இதற்கு முன்னதான பல்வேறு மண்சரிவு அனரத்தங்களின்போதும் மலைநாட்டு புதிய கிராமங்கள் அமைச்சின் ஊடாக நாம் வீடுகளைப் பெற்றுக் கொடுத்துள்ளோம். இப்போது இடர் முகாமைத்துவ அமைச்சின் ஊடாகவும் வீடமைப்பு திட்டத்தினை அறிமுகப்படுத்துகின்றோம்.
அதற்கு தேவையான காரணிகளைப் பெற்றுக் கொடுக்கவும் அந்த நிலத்தை தயார் செய்யவும் எமது அமைச்சினால் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.
தோட்டப் பகுதிகளுக்குள் அரச நிறுவனங்களைக் கொண்டு சேவையாற்றுவதற்கு இருந்த தடையை பாராளுமன்ற சட்டங்களின் ஊடாக நீக்கியுள்ளோம் என்று நுவரலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மலைநாட்டு புதிய கிராமங்கள் உள்கட்டமைப்பு சமுதாய அபிவிருத்தி அமைச்சின் இணைப்பு உறுப்பினருமான எம்.திலகராஜ் தெரிவித்துள்ளார்.
கொத்மலை பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட ரம்பொடை, வெதமுல்லை, லில்லிஸ்லேண்ட் தோட்டத்தில் மண் சரிவு அபாயத்துக்கு உட்பட்ட 105 குடும்பங்களுக்கான தனி வீடுகள் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று (30) கொத்மலை பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்றது.
இடர் முகாமைத்துவ அமைச்சோடு மலைநாட்டு புதிய கிராமங்கள் அமைச்சும் இணைந்து முன்னெடுக்கும் இந்த திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் நுவரலியா மாவட்ட செயலாளர் ரோஹன புஸ்பகுமார, மத்திய மாகாண சபை உறுப்பினர்கள் சோ. ஶ்ரீதரன், ஆர்.இராஜாராம், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிறுவன தலைவர் வீ.புத்திரசிகாமணி, கொத்மலை பிரதேச சபை உறுப்பினர்கள், அரசியல் தொழிற்சங்க முக்கியத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
லில்லிஸ்லேண்ட் தோட்டத்தில் 2015 ஆம் ஆண்டு மண்சரிவு ஆபத்தினால் பாதிப்புற்ற 20 குடும்பங்களுக்கு எமது அமைச்சினால் உடனடியாக 20 தனிவீடுகள் அமைத்து “ குறிஞ்சித்தென்னவன புரம் “ எனும் பெயருடன் வழங்கப்பட்டது.
இன்று அதே வீடமைப்புத் திட்டத்திற்கு அருகாமையில் மேலதிக 105 வீடுகளை அமைப்பதற்கு இடர் முகாமைத்துவ அமைச்சுடன் இணைந்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம்.
சுமார் மூன்று மாதங்களுக்கு முன்னதாக இந்த 105 குடும்பங்களும் தற்காலிக முகாமாக செயற்பட்ட ரம்பொடை இந்து கல்லூரியில் நிர்க்கதியாகி நின்றபோது இடர்முகாமைத்துவ ராஜாங்க அமைச்சர் பாலித்த ரங்கே பண்டாரவுடன் இணைந்து நானும் மாகாண சபை உறுப்பினர் ஶ்ரீதரனும் வருகை தந்து உடனடி உதவிகளைப் பெற்றுக் கொடுத்ததோடு அன்று வழங்கிய வாக்குறுதிகளின்படி இன்று தனி வீடுகளைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.
வீட்டுக்கான செலவினை தலா பன்னிரண்டு லட்சம் இடர் முகாமைத்துவ அமைச்சு பெற்றுக் கொடுக்கும் அதேவேளை காணி தயார்படுத்தல் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளுக்காக தலா இரண்டு லட்சம் ரூபாவை அமைச்சர் பழனி திகாம்பரம் பெற்றுக் கொடுத்துள்ளார்.
குறித்த வீட்டினைப் பெறும் பயனாளிக்கு காணி உரிமையானதாக இருக்கவேண்டும் என்ற நிபந்தனை அடிப்படையிலேயே இந்த திட்டம் கொண்டுவரப்படுகின்றது. இத்தகைய காணி உரிமையை தமிழ் முற்போக்கு கூட்டணி தமது அரசியல் பலத்தின் ஊடாக வெற்றிகொண்டுள்ளதால் நாம் இலகுவாக இடர் முகாமைத்துவ அமைச்சின் வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த முடிகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment