கொழும்பில் சேகரிக்கப்படும் குப்பைகளைப் புத்தளம் அறுவக்காடு பிரதேசத்தில் கொட்டும் அரசாங்கத்தின் திட்டத்திற்கு எதிராக புத்தளம் கொழும்பு முகத்திடலில் நேற்று திங்கட்கிழமை (01) மூன்றாவது நாளாகவும் சத்தியாக்கிரகப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
Puttalam Human Development (சஹிரியன்ஸ் 2002) அமைப்பினரோடு இணைந்து புத்தளத்தில் இயங்கும் ஏனைய அமைப்பினரும் கடந்த சனிக்கிழமை (29) ஆரம்பித்த அடையாள உண்ணாவிரதப் போராட்டம் பின்னர் தொடர் சத்தியாக்கிரக போராட்டமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
புத்தளத்தில் வாழும் மூவின மக்களும், சமயத் தலைவர்களும், கட்சி வேறுபாடுகள் இன்றி அரசியல் பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள் என இனம், மதம், பிரதேசம் எனப் பாகுபாடின்றி அனைவரும் ஒன்றிணைந்து பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட சுலோகங்களை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேவேளை, உலக சிறுவர் தினத்தையொட்டி பாடசாலை மாணவர்களும், சிறுவர்களும் நேற்று திங்கட்கிழமை காலை சத்தியாக்கிரக போராட்டம் இடம்பெறும் இடத்திற்கு வருகை தந்து குப்பைக்கு எதிரான சுலோகங்களை ஏந்தியவாறு, கோஷங்களையும் எழுப்பியிருந்தனர்.
கொழும்பு பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை இம் மாதம் முதல் புத்தளம் அறுவக்காடு பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கழிவகற்றும் பிரிவுக்குக் கொண்டுவரப்படவுள்ளதாக மேல் மாகாணம் மற்றும் ெபருநகர அபிவிருத்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அரசாங்கம் முன்னெடுக்கவுள்ள குறித்த திட்டத்தால் சுற்றுப்புறச் சூழலுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவது மாத்திரமின்றி, உப்பு உற்பத்தி, மீன்பிடி தொழில், விவசாயம் உள்ளிட்ட மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதுடன், நாட்டில் முக்கிய வனமாக கருதப்படுகின்ற வில்பத்து தேசிய சரணாலயத்திற்கும் இத்திட்டம் பெரும் அச்சுறுத்தலாகவும் அமையவுள்ளது.
எனவே, பொது மக்களுக்கும் , சூழலுக்கும் பெரும் தீங்கு விளைவிக்க ௯டிய இந்த திட்டத்தை உடனடியாக கைவிடுமாறும், மாற்று வழியைக் கையாளுமாறும் கோரியே புத்தளத்தில் வாழும் மூவின மக்களும் ஒன்றிைணந்து குறித்த சத்தியாக்கிரக போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
கொழும்பு குப்பைகளைப் புத்தளத்தில் கொட்டும் அரசாங்கத்தின் தீர்மானத்தை உடனடியாக கைவிட வேண்டும் எனவும் இல்லாது போனால் மூவின மக்களையும் ஒன்றிணைத்து தொடர்ச்சியாக சத்தியாக்கிரகப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் ஏற்பாட்டாளர்கள் குறிப்பிட்டனர்.
No comments:
Post a Comment