அரசாங்கத்தில் எந்த நெருக்கடியுமில்லை எனவும் பிரதமர் செயலகம் உட்பட அமைச்சுக்கள் அனைத்தும் முறையாக செயற்பட்டு வருவதாகவும் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் அரசியலமைப்பையோ நிலையியற்கட்டளையையோ மதிக்காமல் செயற்படும் சபாநாயகரினாலேயே நெருக்கடிகள் உருவாகியுள்ளன. காகிதத்துண்டுக்கு மதிப்பளித்து நம்பிக்கையில்லாப் பிரேரணையை அனுமதிப்பது வெட்கக்கேடான விடயமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஆளும் கட்சி ஏற்பாடு செய்திருந்த விசேட செய்தியாளர் மாநாடு நேற்று பாராளுமன்ற கட்டடத்தில் நடைபெற்றது. அமைச்சர்கள் எஸ்.பி. திசாநாயக்க, கெஹெலிய ரம்புக்வெல்ல, எஸ். எம் சந்ரசேன ஆகியோர் இம்மாநாட்டில் விளக்கமளித்தனர்.
அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இங்கு மேலும் தெரிவித்ததாவது, அரசாங்கத்தில் எந்த நெருக்கடியும் கிடையாது பிரதமர் செயலகம் செயற்படுகிறது. நிதியமைச்சு உட்பட அனைத்து அமைச்சுக்களும் செயற்படுகின்றன.
நெல்லுக்கான நிர்ணய கொள்வனவு விலை 41 ரூபாவிலிருந்து 45 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் அரசாங்கம் எவ்வித தடையுமின்றி செயற்படுகின்றது.
பாராளுமன்றத்தை ஸ்ரீ கொத்தவாக்கி செயற்படுவதே பிரச்சினையாகியுள்ளது. சபாநாயகரின் செயற்பாடு தவறானது இதனால் தற்போது இடம்பெறுவது போன்று பாராளுமன்றத்தை கொண்டு செல்ல முடியாது. பாராளுமன்றத்தின் தற்போதைய அனைத்து செயற்பாடுகளும் சட்டத்துக்கு முரணானது. நிலையியற் கட்டளைகளுக்கு எதிராகவே செயற்பாடுகள் இடம்பெறுகின்றன.
ஜனாதிபதியினால் பிரதமர் ஒருவர் நியமிக்கப்பட்டு அமைச்சரவையும் செயற்பட்டு வருகிறது. அதேவேளை ஜனாதிபதியினால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றம் கலைக்கப்பட்டமை தொடர்பில் நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவைப் பிறப்பித்துள்ளது.
இடைக்காலத் தடை முடிவுறுவதற்கு இன்னும் 10 நாட்களே உள்ளன. பாராளுமன்றம் செயற்படுவது தவறல்ல. இந்த பாராளுமன்றத்தை சபாநாயகர் கூட்டிய முறை தவறானது. அரசியலமைப்பில் இதற்கான விதிகள் தெளிவாக உள்ளன.
14 ஆம் திகதி பாராளுமன்றத்தைக் கூட்டியது ஜனாதிபதியே. அன்றைய தினத்தில் பாராளுமன்றத்தில் ஜனாதிபதியின் விசேட உரையும் பாராளுமன்றத்தை ஒத்திவைப்பதுமே ஒழுங்குப் பத்திரத்தில் உள்ளடக்கப்பட்டிருந்தது. பாராளுமன்றத்தில் நெருக்கடியை ஏற்படுத்தியது சபாநாயகரே.
நாட்டின் அரசியலமைப்பு, பாராளுமன்ற நிலையியற் கட்டளைக்கிணங்க ஜனாதிபதி செயற்பட்டுள்ளார்.
இத்தகைய நிலையில் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை ஆளும்கட்சி கொண்டு வராததேன்? என ஊடகவியலாளர் ஒருவர் கேள்வியெழுப்பியபோது அதற்குப் பதிலளித்த அமைச்சர்,
பாராளுமன்றம் முறையாக நடக்குமானால் அங்கு காட்டு சட்டமன்றி நடைமுறைச்சட்டம் பின்பற்றப்படுமானால் நாம் நமபிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரத் தயார்.
சிறு காகிதத்துண்டு ஒன்றின் மூலம் நாட்டின் பிரதமரை பதவி நீக்குமாறு நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படுகிறது. எந்த வெட்கமுமில்லாமல் சிறு காகிதத்துண்டுக்கு சபாநாயகர் இணங்குகின்றார்.
நம்பிக்கையில்லாப் பிரேரணையில் 20 பேர் கையெழுத்திட வேண்டும். அது முறைப்படியானது என்பதை பாராளுமன்ற செயலாளர் நாயகம் சபாநாயகருக்கு உறுதிப்படுத்தி சமர்ப்பிக்கவேண்டும். ஒழுங்குப் பத்திரத்தில் அது உள்ளீர்க்க்பபடுவதுடன் ஐந்து நாட்கள் அதற்கு காலம் வழங்கப்பட வேண்டும். அவ்வாறு எதுவும் முறையாக இடம்பெறவில்லை. அதனால் அது செல்லுபடியற்றதாகிறது என்றார்.
No comments:
Post a Comment