என் மீதுள்ள மக்கள் செல்வாக்கை இல்லாமல் செய்யவே முன்னாள் தவிசாளர் முயற்சிக்கிறார் - பிரதேச சபை உறுப்பினர் ஐ.எல்.பதுர்தீன் குற்றச்சாட்டு - News View

About Us

About Us

Breaking

Monday, October 1, 2018

என் மீதுள்ள மக்கள் செல்வாக்கை இல்லாமல் செய்யவே முன்னாள் தவிசாளர் முயற்சிக்கிறார் - பிரதேச சபை உறுப்பினர் ஐ.எல்.பதுர்தீன் குற்றச்சாட்டு

மீராவோடை பொதுச்சந்தை விடயத்தில் என்னையும் இழுத்து விட்டு எனக்கெதிராக அதிருப்தியை ஏற்படுத்துவதன் மூலம் எனக்கிருக்கும் மக்கள் செல்வாக்கை இல்லாமல் செய்யலாமென பகல் கனவு காண்கிறார் முன்னாள் தவிசாளர் கே.பி.எஸ்.ஹமீட் என மட்டக்களப்பு மாவட்டத்தின், கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் ஐ.எல்.பதுர்தீன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, கடந்த தேர்தலில் தோல்வி கண்ட முன்னாள் தவிசாளர், தான் இழந்த செல்வாக்கை மீண்டும் நிலை நிறுத்திக் கொள்ளலாம் என கனவில் பள்ளிவாயலை வைத்து அநாகரீகமான அரசியலைச் செய்து வருகிறார். இது தவிர்க்கப்பட வேண்டும். பள்ளிவாயல் புனிதமானது. அதில் சாக்கடை அரசியலை மேற்கொள்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. பள்ளிவாயலின் கண்ணியம் பாதுகாக்கப்பட வேண்டும்.

அத்துடன், பள்ளிவாயலால் முன்னெடுக்கப்படும் எந்த மக்கள் நலத்திட்டமாக இருந்தாலும் அரசியல் வேறுபாடுகளுக்கப்பால் ஆதரவு தெரிவிப்பவன் நான். அதே நிலைப்பாட்டிலேயே தான் மீராவோடை பொதுச்சந்தையில் நடைபெற்று வரும் வாராந்த சந்தையையும் நோக்குகிறேன்.

இச்சந்தை மூலம் இப்பிரதேச மக்கள் நன்மையடைகின்றனர். மக்கள் நலனே எனக்கு முக்கியம் அதற்காகவே அரசியலுக்கு வந்தேன். இந்த மீராவோடை சந்தை விவகாரம் பிரதேச சபை அமர்வில் விவாதத்திற்கு வந்த வேளை, இது விடயத்தில் எந்தவித கருத்துக்களையும் நான் தெரிவிக்கவில்லை. இது பிரதேசவாதத்தை உண்டு பண்ணலாம் என்ற நோக்கில் ஊர் ஒற்றுமை பாதுகாக்கப்பட வேண்டுமென்பதற்காக பிரதேச சபை இதில் தலையிடக்கூடாது என்ற நிலைப்பாட்டிலேயே அங்கே தீர்மானமும் மேற்கொள்ளப்பட்டது.

அதே நேரம் சபை அமர்வில் நான் மீராவோடை வாராந்த சந்தைக் கெதிராக கருத்து வெளியிட்டதாகவும், இதற்குத் தடையாக இருப்பதாகவும் முன்னாள் தவிசாளரும் தற்போதைய பள்ளிவாயல் தலைவருமான கே.பி.எஸ்.ஹமீத் என் மீது அபாண்டத்தை சுமத்தி எனக்கிருக்கும் மக்கள் செல்வாக்கை இல்லாமலாக்க முயற்சிக்கிறார்.

என்னை நம்பி எனக்கு வாக்களித்த இப்பிரதேச மக்களுக்கு ஏதாவது உதவிகளைச் செய்ய வேண்டுமெனும் நன்னோக்கிலேயே செயற்பட்டு வருகின்றேன். அதே நேரம் மக்களுக்கு நல்லது யார் செய்தாலும் அதனை ஆதரிக்கும் ஒருவனாகவே நான் இருப்பேன். மாற்றமாக, அரசியலுக்காக இவ்வாறான செயற்பாடுகள் எதனையும் நான் செய்யமாட்டேன்.

தலைவர் இவ்வாறான செயற்பாடுகளைத் தவிர்ந்து கொள்ள வேண்டும். பள்ளிவாயலின் புனிதத்தையும், அதன் பொறுப்பிலுள்ளவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்கத்தையும் கடைப்பிடிக்க வேண்டும். மாறாக, இவ்வாறான அபாண்டங்களை சுமத்தி பாவத்தை தேடிக்கொள்ள முயலக்கூடாது.

பள்ளிவாயலை பள்ளிவாயலாகவும் அரசியலை அரசியலாகவும் செய்ய வேண்டும். பள்ளிவாயலுக்குள் அரசியலைக் கொண்டு சென்றால், அதன் புனிதம் இல்லாமல் போய் விடும். எனவே, இவைகளைக் கருத்திற் கொண்டு செயற்பட வேண்டுமென கேட்டுக் கொள்கின்றேன் என கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் ஐ.எல்.பதுர்தீன் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment