எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் கிழக்கு மாகாணத் தமிழர்கள் சார்பில் அதிஉச்சபட்ச உறுப்பினர்களைப் பெற்றுக் கொள்ளும் வகையில் அனைத்துத் தமிழ் அரசியல் கட்சிகளையும் ஒரு பொதுச் சின்னத்தின் கீழ் ஓரணியில் போட்டியிட வைப்பதற்காகக் ‘கிழக்குத் தமிழர் ஒன்றியம்’ எடுத்துக் கொண்ட முயற்சியின் முக்கிய கட்டமாக, ஓரணியில் இணைந்து போட்டியிட சம்மதித்துள்ளனர்.
இதுவரை தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி, ஈழமக்கள் ஜனநாயக் கட்சி, தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி, அகில இலங்கை தமிழர் மகா சபை ஆகிய ஐந்து தமிழ்க் கட்சிகளும் இணைந்த அரசியல் கூட்டு அணியொன்றினை உருவாக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றினைக் கைச்சாத்திடுவது சம்பந்தமான கலந்துரையாடல் கூட்டமொன்று எதிர்வரும் 05.10.2018 வெள்ளிக்கிழமை கொழும்பில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனை கிழக்குத் தமிழர் ஒன்றியம் மேற்கொண்டுள்ளதாக கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் ஸ்தாபகர்களில் ஒருவரும், மாகாண இணைப்பாளர்களில் ஒருவருமான செங்கதிரோன் த.கோபாலகிருஸ்ணன் தெரிவித்தார். கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் அடுத்த கட்ட நகர்வு தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த முயற்சியின் முதற்கட்டமாக அனைத்துத் தமிழ் அரசியல் கட்சிகளையும் கிழக்குத் தமிழர் ஒன்றியம் தனித்தனியே சந்தித்துப் பேசியது. அடுத்த கட்டமாக கடந்த 22.08.2018 அன்று களுவாஞ்சிக்குடி இராசமாணிக்கம் மண்டபத்தில் அனைத்துத் தமிழ் அரசியல் கட்சிகளையும் ஓரிடத்தில் கூட்டிக் கலந்துரையாடினோம்.
இக்கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானித்தபடி புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றினைத் தயாரித்து அதன் நகல் வடிவத்தினை அனைத்துத் தமிழ் அரசியல் கட்சிகளுக்கும் அனுப்பி வைத்தோம். இந்த முயற்சியின் அடுத்த கட்டமாகவே எதிர்வரும் 05.10.2018 அன்றைய சந்திப்பு கொழும்பில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.
அதேவேளை இதுவரை தங்கள் சம்மதத்தைத் தெரிவிக்காத ஏனைய தமிழ் அரசியல் கட்சிகளுக்கும் தங்கள் நிலைப்பாடுகளைத் தெரிவிக்க நல்லெண்ண அடிப்படையில் 17.10.2018 வரை கடிதம் மூலம் கால அவகாசம் வழங்கியுள்ளோம்.
மேலும், தேர்தல் திணைக்களத்தினால் இதுவரை அங்கீகரிக்கப்படாத தமிழ் அரசியல் கட்சிகளுடனும் மற்றும் தேசியக் கட்சிகளில் இணைந்து அரசியல் செய்கின்ற தனிப்பட்ட அரசியல் செயற்பாட்டாளர்களுடனும் எமது முயற்சிகளுக்கு அவர்களது ஆதரவையும் பெற்றுக்கொள்ளும் வகையில் விரைவில் நல்லெண்ணப் பேச்சுவார்த்தைகளைக் கிழக்குத் தமிழர் ஒன்றியம் மேற்கொள்ளவிருக்கிறது என்றும் தெரிவித்தார்.
அத்துடன், கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் பின்னால் கிழக்கு மாகாணத் தமிழர்கள் அனைவரும் அணி திரள வேண்டுமென்றும் கிழக்கு மகாணத்துக்கு வெளியேயுள்ள தமிழர்களும் தங்கள் ஆதரவைக் கிழக்குத் தமிழர் ஒன்றியத்திற்கு வழங்க வேண்டும் என்றும் ஊடகங்களும் அதற்கு முழு ஒத்தாசை புரிய வேண்டுமென்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
No comments:
Post a Comment