சர்வதேசம் ஏற்றுக்கொண்ட அமைச்சாக விளையாட்டுத்துறை அமைச்சு திகழ்கிறது - அமைச்சர் பைஸர் முஸ்தபா - News View

About Us

About Us

Breaking

Wednesday, October 31, 2018

சர்வதேசம் ஏற்றுக்கொண்ட அமைச்சாக விளையாட்டுத்துறை அமைச்சு திகழ்கிறது - அமைச்சர் பைஸர் முஸ்தபா

சர்வதேசம் ஏற்றுக்கொண்ட அமைச்சாக, விளையாட்டுத்துறை அமைச்சு இயங்கிவரும் நிலையில், இதனை முன் வரும் காலங்களிலும் அரசின் மிகச்சிறந்த அமைச்சாக முன்னெடுத்துச் செல்வதற்கான கைங்கரியங்களில் ஈடுபடுவேன் என, விளையாட்டுத்துறை அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்தார்.

புதிய விளையாட்டுத்துறை அமைச்சராக, மீண்டும் பதவியேற்றுள்ள அமைச்சர் பைஸர் முஸ்தபா, அமைச்சுப் பொறுப்புக்களை நேற்று (30) ஏற்றபின், விளையாட்டுத்துறை அமைச்சு அதிகாரிகள் மற்றும் அங்கு கடமை புரியும் ஊழியர்கள் மத்தியில் உரையாற்றும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

அமைச்சர் இச்சிறப்பு நிகழ்வில் மேலும் கருத்துத் தெரிவிக்கும்போது, மலர்ந்துள்ள புதிய அரசாங்கத்தில் மீண்டும் என்னை மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக ஜனாதிபதி நியமித்துள்ளார். 
இதற்கு நான் ஜனாதிபதிக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன். காரணம், மக்களுக்கு அதி விசால சேவைகளைச் செய்யவேண்டிய கட்டாயக் கடமைப்பாட்டில் நான் உள்ளேன். இதனால்தான், ஜனாதிபதி மீண்டும் எனக்கு பொறுப்புவாய்ந்த இவ்விரு அமைச்சுக்களையும் மீண்டும் என்னிடம் ஒப்படைத்துள்ளார். 

ஜனாதிபதி என்மீது அதீத நம்பிக்கை வைத்துள்ளார். இதனால், மீண்டும் இப்பொறுப்பை என்னிடம் ஒப்படைத்துள்ளார். எனவே, இப்பொறுப்பை, விசுவாசத்துடன் தொடர்ந்தும் பேணிப்பாதுகாத்து, எனது கடமைகளை மக்களுக்காக சரிவர நிறைவேற்றுவேன். 

விளையாட்டுத்துறை அமைச்சுப் பிரிவுகளில் கடமை புரியும் அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும், நான் இந்த அமைச்சைப் பொறுப்பேற்ற காலத்திலிருந்து இதுவரையிலும் மிகத்திறன்மிக்கதான சேவைகளைப் புரிந்திருக்கின்றார்கள். இதற்கு நான் அவர்களுக்கு நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன். 
இதேபோன்று, தொடர்ந்தும் அனைவரினதும் ஒத்துழைப்புக்களும் உதவிகளும் தேவை. இதுதான் இன்று நமக்குள்ள தேவை. இதனைத்தான் நான் உங்களிடமிருந்தும் எதிர்பார்ப்பது. எங்களுக்கென்று ஒரு கடமை உணர்ச்சி உள்ளது. இதனை எல்லோரும் பகிர்ந்து கொள்ள வேண்டும். 

நான் என்பதை, எமது உள்ளங்களிலிருந்து அகற்றி, நாம் என்ற வட்டத்திற்குள் நாம் நுளைய வேண்டும். அப்போதுதான், வாழ்க்கையில் வெற்றிபெற முடியும். இதனை, நானும், நீங்களும், அனைவரும் மனதில் நிறுத்தி நடப்பதற்கு, இன்றிலிருந்து உறுதிப்பாட்டோடு, நாம் எம்மை அர்ப்பணம் செய்வோம் என்றார். 

மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் கமல் பத்மசிறி உள்ளிட்ட அமைச்சின் அதிகாரிகள் பலரும், இச்சிறப்பு நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

ஐ. ஏ. காதிர் கான் 

No comments:

Post a Comment