இளைஞர், யுவதிகளுக்கு தேசிய வீடமைப்பு அதிகார சபையில் தொழில் வாய்ப்பை வழங்க அமைச்சர் முன்வர வேண்டும் - சீ.யோகேஸ்வரன் MP - News View

About Us

About Us

Breaking

Monday, October 1, 2018

இளைஞர், யுவதிகளுக்கு தேசிய வீடமைப்பு அதிகார சபையில் தொழில் வாய்ப்பை வழங்க அமைச்சர் முன்வர வேண்டும் - சீ.யோகேஸ்வரன் MP

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள இளைஞர், யுவதிகளுக்கு தேசிய வீடமைப்பு அதிகார சபையில் தொழில் வாய்ப்பை வழங்க அமைச்சர் முன்வர வேண்டுமென தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று மீறாவோடை தமிழ்க்கிராமத்தில் நிர்மாணிக்கப்பட்ட 130வது மாதிரிக்கிராமமான சுவாமி விபுலானந்தர் கோட்டம் 30.09.2018ம் திகதி ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்ட போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், மட்டக்களப்பு மாவட்டத்திற்கு ஒரு இலட்சத்திற்கு மேல் வீடுகள் தேவைப்படுகின்றது. ஆனால், இரண்டரை இலட்சம் ரூபாய் செலுத்தி வீட்டினைப்பெற முடியாத மக்கள் அதிகம் இருக்கின்றார்கள்.

வீட்டுத்திட்டங்களைக் கொண்டு வரும் போது, பல்வேறு பிரச்சனைகள் வருகின்றன. சீனா வீட்டுத்திட்டத்தினைக் கொண்டு வந்தால், இந்திய அரசாங்கத்தின் எதிர்ப்பு ஏற்படுகின்றது. இவ்வாறு பிரச்சனைகள் ஏற்படுவதால் எம் மக்களது வீட்டுப்பிரச்சனை பெருவாரியாகக் காணப்படுகின்றது.

அமைச்சரே எதிர்காலத்தில் ஜனாதிபதியாக வருவதற்கு இப்போது இருந்தே வேலைத்திட்டங்களைச் செய்து வரும் நீங்கள், ஜனாதிபதியாக வருவதற்கு வாழ்த்துக்கள் கூறுகின்றோம். வறுமையிலுள்ள மக்கள் பணத்தைச் செலுத்தி வீட்டினைப்பெற முடியாமலுள்ளனர். எனவே, மானிய அடிப்படையில் வீடுகளைப் பெற்றுத்தர நீங்கள் முன்வர வேண்டும்.
மீறாவோடைப் பகுதியில் சில காணிகள் பிரச்சனையிலுள்ளது. அந்தக் காணிப்பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு மக்களிடம் கிடைக்கப்பெறும் பட்சத்தில், அந்த மக்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுக்க நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பல இளைஞர், யுவதிகள் வேலைவாய்ப்புகளின்றிக் காணப்படுகின்றனர். எனவே, இவர்களுக்கு தேசிய வீடமைப்பு அதிகார சபையில் தொழில்வாய்ப்பை வழங்க முன்வர வேண்டுமென்று இச்சந்தர்ப்பத்தில் கேட்டுக்கொள்கின்றேன். இப்பகுதியில் தொழில் பேட்டைகளை அமைப்பதற்கு ஆதரவு வழங்க வேண்டும்.

வாழைச்சேனை தேசிய கடதாசி ஆலையைக் கட்டியெழுப்ப நாங்கள் தயாராக இருக்கின்றோம். அதற்கான முதலீட்டாளர்கள் தயாராகவுள்ளனர். நீங்கள் அமைச்சரவையில் கூறி கடதாசி ஆலையை மிக விரைவாக ஆரம்பிக்க நடவடிக்கையெடுக்க வேண்டும். 

முதலீட்டாளர்களை நாங்கள் வழங்கத்தயாராகவுள்ளோம். ஆலையை இயக்குவதன் மூலம் வறுமையிலுள்ள இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பை வழங்க எதிர்கால ஜனாதிபதி என்ற வகையில் நீங்கள் செயற்பட வேண்டுமென்றார்.

எஸ்.எம்.எம்.முர்ஷித் 

No comments:

Post a Comment