திருமண உறவில் விரிசல், கருத்து முரண்பாடு ஏற்பட்டு விட்டால் கணவன் மனைவியும் பிரிந்து தான் போக வேண்டுமென்பதில்லை. இவ்வாறான சந்தர்ப்பங்களில், அவர்களுக்கிடையே சமரசப்பேச்சுக்கள் இடம்பெறுவதுண்டு. ஊடல், முரண்பாடாக வலுக்கின்ற போது பிழைகள் மட்டும் கண்ணுக்குத்தெரிவது போல, சமரசங்கள் ஏற்படும் வேளையில் கடந்த பல வருட உறவின் காதல்மிகு நினைவுகளும் கண்முன்னே வருகின்றன.
இது போலவே, தேசிய காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாவுல்லாவுக்கும் அக்கட்சியின் இரண்டாம் நிலை தலைவரும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.உதுமா லெப்பைக்குமிடையில் ஏற்பட்ட பிணக்கு, இப்போது கொஞ்சம் சமரசத்திற்கு வந்திருக்கின்றது. அரசியலில் ஊடலுக்குப் பின்னரான கூடலென்றும் இதைக்கூற முடியும்.
தேசிய காங்கிரஸின் தலைவருக்கும் தளபதியும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டுமென்று கணிசமானோர் நினைத்துக் கொண்டிருக்க இவ்விருவருக்குமிடையிலான உறவு முறியுமளவுக்கு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இவர்களுக்கிடையில் யாரோ புகுந்து விளையாடியிருக்கின்றனர். உதுமா லெப்பை இதனை எடுத்துச்சொல்லியும் அவர் இராஜினாமாச்செய்யும் வரை அதாவுல்லா ஏதோ காரணத்திற்காக கண்டு கொள்ளவில்லை.
ஆக மொத்தத்தில் சமூக வலைத்தளத்தால் உட்கட்சிப்பூசலை சந்தித்த முதலாவது முஸ்லிம் கட்சியாக தேசிய காங்கிரஸை குறிப்பிட முடியும். இதே நேரம் அதாவுல்லாவுக்கும் உதுமா லெப்பைக்குமிடையில் பின்னர் ஏற்பட்டிருக்கின்ற இணக்கம் எதிர்பாராதவொன்று என்றாலும், அது ஒரு விதத்தில் சிறந்த இராஜதந்திர நகர்வாகும்.
இவ்விருவருக்கெதிராக பரஸ்பரம் முகநூலில் வசைபாடிய பக்குவப்படாத தொண்டர்களின் முகத்தில் அதாவுல்லா – உதுமாலெப்பை மீளுறவு ஓங்கி குட்டியிருக்கின்றது. எப்போதும் எதுவும் நடப்பது சகஜமான அரசியல் களத்தில், அரசியல்வாதிகளுக்காக வீணாக நாம் மல்லுக்கு நிற்கத் தேவையில்லையென்பதை இச்சம்பவம் மீள உணர்த்தியிருக்கின்றது.
கீறல் விழுந்த உறவு
தேசிய காங்கிரஸ் இஸ்தாபிக்கப்பட்டதிற்குப்பிறகு, அதாவுல்லாவின் நம்பிக்கைக்குரிய வலது கையாக மர்ஹூம் பிரதியமைச்சர் அன்வர் இஸ்மாயிலுக்குப்பிறகு உதுமாலெப்பை இருந்தார். ஆனால், எல்லாக்கட்சிகளையும் போல சின்னச்சின்ன மனத்தாங்கல்கள் பல வருடங்களாக இருவருக்குமிடையில் இருந்து வந்திருக்கின்றது. அவை பற்றியெல்லாம் கடந்த வார வீரகேசரி கட்டுரையில் விரிவாகக்குறிப்பிட்டிருந்தேன்.
தலைமைத்துவக்கட்டுப்பாடு மற்றும் தலைவர் மீது கொண்ட விசுவாசத்தின் காரணமாக இவையெல்லாம் உதுமாலெப்பைக்கு பெரிதாகத் தெரியவில்லை. ஆனால், உள்ளுராட்சித்தேர்தலில் அட்டாளைச்சேனை பிரதேச சபையில் கிடைத்த வாய்ப்பு தவறவிடப்பட்டமை அதன் பின்னர் இரண்டு கட்டங்களாக உதுமாலெப்பை மீது நவீன ஊடகங்களினூடாக முன்வைக்கப்பட்ட விமர்சனங்கள் போன்றவை அவரது மனதில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தன.
குறிப்பாக, கட்சியின் முக்கிய உறுப்பினர்களே கட்சியின் முகநூலூடாக இவ்வாறான விமர்சனங்களை முன்வைத்ததாகவும், இது பற்றி அவர் தலைவர் அதாவுல்லாவிடம் பலமுறை சொல்லியுள்ள போதும் சமரச முயற்சிகள் எடுக்கப்பட்டனவே தவிர, உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லையென்று உதுமாலெப்பை கூறுகின்றார்.
இதன் பின் சிறிது காலம் இவ்வாறான விமர்சனங்கள் ஒய்ந்திருந்த போதும், இரண்டாம் கட்டமாக அண்மைக்காலமாக மீண்டும் மறைமுகமாகத்தாக்கும் விமர்சனங்கள் நவீன ஊடகங்களில் மேலெழுந்துள்ளன என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
தலைவருக்கு இவற்றையெல்லாம் சொல்லியும், போலிப்பிரசாரம் செய்வோரைக் கண்டுகொள்ளாதிருப்பது இவர்களுக்கு தலைவரின் ஆசீர்வாதம் இருக்குமோ என்ற சந்தேகத்தை அவருக்கு ஏற்படுத்தாமல் விட்டிருக்காது. எனவே, பொறுமையிழந்த உதுமாலெப்பை அக்கரைப்பற்றில் அண்மையில் இடம்பெற்ற கூட்டத்தில் இக்கதைகளையெல்லாம் தலைவர் முன்னிலையிலேயே போட்டுடைத்து, வெளிப்படையாகப் பேசினார்.
இந்தப்பின்னணியில் இதற்கெல்லாம் காரணம் என உதுமாலெப்பை சந்தேகிக்கின்ற ஒருவர் தேசிய காங்கிரஸின் உயர்பீடத்தில் உள்வாங்கப்பட்டமை, தான் வகித்த பதவி மாற்றப்பட்டமை, கட்சித்தலைவர் மேடையில் பேசிய (இரண்டு விதமாக அர்த்தப்படக்கூடிய) வார்த்தைகள் போன்றன உதுமாலெப்பை கட்சியின் பொறுப்புக்களிலிருந்து விலக உடனடிக் காரணமானதாகத் தெரிகின்றது.
ஏனைய பல கட்சிகளின் தலைவர்களுக்கும் தளபதிகளுக்குமிடையில் இருக்கின்ற பரஸ்பர நம்பிக்கையை விட, தே.கா. தலைவர் அதாவுல்லாவுக்கும் உதுமாலெப்பைக்குமிடையில் சிறந்த ஒரு நம்பிக்கையே இன்று வரையும் இருக்கின்றது. அதில் சிலர் கூரிய நகங்களால் கீறி விளையாடி இருக்கின்றார்கள்.
அதாவுல்லாவின் பார்வை
உதுமாலெப்பையின் அண்மைக்கால போக்குகள் அதாவுல்லாவுக்கு பிடிகொடுக்கவில்லை. உதுமாலெப்பை முஸ்லிம் கூட்டமைப்புப் பற்றிப் பேசியமை மற்றும் அவர் பற்றி கிடைக்கப்பெற்ற தகவல்கள் அதாவுல்லா சந்தேகப்படுவதற்கு போதுமானவையாக இருந்தன. கட்சியின் முக்கியஸ்தர்களான உதுமாலெப்பையும் சட்டத்தரணி பஹீஜூம் 30 மில்லியன் பணத்தைப்பெற்றுக்கொண்டு கிழக்கில் புதிய கட்சியொன்றை பதிவு செய்து அதைக்கூட்டமைப்புடன் இணைத்துக் கொள்ள முனைவதாக தலைவர் அதாவுல்லாவுக்கு நம்பும்படி சொல்லப்பட்டுள்ளது.
அதுமட்டுமன்றி, இராஜினாமாச்செய்த பின்னர் உதுமாலெப்பை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீனின் கட்டுப்பாட்டிலிருப்பதாக அக்கட்சியிலிருந்து பிரிந்து வந்த மாகாண சபை உறுப்பினர் ஒருவரே அதாவுல்லாவுக்கு கூறியதாக உதுமாலெப்பை தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் குறிப்பிட்டார். எனவே, அதிகாரமில்லாத தன்னை விட்டு விட்டு அதிகாரமும் பணமும் இருக்கின்ற ஒருவரை நோக்கி உதுமாலெப்பை ஈர்க்கப்படுகின்றாரோ என்று அதாவுல்லா சந்தேகம் கொள்வதற்கான எல்லா முகாந்திரங்களும் இருந்தன.
இந்தச்சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட சில விடயங்களை அனுமானிக்கக்கூடியதாக இருக்கின்றது. கடந்த சில காலமாக உதுமாலெப்பையின் போக்குகள் தலைவர் அதாவுல்லாவுக்கு பிடிகொடுக்கவில்லை. எனவே, அவரைச்சற்று விட்டுப்பிடிப்போம் என்று எண்ணியிருக்கின்றார். உதுமாலெப்பையை கழற்றி விடும் எண்ணம் அவருக்கு இருந்திருக்காது.
ஆனால், றிசாட் பதியுதீனோடு டீல் பேசி விட்டார் என்று அதாவுல்லாவுக்கு நம்பிக்கையானவர்களே சொல்லிய நிலையில், தன் மீதான நம்பிக்கை ஆட்டம் கண்டு விட்டதாக உதுமாலெப்பையே கூறுகின்றார். எனவே, இந்த அடிப்படையில் நோக்கினால், உதுமாலெப்பைக்கு தனது அதிருப்தியை வெளிப்படுத்த அல்லது ஏதோவொன்றை சாடைமாடையாகச் சொல்ல அதாவுல்லா நினைத்தாலும் நினைத்திருக்கலாம்.
தூரமாக்க முயற்சி
தலைவருக்கும் தேசிய அமைப்பாளருக்குமிடையில் இப்படியானவொரு மனமுறிவு இருக்கின்றதென்று கருதிய யாரோ இதனை இன்னும் பெரிது படுத்தி, பூதாகாரமாக்கி ஒரு விரிசலை ஏற்படுத்துவதற்காக வேலை செய்திருக்கின்றனர் என்று கட்சி முக்கியஸ்தர்கள் கூறுகின்றனர். அதாவுல்லா விரும்பியோ விரும்பாமலோ இது நடந்திருக்கின்றது. ஆனால், உதுமாலெப்பை இராஜினாமாச்செய்வார் என்று தலைவர் நினைத்திருக்கவில்லை. எனவே, அந்தளவுக்கு விடயம் போன பிறகு தான், இந்த பிரசாரங்களெல்லாம் தளபதியை எவ்வாறு தாக்கியுள்ளன என்பது தளபதிக்கு புரிந்திருப்பதாகத் தெரிகின்றது.
2015ஆம் ஆண்டு உதுமாலெப்பையை கட்சி மாறுமாறு அவருக்கு நெருக்கமானவர்கள் அழுத்தம் கொடுத்தனர். அப்போது பல நாட்கள் தொடர்பில்லாமலிருந்த அதாவுல்லா ஊருக்கு திரும்பி மேடையில் உரையாற்றி தெளிவுபடுத்தியதையடுத்து உதுமாலெப்பையின் தடுமாற்றமில்லாது போனது. அது போலவே, அதாவுல்லா, உதுமாலெப்பையின் மனக்காயங்களுக்கு மருந்து தடவும் விதத்தில் பேராளர் மாநாட்டில் உரையாற்றியிருந்தால், அவர் இப்படியான முடிவொன்றை எடுத்திருக்க மாட்டார் என்றே கருத முடிகின்றது.
இராஜினாமாச்செய்த பிறகு, குறிப்பாக தலைவருடனான தொடர்புகளைத் துண்டித்திருந்த உதுமாலெப்பை இரு தினங்களில் வழமைக்குத் திரும்பி ஊருக்கு வந்தார். தமது ஆதரவாளர்களைச் சந்தித்தார். இதற்கிடையில் அவர் ‘அந்தக்கட்சிக்கு போய் விட்டார்’ என்றும், ‘இந்தக்கட்சிக்கு விலை போய் விட்டார்’ என்றும் சிறகு முளைத்த கதைகள் உலா வந்தன. தலைவர் அதாவுல்லாவின் காதுகளுக்கும் அவை எட்டியிருந்தன.
உண்மையில், அதாவுல்லாவின் விசுவாசியான உதுமாலெப்பை அவரையோ கட்சியையோ விட்டு விட்டு வரமாட்டார் என்பதை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் உறுதியாக நம்பினர். அதனால் ஒரு கட்டத்தில் இவரைச்சேர்க்கும் முயற்சிகள் கைவிடப்பட்டதாக அறிய முடிகின்றது. அப்படியாயின், மாற்றுக்கட்சிக்காரர்களே இதை நம்பும் போது அதாவுல்லா நம்பாத விதத்தில் என்ன நடந்தது அல்லது எது தடுத்தது என்ற உதுமாலெப்பை தனக்கு நெருக்கமானவர்களிடம் வினவியிருக்கின்றார்.
எதிர்பாராத சந்திப்பு
இந்நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக தலைவருக்கும் இவருக்குமிடையிலான சந்திப்பொன்று அக்கரைப்பற்றிலுள்ள அதாவுல்லாவின் கிழக்கு வாசல் இல்லத்தில் இடம்பெற்றது. இரு தரப்பு முக்கியஸ்தர்களும் இதில் கலந்து கொண்டு மனம் விட்டுப்பேசியுள்ளனர். இதனையடுத்து கட்சிக்குள்ளிருந்து கொண்டு உதுமாலெப்பை போன்ற சிரேஷ்டமானவர்களுக்கு எதிராகச் செயற்படுவோர் தொடர்பில் ஆராய்வதற்காக ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்த அடிப்படையில் இருவருக்குமிடையிலான உறவு மீளவும் துளிர்க்கத் தொடங்கியிருப்பதாகச் சொல்ல முடியும்.
எல்லா முஸ்லிம் கட்சிகளுக்கிடையிலும் முரண்பாடுகளும் பிளவுகளும் இருக்கின்றன. தேசிய காங்கிரஸிலிருந்தும் முன்னாள் எம்.பி அஸீஸ், துல்ஷான், அமீர்தீன், தவம், சிராஸ் எனப்பலர் பிரிந்து சென்றிருக்கின்றார்கள். ஆனால், பிடிவாதக்கார அரசியல்வாதியான அதாவுல்லா வேறு யார் விடயத்திலும் காட்டாத அக்கறையை உதுமாலெப்பை விடயத்தில் காட்டினார். உதுமாலெப்பை மற்றவர்களை விட கனதியானவர் என்பதும் விசுவாசமானவர் என்பதையும் தலைவர் நன்கறிவார். தமக்கும் உதுமாலெப்பைக்குமிடையிலான மனக்கசப்பை யாரோ பெரிதுபடுத்துகின்றார்கள் என்பதை அவர் உணர்;ந்திருப்பதாகச் சொல்லப்படுகின்றது.
மிக முக்கியமாக உதுமாலெப்பை எந்தக்கட்சிக்கும் இதுவரை விலை போகவில்லை என்பதை அதாவுல்லா பின்னர் அறிந்து கொண்டார். எனவே, வீணாக உதுமாலெப்பையை மாற்றுக்கட்சியிடம் இழப்பது போட்டி அரசியலுக்கு சவாலானதென்பதும் அவர் அறியாததல்ல. எனவே தான் உதுமாலெப்பையை சந்தித்துப்பேச பல வழிகளிலும் முயற்சி செய்தார்.
தளபதியின் நிலைப்பாடு
மறுபுறத்தில், உதுமாலெப்பை கட்சியின் பதவிகளை இராஜினாமாச் செய்திருந்தாலும், கட்சியின் அங்கத்துவத்திலிருந்து வெளியேறவில்லை. அவர் அரசியலிலிருந்து சில காலம் ஓய்வு பெற விரும்பியதாகவும் அறிய முடிகின்றது. ஆனால், உடனடியாக கட்சியை விட்டு வெளியேறியவுடன் வேறு கட்சியில் சேர்ந்தால், அவர் பற்றி முன்சொல்லப்பட்ட கதைகள் உண்மையாகி விடும் என்பதுடன், தேர்தல் இல்லாத காலத்தில் ஒரு கட்சியை விட்டு வெளியேறுவது சிறந்தது என்றாலும், இன்னுமொரு கட்சியில் சேர்வது அனுகூலங்களைக் கொண்டு வராது.
அத்துடன், உள்ளிருந்து தமக்கெதிராக பிரசாரம் செய்வோரின் நடவடிக்கையும் உயர்பீட நியமனமுமே உதுமாலெப்பையின் முடிவுக்கு சொல்லப்படும் காரணமேயன்றி, தலைவருடன் கொள்கை ரீதியாகவோ பதவிக்காகவோ முரண்பட்டதாகத் தெரியவில்லை. எனவே, அதாவுல்லாவிடம் சென்று பேசி, அவர் இப்போதாவது நடவடிக்கை எடுக்கின்றாரா? என்பதைப் பார்ப்பதற்கு உதுமாலெப்பை விரும்பினார். இவ்வாறான காரண காரியங்களின் அடிப்படையில் மேற்படி சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
அதாவுல்லாவின் முகத்தைப்பார்த்து கதைத்தால் ‘விழுந்து விடுவோம்’ என்று உதுமாலெப்பைக்கும் தெரியும் அதாவுல்லாவுக்கும் தெரியும். அந்தளவுக்கு நட்பும் உறவும் அவர்களுக்கிடையில் இருந்தது. அந்த வகையில், இச்சந்திப்பில் ஒரு இணக்கம் காணப்பட்டுள்ளது. உதுமாலெப்பையின் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரிக்க குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், இந்த முரண்பாடுகளுக்கு காரணமானவர் என விரல் நீட்டப்பட்ட உயர்பீட உறுப்பினர் ஒருவர் தற்காலிகமாக அப்பதவியை இராஜினாமாச் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இக்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அவரிடம் வீரகேசரி சார்பாக நான் வினவிய போது, இது அக்கரைப்பற்றிலுள்ள அரசியல் போட்டிக்காக தன்னை வைத்து வேறொரு குழு திட்டம் தீட்டுவதாக தெரிவிக்கின்றார். இது தவிர, வேறு முஸ்லிம் கூட்டமைப்பு போன்ற பல மறைமுகக்காரணங்களும் உள்ளன. இவற்றையெல்லாம் மறைத்துக் கொண்டு தான் தன்னை மட்டும் குற்றவாளிக்கூண்டில் ஏற்றுவதாக அவர் குறிப்பிடுகின்றார்.
அரசியல் சமநிலை
கிழக்கு மாகாண அரசியலில் ஏ.எல்.எம். அதாவுல்லாவின் வகிபாகம் முக்கியமானது. கிழக்கிற்கு தலைமைத்துவம் வேண்டுமென்ற கோஷங்கள் வலுப்பெற்றிருக்கின்ற காலத்தில் கிழக்கிலுள்ள பிரதான முஸ்லிம் கட்சியாக தேசிய காங்கிரஸூம் கட்சித்தலைமையாக அதாவுல்லாவும் திகழ்கின்றனர்.
இந்நிலையில், உரிமை அரசியலில் சில தவறுகளை விட்டிருந்தாலும், அபிவிருத்தி அரசியலில் சாதித்துக்காட்டிய தலைவரும் தளபதியும் ஓரணியில் இருப்பது கட்சிக்கு பலம் சேர்ப்பது மட்டுமன்றி, முஸ்லிம் கட்சிகளுக்கிடையிலான அரசியல் சமநிலைக்கு அவசியமானதுமாகும்.
அந்த வகையில், அதாவுல்லாவும் உதுமாலெப்பையும் சந்தித்துப்பேசியது சிறப்பு! உண்மையில் ஏற்கனவே செய்திருக்க வேண்டிய வேலையை இத்தனை பரபரப்புக்கள், வாதப்பிரதிவாதங்கள், கருத்தாடல்களை அரசியல் களத்தில் ஏற்படுத்தி விட்டு இப்போதே செய்திருக்கின்றார்கள். எல்லாம் சப்பென்று ஆகி விட்டதே என்று சிலருக்கு தோன்றினாலும் கூட, இவ்விருவரும் தமது நிலைப்பாடுகளிலிருந்து இறங்கி வந்தமையும் சந்தித்துப் பேசியமையும் மிகவும் பாராட்டுக்குரியது. சில முஸ்லிம் கட்சிகள் இவ்வாறான இணக்கப்பாடுகளுக்கு வராததன் காரணத்தினாலேயே பல பிளவுகளைச் சந்தித்திருக்கின்றன. இதுவொரு வகையில் பக்குவப்பட்ட அரசியல் முன்மாதிரியாகவும் எடுத்தாளப்படலாம்.
இந்த சந்திப்பையடுத்து இராஜினாமாச்செய்த பதவியை உதுமாலெப்பை மீளப்பொறுப்பேற்க இணங்கி விட்டதாகக் கூறப்பட்ட போதும் கூட, ‘தான் முழுமனதோடு இணக்கம் தெரிவிக்கவில்லையென்றும் தனது முறைப்பாடுகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்காத கட்சியில் பிரதித்தலைவராக இருப்பதில் உடன்பாடில்லை’ என்றும் உதுமாலெப்பை கூறியுள்ளார்.
எனவே, இப்போதைக்கு (அதாவது குழுவின் விசாணைகள் முடிவடையும் வரை) பிரதித்தலைவராக வினைத்திறனாக உதுமாலெப்பை செயற்படுவதற்கு சாத்தியங்கள் குறைவு. அத்துடன், அந்த இடத்திற்கு அதாவுல்லா வேறொருவரை நியமிக்கவும் மாட்டார்.
சுருங்கக்கூறின், உதுமாலெப்பையின் உணர்வுகள் காயப்படுத்தப்பட்டுள்ளன என உணர்ந்து கொண்ட தேசிய காங்கிரஸ் தலைவர் அவரை தமது கட்சியோடே வைத்திருக்க வேண்டுமென்ற நோக்கில், தடுமாறிய நம்பிக்கையை மீள நிலை நிறுத்தியிருக்கின்றார். அதே நேரம், தலைவர் கட்சியின் உள்விவகாரங்களை மீள்வாசிப்புச் செய்வதற்கான இறுதிச் சந்தர்ப்பத்தை உதுமாலெப்பை வழங்கியிருக்கின்றார்.
இந்த நகர்வின் மூலம் யாருக்கு வெற்றி என்று இப்போது சொல்ல முடியாது. ஆனால், ஒப்பீட்டளவில் உதுமாலெப்பையை தக்க வைக்கின்ற விடயத்தில் அதாவுல்லா கொஞ்சம் வெற்றியடைந்துள்ளார் என்றே சொல்ல முடிகின்றது. ஆனால், நியமிக்கப்பட்ட குழுவின் விசாரணையின் முடிவில் எடுக்கப்படும் முடிவையும், அதன் பின் தலைவரால் எடுக்கப்படும் நடவடிக்கைகளையும் பொறுத்தே இந்த வெற்றி நிலையானதா? என்பது தெளிவாகும்.
விசாரணைகள் சரியாக இடம்பெற்று தீர்க்கமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு முழுமையான இணக்கப்பாடு எட்டப்படாவிட்டால், உதுமாலெப்பை மீண்டும் கட்சியின் பொறுப்பு வாய்ந்த பணிகளிலிருந்து தூரமாகும் நிலையேற்படலாம். அதனை முன்னுணர்ந்து அதாவுல்லாவே தற்காப்பு நடவடிக்கையொன்றை எடுக்கமாட்டார் என்றும் உறுதியாகச் சொல்வதற்கில்லை.
பிரிந்து செல்லும் முடிவிலிருந்த கணவனையும் மனைவியையும் ஏதோவொரு அடிப்படையில் இணக்கத்துக்கு கொண்டு வந்து சமரசம் செய்வது சந்தோசமே. ஆயினும், இனி மேல் கொஞ்சம் ஜாக்கிரதையாகவே இருக்க வேண்டும்.’கால்பட்டாலும் குற்றம், கைபட்டாலும் குற்றம்’ என்ற குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படலாம்.
அது போலவே, அதாவுல்லா இனி மேல் உதுமாலெப்பை விடயத்திலும் உதுமாலெப்பை தலைவர் விடயத்திலும் மிகக்கவனமாகவே செயற்பட வேண்டியிருக்கும்.
ஏ.எல்.நிப்றாஸ்
வீரகேசரி - 30.09.2018
No comments:
Post a Comment