இலங்கையில் சிறுநீரக நோயை கட்டுப்படுத்தும் நோக்கில் நிர்மாணிக்கப்படவுள்ள இலங்கை - சீன கூட்டு நீர்வளத் தொழில்நுட்ப ஆய்வு கூடத்திற்கும், மாதிரி நிலையத்திற்கும் அடிக்கல் நாட்டும் வைபவம் இன்று (28) இடம்பெற்றுள்ளது.
இதற்குரிய நிகழ்ச்சி பேராதனை பல்கலைக்கழக பொறியியல் பீட வளாகத்திற்கு அருகில் இன்று இடம்பெற்றது.
ஜனாதிபதியின் எண்ணக்கருவுக்கு ஏற்ப சிறுநீரக நோயை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு நிகழ்ச்சிகள் அமுலாகின்றன. இந்த நிகழ்ச்சிகளின் ஒருகட்டமாக சீன, இலங்கை அரசுகளின் நிதி பங்களிப்போடு ஆய்வுகூடம் நிர்மாணிக்கப்படும்.
இதற்காக 195 கோடி ரூபா செலவிடப்படவுள்ளது. இதன் நிர்மாணப் பணிகள் 2020 ஆம் ஆண்டளவில் பூர்த்தியாகும். வடமத்திய மாகாணம் அடங்கலாக நாட்டின் 11 மாவட்டங்களில் சிறுநீரக நோய் பரவியுள்ளது.
இந்தப் பிரதேசங்களில் நிலைமைகளை ஆராய்ந்து நீர் சுத்திகரிப்பு முறைகளை நவீனமயப்படுத்துவது உள்ளிட்ட சேவைகளை முன்னெடுக்க புதிய தொழில்நுட்ப ஆய்வுகூடம் உதவும்.
நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் கீழ் அமையவுள்ள இத்திட்டமானது 50 ஆயிரம் சதுரஅடி விஸ்தீரனத்தில் அமையப்பெறவுள்ள இந்த ஆய்வுகூடத்தில் நீரை துல்லியமான முறையில் ஆய்வுசெய்யக்கூடிய பல உபகரணங்கள் நிறுவப்படவுள்ளன.
No comments:
Post a Comment