மட்டக்களப்பு மாவட்டத்தின், கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபைக்குற்பட்ட மீராவோடை மேற்கு, கிழக்கு, பதுரியா-மாஞ்சோலை உள்ளிட்ட கிராமங்கள் தெரு மின் விளக்குகள் இல்லாமையால் சுமார் இரண்டு மாதங்களுக்கும் மேலாக இரவு நேரங்களில் இருள் சூழ்ந்துள்ள நிலையினை அவதானிக்க முடிகின்றது.
இதனால் சிறுவர்கள், பெண்கள், வயோதிபர்கள் எனப்பலரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். இது தொடர்பில் தங்களின் சபை உறுப்பினர்கள் பலர் எடுத்துக்கூறியும் நீங்கள் அதனைத்திருத்தித் தரவில்லை. அரசியலாக நீங்கள் மக்கள் சேவையைப் பார்த்தாலும் பொது மக்கள் சார்பில் கிராம அபிவிருத்திச்சங்கம் ஒன்றின் உப செயலாளர் என்ற முறையிலும் உங்களிடமும் சபைச்செயலாளரிடமும் பலமுறை இப்பிரச்சினை தொடர்பில் எடுத்துக்கூறியும் தங்களால் எவ்வித நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை. கடைசியாக கடந்த 01.10.2018ம் திகதி திங்கட்கிழமை திருத்தித்தருவதாக வாக்குறுதி வழங்கினீர்கள்.
ஆனால், இதுவரை தங்களால் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. மேலும், இதற்கொரு காரணம் சொல்கின்றீர்கள். வாகனமில்லை பழுது என்று. இவ்வாறு கூறி இரண்டு மாதங்களாகியும் உங்களால் வாகனத்தைத் திருத்திக்கொள்ள முடியாமை கவலையளிக்கின்றது.
மேலும், சபையில் தவிசாளர், செயலாளர் என உள்ளடங்களாக நீங்கள் இரண்டு மாத காலமாகியும் திருத்திக்கொண்டிருக்கும் வாகனத்தையும் சேர்த்து மூன்றுள்ளது. ஒரு நாளைக்காவது இவ்வீதி மின் விளக்குகளை சரி பாக்க உங்கள் வாகனம் வேண்டாம். செயலாளர் பயன்படுத்தும் வாகனத்தையாவது வழங்கி மக்கள் பிரச்சினைக்கு உதவுங்கள். உங்களுக்கு ஒரு விடயத்தை ஞாபகமூட்டுகின்றேன்.
அதிக வாக்குகள் எடுத்தும் மேலதிக போனஸ் ஆசனம் பெற பாரிய மக்கள் சக்தியாக இருந்தும், பல வாய்ப்புகள் கதவைத்தட்டியும் தங்களுக்கு தவிசாளர் பதவி வழங்க வேண்டுமென்பதற்காக விட்டுக்கொடுப்புச் செய்த முன்னாள் உதவித்தவிசாளர் ஏ.எம்.நெளபர் சபையின் ஐந்தாவது அமர்வில் இவ்வீதி மின் விளக்குகள் திருத்தம் பற்றியும் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றி தெளிவாகக் கூறினார்கள். நீங்கள் ஒரு நன்றி, மரியாதைக்காவது அதனை விரைவாகச் செய்வீர்கள் என நாம் எதிர்பார்த்தோம். ஒன்றும் நடக்கவில்லை.
நீங்கள் எமது கிராமங்களுக்கு இரவோடு இரவாக விஜயம் செய்யுங்கள். உங்கள் கட்சியின் உறுப்பினர் நெளபரின் வீதியை வந்து பாருங்கள். இது உங்கள் மீதுள்ள குரோதமே அல்லது காழ்ப்புணர்வில்லை. மக்கள் நலன்கருதி மாத்திரமே எழுதுகின்றேன்.
இதனை தாங்கள் சிறிய விடயமாகவேக் கருதுவீர்கள் என நம்புகின்றேன். இதற்குப்பிறகும் நீங்கள் இதனைத் திருத்தித் தரவில்லையென்றால், மின் கம்பங்களிலுள்ள லயிட்செட்டயாவது கழற்றி விற்று சபைக்கு வருமானத்தைத் தேடிக்கொள்ளுங்கள்.
எம்.ரீ.எம்.பாரிஸ்
No comments:
Post a Comment