யாழ் குடாநாட்டில் வன்முறை , போதைவஸ்து பாவனையை தடுக்க ஆளுநர் தலைமையில் கலந்துரையாடல் - News View

About Us

About Us

Breaking

Tuesday, September 4, 2018

யாழ் குடாநாட்டில் வன்முறை , போதைவஸ்து பாவனையை தடுக்க ஆளுநர் தலைமையில் கலந்துரையாடல்

யாழ் குடாநாட்டில் வன்முறைகள் அதிகரித்துள்ளமை தொடர்பிலும் போதைவஸ்து மற்றும் கலாச்சார சீரழிவுகளை எதிர்காலத்தில் அதிகரிக்காமல் பாதுகாத்துக்கொள்வதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் ஆராய்வதற்கான விசேட கூட்டங்கள் வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தலைமையில் நடைபெற்றன. சுண்டுக்குளியில் அமைந்துள்ள ஆளுநர் செயலகத்தில் நேற்று (03) காலை முதல் மாலை வரை இக்கூட்டங்கள் இடம்பெற்றன.

முற்பகல் 10.30 மணியளவில் யாழ் மாவட்ட பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், இளைப்பாறிய யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர்கள், பேராசிரியர்கள், மதுவரித்திணைக்கள அதிகாரிகள் சர்வமதத் தலைவர்கள் புத்திஜீவிகள் ஆகியோருடனான சந்திப்பில் குடாநாட்டின் வன்முறைகள் மற்றும் போதைவஸ்து பாவனை அதிகரித்துள்ளமைக்கான காரணங்கள் தொடர்பில் ஆளுநர் விரிவாகக் கேட்டறிந்தார்.

பிற்பகல் 1 மணியளவில் யாழ் குடாநாட்டில் பாடசாலை முதல்வர்கள் கல்வித் திணைக்கள பணிப்பாளர்கள், கல்வி அமைச்சின் செயலாளர் ஆகியோருடனான கலந்துரையாடலில் மாணவர்கள் மத்தியில் போதைவஸ்து பழக்கங்களை கட்டுப்படுத்த வேண்டிய வழிமுறைகள் தொடர்பிலும் மாணவர்கள் வன்முறையில் ஈடுபடுவதற்கான காரணங்கள் மற்றும் அதனை இல்லாமல் செய்வதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை தொடர்பாக ஆளுநர் வினா எழுப்பினார்.

ஆளுநர் செயலகத்தில் பாதுகாப்பு தரப்பினருடனான விசேட கலந்துரையாடல் ஆளுநர் தலைமையில் இன்று நடைபெறவுள்ள நிலையில் அதில் பேசவேண்டிய விடயங்கள் தொடர்பில் தகவலை பெற்றுக்கொள்ளும் கூட்டமாக இது அமைந்ததாக ஆளுநர் செயலகம் தெரிவித்துள்ளது.

இக்கூட்டங்களில் ஆளுநரின் செயலாளர் எல்.இளங்கோவன், இணைப்புச் செயலாளர் சுந்தரம் டிவகல்லாலா, உதவிச் செயலர் ஜே.எக்ஸ்.செல்வநாயகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment