வடக்கில் காணி விடுவிப்பு மற்றும் வீட்டுத் திட்ட நிர்மாணம் ஆகியவற்றை விரைவுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சம்பந்தப்பட்டவர்களை பணித்துள்ளார்.
நேற்றைய தினம் (03) பாராளுமன்ற கட்டடத்தில் இடம்பெற்ற விசேட கூட்டத்திலேயே ஜனாதிபதி இப்பணிப்புரைகளை சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு வழங்கியுள்ளார்.
வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்கான விசேட செயலணி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நேற்று பாராளுமன்ற கட்டடத்தில் கூடியது. இரு மாகாணங்களின் அபிவிருத்தி தொடர்பில் மூன்று மணித்தியாலங்கள் கலந்துரையாடப்பட்டன.
நேற்றைய இந்த சந்திப்பின்போது மூன்று முக்கிய விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.சுமந்திரன் எம்பி தெரிவித்தார். மகாவலி 'எல்' வலயம் தொடர்பான விவகாரம், படையினர் வசமுள்ள காணிகள் விடுவிப்பு மற்றும் வீட்டுத் திட்டங்கள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டதாகவும் அவர் கூறினார்.
இதற்கிணங்க மகாவலி 'எல்' வலயத்தில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதாரங்களுடன் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்ததோடு உடனடியாக அவைகளைக் கைவிடுமாறும் ஜனாதிபதியிடம் வலியுறுத்தியது.
அந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி மீண்டும் பேச்சுவார்த்தையொன்றை நடத்தி அது தொடர்பில் இணக்கப்பாடொன்றை எட்டுவதற்கு தீர்மானித்துள்ளார்.
இதேவேளை, வடக்கில் படையினர் வசமுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டது. தமிழ் மக்களின் காணிகளை அவர்களுக்கே மீள வழங்குவது தொடர்பில் எந்தவித மாற்றுக்கருத்துக்கும் இடமில்லை என இதன்போது குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி, அக்காணிகளை விரைவாக காணிச் சொந்தக்காரர்களுக்கு மீளக்கையளிக்குமாறு உயர் படை அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
அத்துடன் விடுவிக்கப்படாமலுள்ள காணிகளில் உள்ள பாடசாலைகளை விடுவிப்பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. அப் பாடசாலைகளை விடுவிப்பதற்கான உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அவர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணித்துள்ளார்.
வடக்கில் நிர்மாணிக்கப்படவுள்ள 25,000 வீட்டுத் திட்டம் தொடர்பில் இங்கு ஆராயப்பட்டது. இரு அமைச்சர்களுக்கிடையிலான இழுபறிநிலையே வீடமைப்புத் திட்டத்தின் தாமதத்துக்கு காரணம் என இங்கு தெரிவிக்கப்பட்டதுடன் இரு அமைச்சர்களும் கலந்துரையாடி விரைவாக இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறும் ஜனாதிபதி இதன்போது பணிப்புரை விடுத்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க் கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் தலைமையில் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களும் வடக்கு, கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment