இலங்கைக்கு மீண்டும் ஜனாதிபதி மற்றும் பிரதமராகப் பதவியேற்று மீண்டும் சுரண்டி விடலாமென்று நினைக்கின்றனர். சுரண்டி அனுபவித்தவர்கள் மீண்டும் சுரண்டுவதற்கு உங்களிடத்தில் வருவார்கள் என தேசிய வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் சஜீத் பிரேமதாச தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று மீறாவோடை தமிழ்க்கிராமத்தில் நிர்மாணிக்கப்பட்ட 130வது மாதிரிக்கிராமமான சுவாமி விபுலானந்தர் கோட்டம் 30.09.2018ம் திகதி ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்ட போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டைப்பொறுத்தவரையில் நாட்டில் பல விரோதிகள் காணப்படுகின்றார்கள். மக்களிடத்தில் பொய்களை உண்மையாக மாற்றி பரப்புகின்றனர். அத்தோடு ஜாதி, இன வேறுபாடுகளைத்தூண்டிக் கொண்டு திரிகின்றனர். நாட்டின் தலைமைத்துவத்தைப் பிடிப்பதற்கு நாட்டிற்கு இறையாண்மையாகச் செயற்பட்டு வருகின்றனர்.
நாட்டிற்கு மீண்டும் ஜனாதிபதி மற்றும் பிரதமராகப் பதவியேற்று மீண்டும் சுருட்டி விடலாமென்று நினைக்கின்றனர். எதிரணியினர் குறுக்கு வழியாகச் சென்று தங்களை அடையாளப்படுத்துகின்றனர். நாங்கள் மக்களிடம் சென்று வீடு, நீர், மின்சாரம், வீதி அபிவிருத்தி, விவசாய அபிவிருத்திகளைச் செய்து பெயர் எடுக்கின்றோம். இவர்கள் ஆலயங்கள், குளங்களை உடைத்து இனப்பிரச்சனையைத் தோற்றுவித்து செயற்படுகின்றனர்.
ஜனாதிபதி பிரதமரை நாட்டை விட்டு துரத்துவதற்கு கடந்த செட்டெம்பர் 5ம் திகதி மக்களைத் திரட்டினர். ஆனால், அதில் கலந்து கொண்டவர்கள் மது போதையைப் பாவித்து மின்சாரத்தூண்கள் மற்றும் வீதிகளில் விழுந்து கிடந்தனர். மதஸ்தலங்களை உடைத்தவர்கள் தற்போது மதஸ்தலங்களுக்கு சென்று மக்கள் மத்தியில் இடம்பிடித்து ஆட்சியைப் பிடிப்பதற்கு அவர்களது மத நிகழ்வுகளுக்குச் செல்கின்றனர்.
கடந்த ஆட்சியில் சுரண்டி அனுபவித்தவர்கள் மீண்டும் சுரண்டுவதற்கு ஆட்சியைத் தட்டிப்பறிக்கலாமென்ற சிந்தனையில் திரிகின்றனர். உங்களிடத்தில் கூறுகின்றேன் 2025ம் ஆண்டளவில் 25 இலட்சம் மக்களுக்கு இருபதாயிரம் வீடுகளைச் சொத்தமாக்கிக்கொள்ள வேண்டும். இதற்கு நாங்கள் வீடுகளை அமைத்துக் கொடுப்போம்.
2020ம் ஆண்டளவில் மீண்டும் நல்லாட்சி அரசாங்கமே ஆட்சியமைக்கும். கடந்த ஆட்சியை நடாத்திய திருடர்களுக்கு மீண்டும் நாட்டை வழங்கினால் உங்களைத்தேடி இவ்வாறு வருவார்களா? தலைக்கும் மீசைக்கும் மை பூசிக்கொண்டு முகத்தை அழகுபடுத்திக் கொண்டு ஒரு பொம்மை போன்று தான் வருவார்கள்.
இவர்கள் அலறிமாளிகைக்குச் செல்வதற்கு உங்களது வாக்குகளைப் பெற்று உங்களுக்கு உதவி செய்வதற்கல்ல. அவர்கள் சுகபோக வாழ்க்கை வாழ்வதற்கு. நாங்கள் ஏழை மக்களுக்கு பத்து பேர்ச் காணி வீதம் வழங்குகின்றோம். ஆனால், அவர்கள் எல்லாக்காணியையும் சேர்த்து ஒருவருக்கு வழங்குவார்கள். அவர்கள் தான் ராஜபக்ஷ குடும்பத்தினருக்கு வழங்குவார்கள்.
இவர்கள் ஆட்சிக்கு வந்தால் கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு மாவட்டம் ஏன் உங்கள் வீடுகளுக்கு வருவார்களா? சிந்தித்துப்பாருங்கள் ஒரு போதும் இடம்பெறமாட்டாது. ஏனெனில், கடந்த காலத்தில் செய்யவில்லை. இனியும் செய்யப்போவதில்லை. மீண்டும் கடந்த ஆட்சியில் நீங்கள் பட்டக்கஷ்டங்களை அனுபவிக்கப்போகின்றீர்களா? சற்று சிந்தித்துப்பாருங்கள்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் தேசிய வீடமைப்பு அதிகார சபையில் பயிற்சியாளராக கடமையாற்றும் உத்தியோகத்தர்களை ஒப்பந்த அடிப்படையில் சேர்த்துக் கொள்ளப்படுவதுடன், அடுத்த வாரத்தில் மாவட்ட முகாமையாளர் மற்றும் சிலருக்கு பதவி உயர்வு வழங்கப்படும்.
கல்குடாத்தொகுதியில் ஆறு பிரதேச செயலாளர் பிரிவுகள் உள்ளது. அதிலுள்ள ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் காணப்படும் வீடு குறைபாடுகள் விரைவில் தீர்க்கப்படும். நாடு முழுவதும் 2019ம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் 2500 வீட்டுத்திட்டம் அமைக்கப்படும். 2020ம் ஆண்டு ஜனவரியில் ஐயாயிரம் வீட்டுத்திட்டம், மூன்றாம் கட்டமாக பத்தாயிரம் வீட்டுத்திட்டமும், 2025ம் ஆண்டளவில் வீட்டுப்பிரச்சனையைத் தீர்க்குமுகமாக இருபதாயிரம் வீட்டுத்திட்டம் அமைக்கப்படும்.
எமது நல்லாட்சி அரசாங்கத்தில் பத்து இலட்சம் ரூபாய் பெறுமதியான காணியுடன் வீடுகளை மக்களின் வீடில்லாப் பிரச்சனையைத்தீர்க்க வழங்கி வருகின்றோம். மீறாவோடை வீட்டுத்திட்டத்தை அண்மித்து சட்டவிரோத முறையில் காணியில் அத்துமீறி குடியிருப்போரிடம் விசாரித்து வீடுள்ளனவா? இல்லையா? என்று விசாரணை நடாத்துவதுடன், இப்பகுதியில் இன்னும் ஐந்து வீட்டுத்திட்டங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
நாடளாவிய ரீதியில் மூன்று இலட்சத்துக்கு மேற்பட்டோருக்கு நன்மை பெறும் வகையில் வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு 23 பில்லியன் தொகை நல்லாட்சி அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்டது. இதில் எந்தவொரு நிதியும் திறைசேரிக்கு திருப்பிச்செல்லவில்லை என்றார்.
இதன் போது மீறாவோடை தமிழ்க்கிராமத்தில் நிர்மாணிக்கப்பட்ட முப்பது வீட்டின் உரிமையாளர்களுக்கு ஆவணப்பத்திரம் வழங்கி வைக்கப்பட்டதுடன், சிலருக்கு கடனுதவிகள், மூக்குக்கண்ணாடிகள் வழங்கப்பட்டது.
தேசிய வீடமைப்பு அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் க.ஜெகநாதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மீன்பிடி நீரியல்வள மற்றும் கிராமிய பொருளாதார பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், ஞா.ஸ்ரீநேசன், வாழைச்சேனைப் பிரதேச செயலாளர் வீ.வாசுதேவன், கோறளைப்பற்று பிரதேச சபைத்தவிசாளர் திருமதி.சோபா ஜெயரஞ்சித், கோறளைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்கள், அரச அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
எஸ்.எம்.எம்.முர்ஷித்
No comments:
Post a Comment