மீராவோடை பொதுச்சந்தை மிக நீண்ட காலமாக அதன் உயிரோட்டத்தை இழந்து கவனிப்பாரற்ற நிலமையில் காணப்பட்டது. தற்போது இச்சந்தை புதுவடிவம் எடுத்திருக்கின்றது.
மீராவோடை மீரா ஜூம்ஆப்பள்ளிவாயல் நிருவாகத்தினதும் குறிப்பாக, முன்னாள் தவிசாளா் கே.பீ.எஸ்.ஹமீட்டின் அயராதுழைப்பும் இதிலுண்டு. அரசியலில் மாறுபட்ட கருத்துக்கள் எம்மவர் மத்தியில் காணப்பட்டாலும். கே.பீ.எஸ்.ஹமீட் பள்ளிவாயலின் தலைவா் என்ற வகையிலும் அவா் இந்த மீராவோடை மண்னை நேசிக்கின்றவர். அவரின் நேர காலத்தைச் செலவு செய்து எதிர்பார்ப்புகளுக்கப்பால் சேவையாற்றி வருகின்றார்.
சகல விடயங்களையும் அரசியல் கண்ணோட்டத்தில் பார்ப்பது தவறானது. இதனை ஹமீட் தலைமை தாங்கி நடாத்திச் செல்வதனை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லையென்றால் தெளிவாக அவரிடம் கூறுங்கள். அதற்கு மாறாக, இவ்விடயத்தை வைத்துக் கொண்டு தவறாக விமர்சனம் செய்வது, பிரதேசவாதத்தினைத் தூண்டி அரசியல் செய்ய நினைப்பதென்பது ஆரோக்கியமான அரசியலுக்கும் நல்ல சிந்தனைமிக்க மனிதனுக்குமான செயற்பாடல்ல.
உண்மையில் இச்சந்தையின் மூலம் சாதாரண ஏழை மக்கள் அன்றாடம் நூறும் இருநூறும் உழைப்பவா்கள் பயனடைகின்றனா். ஒரு வாரச்சமையலுக்குத் தேவையான பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கு ஐநூறு ரூபாய் போதும் என்கின்றனா்.
இச்சந்தையினை அதிகளவில் பெண்கள் பயன்படுத்துகின்றனா். பெண்களைப் பொறுத்தமட்டில் இச்சந்தை அவா்களுக்குப் பாதுகாப்பானது. பள்ளிவாயல் நிருவாகம் அதனை முறையாக ஒழுங்கமைத்து நடாத்துகின்றனா். இதனைத்தடை செய்ய வேண்டுமென்ற கோசம் தற்போது பிரதேசவாதத்துடன் எழுத்துள்ளமையினை அவதானிக்க முடிகின்றது.
எதுவாயினும், கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபை எவ்விதத்திலும் இதனைத்தடை செய்ய முடியாது. அந்த அதிகாரம் அவா்களுக்குக் கிடையாது. அவ்வாறு தடை செய்ய முயற்சியெடுத்தால், பொது மக்களின் பாரிய எதிர்ப்பினை பிரதேச சபையோ அல்லது தனி நபரோ சந்திக்க நேரிடும். சதிகார அரசியல்வாதிகளினால் ஓட்டமாவடி, வாழைச்சேனை என்ற பிரதேசவாதம் தோற்றுவிக்கப்பட்டதைப்போல, ஓட்டமாவடி, மீராவோடை என்ற பிரதேசவாதம் தோற்றுவிக்கப்படலாமென சமூக நலன்விரும்பிகள் அஞ்சுகின்றனா்.
எனவே, ஓட்டமாவடி பிரதேச சபை குறைந்தபட்சம் வரி அறவிட முடியும். பொதுச்சந்தைகள், சிறுவா் பூங்கா உள்ளிட்ட மக்கள் பயன்பாட்டிற்கான உட்கட்டுமான பொதுநல வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது அவா்களின் பொறுப்பென்பதை மறந்து விடாதீர்கள்.
இதேவேளை, மீராவோடை கிழக்கு வட்டாரத்தினைப் பிரதிநிதித்துவப்படுத்தும், கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் எஸ்.ஐ.அன்வர் ஆசிரியரை மீராவோடை பொதுச்சந்தையுடன் தொடர்புபடுத்தி தவறாக விமர்சித்து பொய்ப்பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
கடந்த 27.09.2018ம் திகதி இடம்பெற்ற சபையின் ஆறாவது அமர்வின் போது மீராவோடை சந்தையை நிறுத்த வேண்டுமென்ற கோரிக்கை அவரால் முன்வைக்கப்படவில்லை. இச்சந்தையினால் நிலையான வியாபாரிகள் பாதிப்படைவதாகச் சுட்டிகாட்டப்பட்டது.
இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை மேற்கொண்டு தீர்வினைப் பெறுவதென்றே முடிவுகள் எட்டப்பட்டன. சிலரது அரசியல் காழ்ப்புணர்ச்சி இதில் மேலோங்கிக் காணப்படுகிறது. பொய்ப்பிரச்சாரங்களுக்கு இடமளிக்க வேண்டாமென பொதுமக்களைக் கேட்டுக்கொள்கின்றோம்.
எம்.ரீ.எம்.பாரிஸ்
No comments:
Post a Comment