40 வருடங்களின் பின் இலங்கை கிரிக்கெட் அணியில் இணைந்த யாழ். இளைஞன் - News View

About Us

About Us

Breaking

Wednesday, October 3, 2018

40 வருடங்களின் பின் இலங்கை கிரிக்கெட் அணியில் இணைந்த யாழ். இளைஞன்

இலங்கை கிரிக்கெட் அணிக்கு 1982-ம் ஆண்டு டெஸ்ட் அந்தஸ்து கிடைத்தது. 90-களில் வெற்றிப் பாதையில் பயணித்த இலங்கை கிரிக்கெட் அணி 1996-ம் ஆண்டு உலகக் கோப்பையை முதன்முறையாக வென்றது. 

அந்த சமயத்தில் கிரிக்கெட் அணியை இலங்கையின் மேற்கு, தெற்குப் பிரதேசங்களைச் சேர்ந்த வீரர்களே பிரதிநிதித்துவப்படுத்தினர். 

இந்த நிலையில், சுமார் 40 வருடங்களுக்குப் பின்னர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வீரர் ஒருவர் 19 வயதிற்குட்பட்ட இலங்கை தேசிய கிரிக்கெட் அணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. 

17 வயதான விஜயகாந்த் என்ற இளைஞரே தேசிய அணியில் இடம்பிடித்துள்ளார். கிரிக்கெட் வாரியம் தற்போதுதான் அறிவிப்பாக வெளியிட்டிருந்தாலும் கடந்த சில மாதங்களில் இவர் சில சர்வதேசப் போட்டிகளிலும் விளையாடிவிட்டார். 

19 வயதிற்குட்பட்ட அணியில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இவர் விளையாடியுள்ளார். ஒருநாள் சர்வதேச அணியில் மேலதிக வீரராக சேர்க்கப்பட்டுள்ள விஜயகாந்த், 19 வயதிற்குட்பட்ட முதலாவது ஆசிய உலகக் கிரிக்கெட் போட்டிகளுக்கான இலங்கை அணியிலும் இடம்பிடித்திருந்தார். 

´´15 வயதிற்குட்பட்ட அணியில் இருந்தே நான் பந்து வீசி வருகிறேன். சிறந்த பயிற்சியாளர்கள் கிடைத்ததால் பள்ளி அணியில் திறமைகளை வெளிப்படுத்த முடிந்தது. 15 வயதிற்குட்பட்ட அணியில் இடம்பிடித்த பின்னர் பள்ளிகளுக்கிடையிலான 19 வயதிற்குட்பட்ட மாகாண அணிகளுக்கிடையிலான போட்டிகளிலும் சிறப்பாக விளையாட முடிந்தது´´ என்று கூறினார் விஜயகாந்த். 

மேலும் அவர், ´´இந்த திறமைகளுடன் எனக்கு கொழும்பிற்கு வர முடிந்தது. தற்போது கொழும்பில் பயிற்சி பெற்று வருகிறேன். இங்குள்ள பயிற்சியாளர்கள் மிகச்சிறப்பாக பயிற்சி வழங்குகின்றனர். யாழ்ப்பாணத்தை விட இங்கு கிரிக்கெட்டில் வித்தியாசம் இருக்கிறது. எனது திறமைகள் மேலும் வளர்ந்துள்ளதாக உணர்கிறேன்´´ என்றார். 

19 வயதிற்குட்பட்ட இலங்கை கிரிக்கெட் அணியின் பிரதான பயிற்றுவிப்பாளர் ஹஷான் திலகரத்ன உள்ளிட்ட இலங்கை கிரிக்கெட் அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னணி வீரர்களிடம் விஜயகாந்த் பயிற்சி பெற்று வருகிறார். 

´´சிறு வயது முதலே எனக்கு கிரிக்கெட்டில் ஆர்வம் இருக்கிறது. கிரிக்கெட் விளையாடுவற்கு முன்பு கல்வியில் கவனம் செலுத்துமாறு தொடக்கத்தில் அம்மா, அப்பா உள்ளிட்ட அனைவரும் அறிவுரை கூறினார்கள். ஆனால் படித்துக் கொண்டே விளையாடுகிறேன் என்று அம்மாவிற்கு கூறினேன். இதைக் கூறியே கிரிக்கெட் விளையாட அனுமதி பெற்றேன்.´´ என்று தனது கடந்த காலத்தை சிரித்த முகத்துடன் நினைவுகூர்ந்தார். 

19 வயதிற்குட்பட்ட அணியில் திறமைகளை வெளிப்படுத்தி இலங்கை தேசிய அணியில் இடம்பிடிப்பதே தனது எதிர்பார்ப்பு என அவர் தெரிவித்தார். 

´´யாழ்ப்பாணத்தில் இருந்து இன்னும் சிலர் தேசிய அணியில் இடம்பிடிக்க வேண்டும்" என்று தனது விருப்பத்தை தெரிவித்தார். 

´பந்துவீச்சாளராக இலங்கை தேசிய அணியில் இடம்பிடிக்க எதிர்பார்த்துள்ளேன். துடுப்பாட்டத்திலும் என்னை வலுப்படுத்திக் கொண்டால் அது உதவியாக இருக்கும்.´´ என்றார் அவர். 

கொழும்பிற்கு வந்து தான் மொழிப் பிரச்சனையை எதிர்கொண்டதாகக் கூறிய விஜயகாந்த், ´´கொழும்பு வந்த பின்னர் சக வீரர்கள் எனக்கு சிங்களம் சொல்லித் தந்தனர். என்னிடம் தமிழ் கற்றுக்கொண்டனர். யாழ்ப்பாணத்தில் இருந்து நான் மட்டுமே வந்திருப்பதாகக் கூறி, என்னை தைரியப்படுத்தி, ஒத்துழைப்பு வழங்குகின்றனர்.´´ என்று கூறினார். 

´´எமக்கு மொழிப் பிரச்சனை இருந்தாலும், தெரிந்த ஆங்கிலத்தில் பேசி நாம் பயிற்சிகளில் ஈடுபடுவோம். நான் தமிழ் என்ற எந்தவொரு பாகுபாடும் இன்றி, நாம் ஒரே அணியாக விளையாடுகிறோம் என்று நான் எனது யாழ்ப்பாண நண்பர்களுக்கு கூறியிருக்கிறேன்.´´ 

´இதைக் கேட்ட எனது பாடசாலை நண்பர்கள், பெற்றோர் உள்ளிட்ட அனைவரும் சந்தோசப்பட்டனர். நாம் ஒற்றுமையாக விளையாடுவதைப் பார்க்க வருமாறு அவர்களுக்குக் கூறினேன்.´´ என்று விஜயகாந்த் தனது கொழும்பு கிரிக்கெட் அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார். 

நாடு முழுவதிலும் உள்ள திறமையான வீரர்களை அடையாளம் காண்பதற்காக இலங்கை கிரிக்கெட் நிறுவனம், மாகாண மட்டத்தில் போட்டிகளை நடத்துவதாக 19 வயதிற்குட்பட்ட தேசிய கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளர் ஹஷான் திலகரத்ன தெரிவித்தார். 

இலங்கை கிரிக்கெட் அணியைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக அனைத்து இளைஞர்களுக்கும் சம உரிமை வழங்கும் வகையில் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் செயலாற்றுவதாக அவர் தெரிவித்தார். 

´´தமிழ், சிங்களம், முஸ்லிம் என்ற பேதமின்றி, திறமை இருப்பவர்களுக்கு வாய்ப்பளித்து, அந்த திறமையை வளர்த்தெடுக்கும் திட்டம் இருக்கிறது.´´ என்று ஹஷான் திலகரத்ன மேலும் கூறினார். 

பிபிசி

No comments:

Post a Comment