வரட்சியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மாதாந்தம் 4,000 ரூபா மற்றும் 5,000 ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொதிகளை தொடர்ந்து சில மாதங்களுக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கென அரசாங்கம் மாதாந்தம் 2,030 மில்லியன் ரூபாவை ஒதுக்கியிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் துமிந்த திசாநாயக்க (03) நேற்று தெரிவித்தார்.
இதேவேளை, நிவாரணம் அடிப்படையில் வழங்கப்படும் உணவுப் பொருட்களின் தரம் மற்றும் தொகையில் மோசடி இடம்பெறாத வகையில் விசேட சுற்று நிருபம் வெளியிடப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் நேற்று தெரிவித்தார். அனர்த்த முகாமைத்துவ அமைச்சில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதற்கமைய மூன்று அல்லது அதனிலும் குறைவான எண்ணிக்கையுடைய குடும்பங்களுக்கு 4,000 ரூபா பெறுமதியான உணவுப் பொதியும் மூவரிலும் அதிக எண்ணிக்கையுடை குடும்பங்களுக்கு 5,000 ரூபா பெறுமதியான உணவுப் பொதியும் வழங்கப்படுமென்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
"இலங்கை நுகர்வோர் சபை, சுகாதார அமைச்சு மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு ஆகியவற்றுடன் இணைந்து உணவுப் பொருட்களை பொதி செய்து இன்னும் ஓரிரு தினங்களில் விநியோகிக்க ஆரம்பிக்கும். 'எமது கிராமத்துக்கு நாம்' என எழுதப்பட்ட பொதிகளில் இந்த உணவுப் பொருட்கள் பொதி செய்யப்பட்டிருக்கும்," என்றும் அமைச்சர் கூறினார்.
வரட்சியால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசாங்கத்தால் தொடர்ந்தும் உணவுப் பொதிகள் விநியோகிக்கப்பட்டு வந்தபோதும் அதில் உள்ளடக்கப்பட்டுள்ள பொருட்கள் தரமற்றவையென்றும் அவை போதுமானவையாக இல்லையென்றும் குற்றம் சுமத்தப்பட்டிருந்தன.
இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் முகமாகவே வரட்சிக்கான நிவாரணமாக வழங்கப்படும் பொருட்கள் மற்றும் அதன் நிறை அடங்கிய சுற்றுநிருபத்தை அரசாங்கம் வெளியிட்டிருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.
இச் செய்தியாளர் மாநாட்டில் அனர்த்த முகாமைத்துவம் தொடர்பில் ஊடகவியலாளர்களால் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் பதிலளிக்கையில் தெரிவித்ததாவது
சுனாமிக்கு பின்னரே அனர்த்த முகாமைத்துவத்துக்கென ஒரு அமைச்சு ஸ்தாபிக்கப்பட்டது. இந்த அமைச்சின் செயற்பாடுகள் தற்போது விஸ்தரிக்கப்பட்டுள்ளன. அனர்த்தம் இடம்பெற்றதன் பின்னர் சம்பவ இடத்துக்குச் சென்று நிவாரணப் பொருட்களை வழங்குவதிலும் பார்க்க அனர்த்தம் இடம்பெறுவதை தடுக்கும் வகையில் அமைச்சின் செயற்பாடுகள் உஷார்படுத்தப்பட்டுள்ளன.
அக்குரணை பிரதேசத்தில் அனர்த்தம் இடம்பெறுவதற்கு காரணமானவற்றை ஆராய்ந்து அகற்றும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எனது அமைச்சினால் காரணத்தை கண்டறிந்து அதனை அறிவிக்க மட்டுமே முடியும். நாம் அதற்கான பணிகளை ஆரம்பித்துள்ளோம்.
சுமார் 50 வருடங்களாக சுத்திகரிக்கப்படாத மல்வத்து ஓயாவை நாம் சுத்திகரித்துள்ளோம்.அதேபோன்று அடிக்கடி சுனாமி சமிக்ஞைகளை நாம் சோதனை செய்தும் ஒத்திகை பார்த்தும் வருகின்றோம். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் முன்கூட்டியே எம்மால் மக்களுக்கு அறிவிப்பை வழங்க முடியுமென்றும் அமைச்சர் தெரிவித்தார்.
நாடு முழுவதும் 14 மாவட்டங்களைச் சேர்ந்த 4 இலட்சத்து 51 ஆயிரத்து 224 குடும்பங்கள் வரட்சியால் பாதிக்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ தரவுகள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment