தேரர்களுக்கு அநீதி இழைக்கப்படும்போது பார்த்துக்கொண்டிருக்க முடியாது என தேசப்பற்றுள்ள பிக்குகள் முன்னணியின் தலைவர் பெங்கமுவே நாலக தேரர் தெரிவித்துள்ளார். கொழும்பில், இன்று (செவ்வாய்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘தேரர்களாகிய நாம் ஏனைய தேரர்களுக்கு அநீதி இழைக்கப்படும்போது பார்த்துக்கொண்டிருக்க முடியாது.
கலகொட அத்தே ஞானசார தேரர், தொடர்ச்சியாக இந்த நாட்டுக்காகத்தான் குரல்கொடுத்து வந்தார். இதனை ஏற்றுக்கொண்டவர்களும் ஏற்றுக்கொள்ளாதவர்களும் என இரண்டு தரப்பினர் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால், எமக்கு இவை முக்கியமல்ல.
நாம் பௌத்த தர்மம், போதனைகளின் கீழேயே செயற்படுகிறோம். இதனை முன்னிருத்தியே நாம் ஞானசாரத தேரர் விடயத்தையும் பார்க்கிறோம்.
அந்த வகையில், சட்டமா அதிபர் திணைக்களமும் பொலிஸும் பௌத்த தர்மத்துக்கு எதிராகவே ஞானசார தேரர் மீது குற்றம் சுமத்தியுள்ளார்கள். பௌத்த தர்மத்துக்கு எதிராகவே அவருக்கு தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.
ஞானசார தேரரின் நிலைப்பாடு சரியானது என்பதும் சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் பொலிஸாரின் செயற்பாடுகள் தவறானது என்பதுமே எமது கருத்தாகும்.
நீதிமன்றத்துக்கு இத்தரப்பினர் வழங்கிய தவறான தகவலின் பிரகாரமே இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த தவறுக்குப் பின்னால் ஒரு காரணமும் இருக்கிறது.
அதாவது, இந்த அரசாங்கத்திலுள்ள சிலருக்கு பௌத்த தர்மம் பிடிக்காது. அவர்கள், பௌத்த கொள்கைகளுக்கு இணங்க வளர்ந்தவர்கள் அல்ல.
இவ்வாறானவர்களுக்கு நாட்டுக்காக குரல் கொடுப்போரை பிடிக்காத காரணத்தினாலேயே இன்று ஞானசார தேரர், சிறைச்சாலையில் தண்டணை அனுபவித்துக்கொண்டிருக்கிறார்.
இவ்வாறானவர்களை மௌனிக்கச் செய்ய வேண்டும் என்றே தண்டனைகளும் வழங்கப்படுகின்றன. இது அதிகாரிகளில் தவறே ஒழிய, நீதித்துறையின் தவறல்ல.
மேலும், தன்னைக் கொலை செய்ய முற்பட்டவருக்கே ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கும்போது, ஞானசாரத் தேரருக்கும் மன்னிப்பு வழங்க வேண்டும் என்பதே எமது வேண்டுகோளாகும். எனினும், நாம் இதுகுறித்து ஜனாதிபதியை சந்திக்கவோ, மனுக்களைக் கையளிக்கவோ இல்லை’ என தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment