தேசிய காங்கிரஸ் கட்சியிலிருந்து உதுமாலெப்பை பிரிந்து செல்வதற்கும் அவரது எதிர்கால அரசியல் நடவடிக்கைகளை பிரிதொரு கட்சியில் இணைந்து முன்னெடுப்பதற்கும் அவருக்கு உரிமையுள்ளது. அவரது எதிர்கால அரசியல் நகர்வுகளுக்கு அவரினால் தற்போது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் சிறுபிள்ளைத்தனமானது எனவும், அதற்காகவே அவர் தம்மீது வீண் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகிறார் எனவும் கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.சுபைர் தெரிவித்தார்.
முன்னாள் அமைச்சர் சுபைர் தொடர்பாக பொய்யான தகவல்களை வெளியிட வேண்டிய எந்தத்தேவையும் இல்லையெனும் தலைப்பில் உதுமாலெப்பையினால் வெளியிடப்பட்ட செய்தி தொடர்பில் விளக்கமளிக்கும் போதே அவர் மேற்கன்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் (02.10.2018) ஊடகங்களுக்கு கருத்துத்தெரிவிக்கையில், முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சர் உதுமாலெப்பை தேசிய காங்கிரஸ் கட்சியில் தான் வகித்த பதவிகளை அண்மையில் துறந்து விட்டு, தனது தொலைபேசியினையும் நிறுத்தி வைத்திருந்தார். முஸ்லிம் கூட்டமைப்பு தொடர்பில் தலைமைக்கு அழுத்தம் கொடுக்கவே தனது பதவிகளைத் துறந்தேன் எனவும் அப்போது அவர் அறிக்கை விட்டிருந்தார்.
பதவிகளைத்துறந்து தொலைபேசியினையும் நிறுத்தி வைத்திருந்த உதுமா லெப்பையை அவரது கட்சி ஆதரவாளர்கள் வலை விரித்து தேடிய போது, அவரது நண்பன் என்ற வகையில் உதுமாலெப்பையின் இராஜினமாத் தொடர்பிலும் அவரது அரசியல் நகர்வுகள் குறித்தும் தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் பொருட்டு நானும் அவரைத்தேடினேன். அப்போது உதுமாலெப்பை கொழும்பிலிருப்பதாகவும் அறிந்து கொண்டேன்.
இது இவ்வாறிருக்க தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட உதுமாலெப்பை, தான் 30 மில்லியன் பணம் பெற்றதாக முன்னாள் அமைச்சர் சுபைர் தலைவர் அதாஉல்லாவிடம் கூறியதாகவும், தலைவர் தன்னிடம் தெரிவித்ததாகவும் கூறினார்.
உதுமாலெப்பையின் கூற்றை மறுத்த நான், உதுமாலெப்பை நேசிக்கின்ற தலைவர் அதாவுல்லாஹ்வால் சுபையிர் அப்படி பேசியதாக எங்காவது கூறச்சொல்லட்டும், நான் அழிவுச்சத்தியம் செய்வதற்கும் தயாராக இருக்கிறேன் எனப்பகிரங்க அழைப்பு விடுத்தேன்.
இதற்கு முறையாக பதில் வழங்க முடியாத உதுமாலெப்பை இப்போது தேசிய காங்கிரசின் அட்டாளைச்சேனை முக்கியஸ்தர்கள் இருவரிடம் தான் அதாஉல்லா அவ்வாறு கூறினார் என்கிறார். இப்படி உதுமா லெப்பை சிறுபிள்ளைத்தனமாக அரசியல் செய்வார் என நான் ஒரு போதும் நினைக்கவில்லை. இப்போதும் மிகத்தெளிவாக கூறுகின்றேன் உதுமாலெப்பை கூறுவது போன்று நான் யாரிடமும் கூறவில்லை.
உதுமாலெப்பைக்கு நெருக்கமான அவர் மிகவும் நேசிக்கின்ற தலைவர் அதாஉல்லாவினால் எங்காவது ஒரு சந்தர்ப்பத்தில் அவ்வாறு கூறத்தான் முடியுமா? நான் கூறாத ஒரு விடயத்தினை எப்படிக்கூறுவது. அதாஉல்லாவை மக்கள் மத்தியில் பிழையாக சித்தரிப்பதற்கு உதுமாலெப்பை போட்ட நாடகமே இது என நினைக்கின்றேன்.
உதுமாலெப்பை தனது தொலைபேசியினை சில தினங்கள் நிறுத்தி விட்டு, இருந்த போது அவரைத்தொடர்பு கொள்ள முயற்சித்தும் பலனளிக்கவில்லை. அதன் பின்னர் அவரைத்தொடர்பு கொள்ளும் பொருட்டு, அவரது பேரன் முறையான ஒருவருக்கு அழைப்பினை ஏற்படுத்தினேன். அவரது தொலைபேசியும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
அதன் பின்னர் சில நிமிடங்களில் குறித்த நபர் எனக்கு அழைப்பினை ஏற்படுத்தினார். நான் முன்னாள் அமைச்சர் சுபைர் என என்னை அறிமுகம் செய்து உதுமாலெப்பை தொடர்பில் வினவினேன். அப்போது அவரின் பதிலில் அதிர்ச்சியான சம்பவங்களும் எனக்கு கிடைத்தது.
இது இவ்வாறிருக்க, தொலைக்காட்சி நிகழ்ச்சின் போது உதுமாலெப்பை குறிப்பிடுகையில், அவருடைய காரியாலயத்தில் வேலை செய்கின்ற பொடியனிடம் நான் தொடர்பு கொண்டு அவர் தொடர்பில் வினவியதாகத் தெரிவித்தார். அதன் பின்னர் இப்போது ஊடக அறிக்கையொன்றில் அவரது குடும்ப உறவினருடன் தொடர்பு கொண்டு வினவியதாகக் குறிப்பிடுகிறார்.
உதுமாலெப்பை இப்போது சிறு பிள்ளைக்கு கதை சொல்வது போன்று பேசுகிறார். அவரது கூற்று முன்னுக்குப்பின் முரணாகக் காணப்படுகிறது. உதுமாலெப்பையின் உறவினரே எனக்கு அழைப்பெடுத்து தகவல் வழங்கினார் என்பதனை அவர் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அல்லது சிறுபிள்ளை கதை கேட்டு அறிக்கை விடுவதனைக் கைவிட வேண்டும். இந்த விடயத்திலும் உதுமாலெப்பை என் மீது திட்டமிட்டு வீண் பழி சுமத்துகிறார்.
உதுமாலெப்பை புதுக்கடையில் சிரேஸ்ட ஊடகவியலாளர்களைச் சந்தித்த போது, தனது இராஜினாமா தொடர்பிலும், தனது எதிர்கால அரசியல் தொடர்பிலும் சற்று சூசகமாக பேசியிருக்கிறார். குறித்த ஊடகவியலாளர்கள் அதனைச் செய்தியாகவும் வெளியிட்டிருந்தனர். உதுமாலெப்பை தனது நிலைப்பாட்டினை அவர்களிடத்தில் கூறவில்லையென்றால், எவ்வாறு அவர்கள் செய்தியினை வெளியிடுவது.
இது தொடர்பில் அந்த தொலைக்காட்சி நிகழ்ச்சின் போது, ஊடகவியலாளர்களிடத்தில் நான் எதுவும் பேசவில்லை. இந்த நாட்டில் டீ குடிப்பதற்கு சுதந்திரமில்லையென்றும், உண்மைக்குப் புறம்பான செய்திகளை ஊடகவியலாளர்கள் வெளியிட்டுள்ளனர் என்றும் உதுமாலெப்பை ஊடகவியலாளர்களை தரக்குறைவாகப்பேசித் திட்டித்தீர்த்தார்.
குறித்த நிகழ்ச்சியின் போது உதுமாலெப்பையின் முன்னிலையில் அந்த ஊடகவியலாளர் ஒருவரின் குரல்வழி ஒலிப்பதிவு காண்பிக்கப்பட்டது. இதன் போது, உதுமாலெப்பை தெரிவித்தவற்றையே நாங்கள் பிரசுரித்தோம் என்றும் அது தொடர்பில் கஃபதுல்லா சென்று சத்தியம் செய்யவும் தயார் என்றும் அந்த ஊடகவியலாளர் குறிப்பிட்டார். இந்த நேரத்தில் உதுமாலெப்பை மௌனியாகி விட்டார். உதுமாலெப்பை பொய்க்குற்றச்சாட்டுக்களைச் சுமத்துகிறார் என்பதும் அன்றைய நிகழ்ச்சியின் போது தெட்டத்தெளிவாகியது.
உதுமாலெப்பை சுகவீனமுற்றிருந்த போது அவரை நான் பார்க்கவில்லையென்றும், பாலமுனைப் பிரகடனத்தின் போது அவர் கூறாததனை நான் கூறியதாகவும் என் மீது குற்றஞ்சுமத்தியுள்ளார். உதுமாலெப்பை சுகவீனமடைந்து வைத்தியசாலையிலிருந்த போது நான் மட்டக்களப்பில் இருந்ததனால் அவரைப் பார்க்கக் கிடைக்கவில்லை.
ஆனால், தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவரிடம் சுகம் விசாரித்ததனை அவர் இப்போது மறந்து பேசுகிறார். உதுமாலெப்பை ஒரு சந்தர்ப்பவாதியாக மாறுவார் என நான் ஒரு போதும் நினைக்கவில்லை. உதுமாலெப்பையினை அவரது கொழும்பு வீட்டில் சந்தித்து அவரது சுகம் விசாரிக்க முயற்சித்தும் அது பலனளிக்கவில்லை. அவரது கொழும்பு வீட்டுக்குச் சென்று அவரைப் பார்ப்பதற்கும் அவர் விரும்பவில்லை.
அப்படியிருக்க உதுமாலெப்பையை எங்கு சென்று பார்ப்பது. கொழும்பிலே நிகழ்வொன்றில் கலந்து கொள்ளும் பொருட்டு, நானும் உதுமாலெப்பையும் எனது வாகனத்தில் இரண்டு தடவைகள் சென்றிருக்கின்றோம். அவரை நான் அவரது கொழும்பு வீட்டுக்கு கொண்டு விடுவதற்கு முயற்சித்தும் அவர் அதனை விரும்பாது வீதியிலே இறங்கி நடந்து சென்றார். உதுமாலெப்பையின் இவ்வாறான செயற்பாடு குறித்து நான் அதிர்ச்சியடைந்தேன். இப்படியான உதுமாலெப்பை இன்று நேர்மை பற்றிப்பேச விளைகிறார்.
தேசிய காங்கிரசின் பாலமுனைப் பிரகடனத்தின் போது உதுமாலெப்பை கூறாத விடயத்தினை நான் கூறியதாக என் மீது குற்றச்சாட்டொன்றினை அவர் முன்வைத்துள்ளார். பாலமுனைப் பிரகடனத்தில் கலந்து கொள்ளுமாறு அந்தக்கட்சியினால் பொதுவான அழைப்பொன்று எனக்குக் கிடைத்தது. அதன் நிமிர்த்தம் உதுமாலெப்பையை தொடர்பு கொண்டு குறித்த நிகழ்வு தொடர்பில் பேசினேன். அவர் சுகயீனமுற்று வைத்தியசாலையில் இருப்பதாகவும், குறித்த நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு பதிலுரைத்தார்.
அதற்கிணங்க, பாலமுனைப் பிரகடனத்தில் கலந்து கொண்டு உரையாற்றினேன். அப்போது உதுமாலெப்பை வைத்தியசாலையில் இருப்பதாகவும், அவரினால் இந்நிகழ்வில் கலந்து கொள்ள முடியாதெனக் கூறினேன். அத்துடன், உதுமாலெப்பை ஒரு நண்பர் என்ற ரீதியில் மேலும் அவரைப்பற்றி சில வார்த்தைகள் பேசியிருந்தேன். இது வழக்கமான நடைமுறையிலுள்ள ஒரு பிரச்சினையாகும். இதில் என்ன தவறு இருக்கிறது. இதனைப் புரிந்து கொள்ளாமலும், பக்குவமில்லாமலும் உதுமாலெப்பை தற்போது கூறியிருப்பது அவர் ஒரு சந்தர்ப்பவாதி என்பதனை வெளிப்படுத்தியுள்ளது.
பாலமுனைப் பிரகடனத்தின் போது நான் உதுமாலெப்பையோ அல்லது தேசிய காங்கிரசின் தலைவரையோ, அந்தக்கட்சியினையோ பிழையாக பேசவில்லை. அப்படி கூறியிருந்தால் ஆதாரங்களுடன் அவர் நிரூபிக்கட்டும். உதுமாலெப்பை ஒரு நேர்மையான அரசியல்வாதி என்றிருந்தால் அவர் அது தொடர்பில் என்னிடம் அக்காலப்பகுதியில் கேட்டிருக்க வேண்டும். அல்லது அறிக்கையொன்றினையாவது விட்டிருக்க வேண்டும்.
உதுமாலெப்பை தன்னிடம் கேட்டுக்கொண்டதற்கிணங்க சுதந்திர கிழக்கு கூட்டத்தினை ஏறாவூரில் முதன்முதலில் ஏற்பாடு செய்தவன் நானே, அந்தக்கூட்டத்திலும் உதுமாலெப்பை பேசி விட்டுச்சென்றார். அதன் பின்னர் நாங்கள் ஒன்றாக சென்று மூதூரில் நடந்த சுதந்திர கிழக்கு கூட்டத்திலும் பேசினோம். அப்போதும் ஒன்றும் பேசாது மௌனியாக இருந்த உதுமாலெப்பை தற்போது சந்தர்ப்பம் பார்த்துப்பேசுவது அவரது நயவஞ்சகதனத்தின் வெளிப்பாடாகும். இவ்வாறு உள்ளொன்றும் வெளியொன்றும் வைத்துக்கொண்டு என்னொடு நண்பனாக நடித்துக்கொண்டிருந்துள்ளார் என்பது இப்போது புலனாகிறது.
உதுமாலெப்பைக்கு ஞானம் பிறந்து ஒரு சில வருடங்களுக்கு முன்னர் பேசிய விடயங்கள் இப்போது தான் ஞாபகத்திற்கு வருகிறது. ஒரு முஸ்லிமாக இருந்து கொண்டு ஒரு சில வருடங்களுக்கு முன்னர் பேசிய விடயத்தினை மனதில் வைத்துக்கொண்டு என்னோடு நீண்ட காலமாக நயவஞ்சகதனமாகப் பழகியுள்ளார். அவர் சந்தர்ப்பம் பார்த்து முனாபிக் தனமாக நடந்துள்ளார். இவ்வாறான அவரின் செயற்பாடுகள் குறித்து கவலையடைகின்றேன்.
தேசிய காங்கிரசின் தலைவர் அதாஉல்லா ஒரு மூத்த அரசியல்வாதி அவருக்கு யாரும் அரசியல் சொல்லிக்கொடுக்க வேண்டிய தேவை கிடையாது. உதுமாலெப்பை சொல்வது போன்று அவர் யாருடைய கதைகளைக் கேட்பதற்கு சிறு பிள்ளையும் கிடையாது. அதாஉல்லா சத்தியத்தலைவர் என்றும் அவர் ஒரு தீர்க்கதரிசி என்றும் தலைமையில் வைத்து போற்றிய உதுமாலெப்பை இன்று தனது தலைவரை இழிவுபடுத்திப்பேசுவது வேடிக்கையாகவுள்ளது. அப்படியானதொரு தலைவரை இன்று உதுமாலெப்பை பிழை காண்கின்றார்.
குறிப்பாக, எனது பெயர் தேசிய காங்கிரசிக்குள் இயங்கும் சதிகாரக்குழுவில் இடம்பெற்றுள்ளதாக உதுமாலெப்பை கூறுகிறார். எனது நற்பெயருக்கு சேறு பூசும் நடவடிக்கையாகவே நான் அதனைப்பார்க்கிறேன். உதுமாலெப்பை எந்தக்கட்சிக்குச் சென்றாலும் எனக்குப் பிரச்சினை கிடையாதென்பதனை அவர் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அவர் நான் அங்கம் வகிக்கும் கட்சியினை சார்ந்தவருமல்ல. எனது மாவட்டமுமல்ல. அவரது பிரிவு இணைவு என்பன எனக்கு எந்தவொரு தாக்கத்தினையும் ஏற்படுத்தப் போவதுமில்லை.
உதுமாலெப்பை சிறுபிள்ளைத்தனமாக பேசி ஒரு சந்தர்ப்பவாதியாகச் செயற்படுவார் என நான் கனவிலும் எண்ணிப் பார்க்கவில்லை. அவரது எதிர்கால அரசியல் நகர்வுகளுக்கு அவர் தற்போது கூறும் நொண்டிக் குற்றச்சாட்டுக்கள் ஒரு பலமான காரணங்களாக அமையாதென்பதனை மக்கள் அறியும் காலம் வெகு தொலைவிலில்லை எனவும் சுபைர் மேலும் தெரிவித்தார்.
எஸ்.அஷ்ரப்கான்
No comments:
Post a Comment