மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேசத்திற்கு பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர இன்று (வெள்ளிக்கிழமை) விஜயம் செய்துள்ளார்.
இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காகவே பொலிஸ் உயரதிகாரிகள் கொண்ட குழுவொன்றுடன் பொலிஸ் மா அதிபர் குறித்த பிரதேசத்திற்கு விஜயம் செய்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் அடையாளம் தெரியாத ஆயுததாரிகளால் இன்று அதிகாலை சுட்டுக்கொல்லப்பட்டனர்.
வவுணதீவு வலையிறவு பாலத்திற்கு அருகில் உள்ள பொலிஸ் சாவடியில் நேற்று இரவு பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்களே இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
இது குறித்து இன்று நாடாளுமன்றத்திலும் பல்வேறு கருத்துகள் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் பொலிஸ்மா அதிபர் நேரடியாக சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்.
இக்குழுவில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர ஆகியோர் உள்ளடங்கியுள்ளதாக அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் குறித்த பிரதேசத்தில் இடம்பெற்ற விசாரணை நடவடிக்கைகளை ஆராய்ந்த பொலிஸ் மா அதிபர், மட்டக்களப்பு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் இடம்பெறும் விசேட கலந்துரையாடலில் கலந்து கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment