும் வாய்ந்த முடிவென எமக்குத் தெளிவாகத் தெரிகின்றது" என்று கூறினார் அவர்.

"சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த முடிவு" என்று இன ஐக்கியத்துக்கான அனைத்து மத அமைப்பின் இணைத் தலைவர் கலாநிதி அல்ஹாஜ் ஹஸன் மௌலானா தெரிவித்தார்.

"நாட்டின் பிரதமராக மஹிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்து புதிய அரசாங்கத்தை அமைத்தது சரித்திரபூர்வமான முடிவெனக் கூற வேண்டும். ஜனாதிபதி இந்நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சியை கருத்தில் கொண்டே இம்முடிவை எடுத்துள்ளார். 

இன்று மக்கள் தாங்க முடியாத அளவு வாழ்க்கைச் செலவு அதிகரிப்பால் துன்பப்படுகிறார்கள். வாழ்க்கைச் செலவைக் குறைத்து நாட்டை பொருளாதார ரீதியில் மேம்படுத்தும் ஆற்றல் மஹிந்த ராஜபக்‌ஷவிடம் மட்டுமே உள்ளது. இந்த நாட்டின் நிலைமையை புரிந்து கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்த முடிவை மதத் தலைவராக நான் மதிக்கின்றேன். 

கடந்த அரசாங்கம் மக்களின் நம்பிக்கைகளை நிறைவேற்றும் என அவர்கள் நம்பினார்கள். ஆனால் அவர்கள் அவற்றை நிறைவேற்றவில்லை. ஆகவே தனக்கு வாக்களித்த அறுபத்திரண்டு இலட்சம் மக்களினதும் மற்றும் அனைத்து மக்களினதும் நன்மை கருதி ஜனாதிபதி இந்த முடிவை எடுத்துள்ளார்.

தற்போதைய பிரதமர் இந்த நாட்டை பொருளாதார வளமிக்க நாடாக மாற்ற பெரும் முயற்சி எடுக்க வேண்டும். மூன்று தசாப்த கால யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த மஹிந்த ராஜபக்ஷவுக்கு பொருளாதார யுத்தத்திலும் வெற்றி பெற முடியும். 

பொருளாதார பிரச்சினையைத் தீர்த்து நாட்டை சர்வதேச ரீதியில் உயர்ந்த இடத்துக்கு கொண்டு செல்லும் திறமை அவரிடமுள்ளது. அதனால் ஜனாதிபதி தேவையான சந்தர்ப்பத்தில் நல்ல முடிவை எடுத்துள்ளார் என்பதே எமது நம்பிக்கையாகும்" என்று அவர் கூறினார்.

சமன்மலீ பிரியசாந்தி
தினமின

No comments:

Post a Comment