பயங்கரவாதம் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட பின்னர் முதலீடுகளை பெற்றுக்கொள்வதற்காக வெளிநாட்டு கடன் பாரியளவில் பெற்றதன் காரணமாக தற்பொழுது உலகப் பொருளாதார நெருக்கடியை இலங்கை எதிர்கொண்டிருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கடனுக்கு பதிலாக முதலீட்டை தெரிவு செய்த நாடுகளுக்கு உலக பொருளாதார நெருக்கடியின் தாக்கம் இடம்பெறவில்லை. தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையில் இருந்து மீள்வதற்கு குறுகிய மற்றும் நீண்டகால செயற்பாடுகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.
புத்தளம் வாத்தவில்ல என்ற இடத்தில் புதிய பொலிஸ் நிலையம் ஒன்றை திறந்து வைக்கும் நிகழ்வில் பிரமதர் கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் பிரதமர் மேலும் தெரிவிக்கையில், 1977ம் ஆண்டு ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் ஆரம்பித்த திறந்த பொருளாதார வேலைத்திட்டத்தின் கீழ் வெளிநாட்டு முதலீட்டை பெற்று வெளிநாட்டு நாணயத்தை நாட்டுக்குள் கொண்டு வருவதற்கு தேவையான திட்டம் அப்போது வகுக்கப்பட்டது என்றும் பிரதமர் கூறினார்.
இந்தத் திட்டத்தின் கீழ் 200 ஆடை தொழிற்சாலைகள் ஆரம்பிக்கப்பட்டன. கடற்றொழில் மற்றும் சுற்றுலா தொழில்துறை, இறப்பர் தயாரிப்பு, தேயிலை உற்பத்தி ஆகிய துறைகள் மேம்படுத்தப்பட்டன. கைத்தொழில் மற்றும் முதலீட்டு வலயங்கள் நாட்டில் ஆரம்பிக்கப்பட்டன. இவ்வாறான செயற்பாடுகள் மூலம் வெளிநாட்டு வருமானத்தை நாடு பெற முடிந்ததாகவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
இருப்பினும் பயங்கரவாதம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர் பதவியில் இருந்த அரசாங்கம் வெளிநாட்டு முதலீட்பெற்றுக்கொள்வதற்கு பதிலாக வெளிநாட்டு கடனை பாரியளவில் பெற்றுக்கொண்டு செயற்பட்டது. அதேபோன்று கடனை பெற்றுக்கொள்ளும் பொழுது ஏற்படக் கூடிய தேவையற்ற பெறுபேறுகளை எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு சுட்டிக்காட்டியதாக பிரதமர் கூறினார்.
கடனை பெற்றுக்கொள்ள வேண்டாம் என்றும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இருப்பினும் முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர் முடிந்தவரையில் கடனை பெற்றுக்கொள்ளுமாறு ஆலோசனை வழங்கியதாக பிரதமர் தெரிவித்தார்.
இதற்கமைவாக 2013 மற்றும் 2014ம் வருடங்களில் பாரியளவில் பெறப்பட்டிருந்த கடனின் தவணை கொடுப்பனவு மற்றும் வட்டியை செலுத்துவதற்கு நாட்டின் வருமானம் போதுமானதாக இருக்கவில்லை. 2015 ஆம் ஆண்டில் அரச நிர்வாகத்தை பொறுப்போற்ற போது இந்த முழுக் கடனையும் திருப்பி செலுத்தும் சவாலையும் பொறுப்பேற்றதாக பிரதமர் தெரிவித்தார்.
நாட்டின் வருமானம் படிப்படியாக அதிகரிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டளவில் இந்த கடனை செலுத்தி அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் பிரதி பலன்களை பொதுமக்களுக்கு பெற்றுக்கொடுப்பதற்கு திட்டமிட்டதாகவும் பிரதமர் கூறினார்.
இவ்வாறான நிலையில் தற்போது உலகப் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டியிருப்பதாகவும் குறிப்பிட்டார். நெருக்கடியை வெற்றி கொள்ளக்கூடிய ஒரே வழி ஏற்றுமதியை அதிகரித்து, வெளிநாட்டு நாணயத்தை நாட்டுக்குள் கொண்டு வருவதே ஆகும் என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
No comments:
Post a Comment