தனது இனத்திற்கு ஒரு முகத்தையும், தமிழினத்திற்கு ஒரு முகத்தையும் காட்டுகின்றது. நல்லாட்சி அரசு என வட மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் விசனம் வெளியிட்டுள்ளார். அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி, 2018.10.02 நேற்றைய தினம் முல்லைத்தீவு, காணமல்போனோர் அலுவலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.
இந்த கவனயீர்ப்பில் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராசா மற்றும் வட மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன், கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்கள், அரசியல் கைதிகளின் உறவினர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர். இதில் வட மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் கருத்துத் தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் அரசியல் கைதிகள் என்று சொல்லப்படுபவர்களை, அவர்களுக்கான விசாரணைகளை நடாத்தி, அல்லது புணர்வாழ்வளித்து விடுதலை செய்திருக்கவேண்டும்.
ஒன்பது வருடங்கள் கடந்த நிலையில்கூட, அவர்கள் விடுதலை செய்யப்படாமல் அவர்கள் குடும்பங்களை எண்ணியும், தங்களுடைய பிள்ளைகளின் எதிர்காலத்தை எண்ணியும் அங்கு தவித்துக்கொண்டு உண்ணாவிரதப் போராட்டத்தினை நடாத்திக்கொண்டிருக்கின்றனர்.
உண்ணாவிரதம் இருந்த காலங்களில் அதாவது ஏற்கனவே இருந்த மதிப்பு, மரியாதைகள் எல்லாம் பொய்யாக்கப்பட்டு, இன்று இந்த போராட்டங்களுக்கு மரியாதை இல்லாத நிலையைத்தான், நல்லாட்சி அரசு ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றது.
போராடுகின்றோம், போராடுகின்றோம் வீதிகளில் நின்று போராடுகின்றோம். ஒவ்வொரு விடயத்திற்கும் போராடுகின்றோம். ஆனால் தனது இனத்திற்கும் ஒரு முகத்தையும், எங்களுடைய தமிழினத்திற்கு இன்னொரு முகத்தையும் காட்டிக்கொண்டு இந்த நல்லாட்சி அரசானது வேடிக்கையான விளையாட்டுக்களை செய்துகொண்டிருக்கின்றது என்பதுதான் உண்மை.
சரியான ஒரு நல்லாட்சியாக இருந்தால், அந்த அரசியல் கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும். அல்லது புணர்வாழ்வளித்தாவது விடுதலை செய்யப்பட வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துக்கொண்டிருக்கின்றார்கள். அவர்களுடைய கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளாத நிலையில் மாற்றான் தாய் மனப்பான்மையோடு இந்த அரசானது, மிக மோசமான குற்றங்களைச் செயதவர்களை நடமாடவிட்டுக்கொண்டு, எங்களுடைய இனத்துக்காக போராடியவர்களை அங்கே பல ஆண்டுகாலமாக சிறைவைத்துக்கொண்டிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாத, ஒருவராலும் மன்னிக்க முடியாத, உங்களால் நியாயப்படுத்த முடியாத செயலாக நாங்கள் கருதுகின்றோம். தயவுசெய்து ஒரு நல்லாட்சி அரசு என்ற பெயரோடு நீங்கள் இருப்பதாக இருந்தால் நல்லாட்சி அரசுக்குரிய அந்தக் கோட்பாடுகளை மதித்துச் செயற்படுங்கள் என்றார்.
No comments:
Post a Comment