வடக்கு மாகாணத்தை கூட நிர்வகிக்க தெரியாத முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்கள் எப்படி வடகிழக்கை நிர்வகிக்க முடியும் என அம்பாறை மாவட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் கேள்வி எழுப்பினார்.
அம்பாறை மாவட்டம் தம்பட்டை லெவன் ஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் தம்பட்டை பொது விளையாட்டு மைதானத்தில் நேற்றுமுன்தினம் மாலை (02) இடம்பெற்ற அமரர் தம்பியப்பா பூபாலபிள்ளை ஞாபகார்த்த லெவன் ஸ்டார் சம்பியன் வெற்றிக்கிண்ணத்திற்கான கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டியில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பே வடக்கு முதல்வரை கொண்டு வந்தது. தமிழர்களின் நலனில் அக்கறை செலுத்த வேண்டும் என்பதற்காகவே அச்செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது. அது இன்று நடைபெறுகின்றதா?
நல்லிணக்க அமைச்சால் வடக்கின் அபிவிருத்திக்காக அனுப்பி வைக்கப்பட்ட பல கோடி ரூபா நிதி வீணாக திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது. இதனை கூட முறையாக பயன்படுத்தி வடக்கை அபிவிருத்தி செய்ய முடியாதவர்கள் எப்படி வடகிழக்கை நிர்வகிக்க முடியும் எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
கடந்த கொடூர ஆட்சியை முன்னெடுத்த மகிந்த ராஜபக்சவின் கட்சியில் உள்ள வாசுதேவ நாணயக்காரவின் சம்மந்தியான இவர் எப்போதாவது கிழக்கு மாகாணத்திற்கு வருகை தந்து கிழக்கு மக்களின் குறைநிறைகளை கேட்டுள்ளரா எனவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை தமிழ்த் தேசிய கூட்டமைப்பை உடைப்பதற்கு இன்று பல அணிகள் உருவாக்கப்பட்டுள்ளன. வடக்கிலே பேரவை கிழக்கிலே கிழக்கு ஒன்றியம் என பல அணிகள் உருவாக்கப்பட்டுள்ளன எனவும் தமிழர்களுக்கான தீர்வை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மாத்திரமே பெற்றுக் கொடுக்கும் எனவும் குறிப்பிட்டார்.
10 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட இச்சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டியில் தம்பிலுவில் எதிரொளி விளையாட்டுக் கழகமும் தம்பட்டை லெவன் ஸ்டார் கழகமும் மோதிக் கொண்டன.
இறுதி போட்டியில் பங்கேற்ற வீரர்களின் அறிமுக நிகழ்வு இடம்பெற்றதனை தொடர்ந்து நாணயச்சுழற்சியினை பாராளுமன்ற உறுப்பினர் நிகழ்த்தி போட்டியை ஆரம்பித்து வைத்தார்.
நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற லெவன் ஸ்டார் முதலில் துடுப்பெடுத்தாடி 10 ஓவர்கள் நிறைவில் 75 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய எதிரொளி அணி 9 ஓவர்கள் நிறைவில் 76 ஓட்டங்களை பெற்று சம்பியனாக தெரிவு செய்யப்பட்டது. வெற்றி பெற்ற எதிரொளி அணிக்கான சம்பியன் கிண்ணத்தை பாராளுமன்ற உறுப்பினர் வழங்கி வைத்தார்.
இறுதிப்போட்டியில் திருக்கோவில் பிரதேச சபை தவிசாளர் இ.வி.கமலராஜன் உறுப்பினர் க.தர்மராஜா, பொறியியலாளர் ஆர்.யுவேந்திரா உள்ளிட்ட, பொலிஸ் அதிகாரி, மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment