தங்காலை பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த செப்டெம்பர் 23 ஆம் திகதி தங்காலை, வெலிஆர நெட்டொல்பிட்டிய பகுதியில் குறித்த துப்பாக்கிச்சூடு சம்பவம் இடம்பெற்றிருந்தது.
குறித்த கொலைச் சம்பவத்தை திட்டமிடுவதற்கு உதவி ஒத்தாசை புரிந்த குற்றத்திற்காக தேடப்பட்டு வந்த சந்தேக நபர் மற்றும் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு கொலை புரிந்தமை தொடர்பான சந்தேகநபர்கள் இருவரில் ஒருவர் உள்ளிட்ட இரு சந்தேக நபர்களை பொலிஸார் இன்று (03) காலை கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர்கள் இருவரும் தங்காலை பஸ் தரிப்பிடத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
இக்கொலைக்கு உதவி ஒத்தாசை புரிந்தமை தொடர்பில் 41 வயதான நெட்டொல்பிட்டியவைச் சேர்ந்த சந்தேக நபர் ஒருவரும், விகமுவ, ரன்ன பிரதேசத்தைச் சேர்ந்த 49 வயதான சந்தேகநபர் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபரிடம் மேற்கொண்ட விசாரணைகளில் இருந்து கொலைக்கு பயன்படுத்தப்பட்ட இரத்தம் தோய்ந்த கத்தி ஒன்றும், துப்பாக்கிச் சூடு நடத்தும் போது பயன்படுத்தப்பட்ட முழு முகத்தையும் மூடும் தலைக்கவசம் ஒன்றும் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவத்தில் நெட்டொல்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த, 42 வயதான வர்த்தகர் ஒருவர் பலியாகினார்.
அப்பகுதியிலுள்ள, வாகன சேவை மையம் ஒன்றின் உரிமையாளரான வர்த்தகர், அங்கு பணிபுரிந்து கொண்டிருந்த வேளையில், மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு விட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றதாக பொலிசார் தெரிவித்தனர். படுகாயமடைந்த குறித்த நபர், தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்தார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் இன்று (03) தங்காலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தங்காலை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
No comments:
Post a Comment