அனுராதபுரம் மாவட்டத்தின் கலென்பிந்துனுவெவ பிரதேசத்தை சேர்ந்த ஒரு தம்பதியினர் உணவு இல்லாத காரணத்தினால் முருங்கை கீரையை மாத்திரம் வேகவைத்து சாப்பிட்டு வந்ததாக அண்மையில் ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டிருந்தன.
இவ்விடயம் தொடர்பில் விசேட கவனம் செலுத்திய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவ்விடயம் தொடர்பில் உடனடி விசாரணைகளை மேற்கொள்ளுமாறு அது தொடர்பில் நியமிக்கப்பட்ட குழுவினருக்கு பணிப்புரை விடுத்திருந்தார்.
அதற்கமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது சம்பவங்களின் உண்மைத்தன்மையை ஊர்ஜிதப்படுத்திக்கொள்ளாது ஊடகங்கள் குறித்த செய்தியை வெளியிட்டிருந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த மூன்று வருடங்களாக அப்பிரதேசத்தில் நிலவிவரும் வறட்சி காரணமாக அப்பிரதேச மக்கள் அனைவரும் பாதிக்கப்பட்டிருந்தபோதிலும் முருங்கை கீரையை வேகவைத்து சாப்பிடும் அளவிற்கு அக்குடும்பம் பொருளாதார ரீதியில் வறுமை நிலையில் காணப்படவில்லையென அக்குடும்ப உறுப்பினர்களிடமும் அயலவர்களிடமும் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
வறட்சியால் பாதிக்கப்பட்ட அப்பிரதேச மக்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட நிவாரணம் உள்ளிட்ட ஏனைய உதவிகள் அக்குடும்பத்திற்கும் கிடைக்கப்பெற்றுள்ளதுடன் குறித்த குடும்பத் தலைவராகிய பி.பியசேன என்பவருக்கு சிறுநீரக நோயாளர்களுக்கான உதவித் தொகையும் சமுர்த்தி உதவித் தொகையும் வழங்கப்படுகின்றமை விசாரணைகளின்போது உறுதியாகியுள்ளது.
மாவட்ட செயலகம், பிரதேச செயலகம், கமநல சேவைகள் திணைக்களம், விவசாயக் காப்புறுதி கூட்டுத்தாபனம், கிராம சேவகர், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், விவசாய ஆய்வு உதவியாளர்கள் உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகளின் வாக்குமூலங்கள் விசாரணை நடவடிக்கைக்காக பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதுடன் சம்பவத்தின் உண்மைத்தன்மை ஊடகங்களினால் திரிபுபடுத்தப்பட்டுள்ளமை விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது.
உண்மைக்கு புறம்பான வகையில் அச்செய்தி வெளியிடப்பட்டுள்ளமையினால் நாட்டில் ஏற்பட்ட இக்கட்டான நிலைமை தொடர்பில் கவலையடைவதுடன் அரசாங்கத்தை அசௌகரியத்திற்கு உட்படுத்தும் வகையில் அவ்வாறான செய்திகளை பிரசுரிப்பதை தவிர்த்துக்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட ஊடக நிறுவனங்களுக்கு வலியுறுத்தப்படுகின்றது.
No comments:
Post a Comment