எமது பிரதேச சபைக்குச்சொந்தமான அமீர் அலி பொது விளையாட்டு மைதானத்தின் பல பகுதிகள் இருள் சூழ்ந்த நிலையில் காணப்படுகிறது. இப்பகுதிகள் அவசரமாக ஒளியூட்டப்பட வேண்டும் என கடந்த 30.08.2018ம் திகதி இடம்பெற்ற ஓட்டமாவடி பிரதேச சபையின் ஐந்தாவது அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதேச சபையின் உறுப்பினர் மெளலவி எம்.ஐ.ஹாமித் கோரிக்கை முன்வைத்தார்.
தொடர்ந்து உரையாற்றிய அவர், இப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுவதன் காரணமாக போதைவஸ்து பாவனையாளர்கள் இரவு வேளைகளில் இதனை அதிகம் பயன்படுத்துவதனை அவதானிக்க முடிகின்றது. போதைவஸ்துப் பாவனையினை எமது பிரதேசத்திலிருந்து தடுப்பதற்கு பிரதேச சபையினால் முடியுமான பங்களிப்பினை வழங்குமாறும், அதற்கான துரித நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டதுடன், கட்சி பேதமின்றி தமது அணியினர் ஒத்துழைப்புக்களை வழங்கத்தயார் எனவும் ஊடகங்களுக்கும் தெரிவித்தார்.
மேலும், சபைக்குச்சொந்தமான மடுவம், இறைச்சிக்கடைகளிலிருந்து நாளாந்தம் அறவீடு செய்யப்பட்டுகின்ற நிதி தொடர்பாகவும் மாதாந்த வருமானம் தொடர்பிலும் கேள்வி எழுப்பப்பட்டது.
ஒரு மாடு அறுப்பதற்கு ரூபாய் 50 அறவிடப்படுவதாகவும் மாட்டு முள் ஏற்றுதலுக்காக ரூபாய் 100 அறவீடு செய்யப்படுவதாகவும் தவிசாளரினால் விளக்கமளிக்கப்பட்டது. இதற்கான பற்றுச்சீட்டினை கட்டாயம் இறைச்சிக்கடை உரிமையாளர்கள் பெற்றுக்கொள்ள வேண்டுமெனவும் முறைகேடுகள் இடம்பெற்றால், தமக்கும் கெளரவ பிரதேச சபை உறுப்பினர்களுக்கும் அறியத்தருமாறும் தெரிவித்தார்.
அத்துடன், சபையின் தவிசாளர் பயன்படுத்தும் வாகனத்திற்கான சாரதி உத்தியோகபூர்வமான ஒருவராக இருக்க வேண்டும். ஒரு வேளை விபத்து நிகழ்ந்தால் அதற்கு பொறுப்புக்கூறுபவராக அவர் இருப்பார். அவ்வாறில்லாவிட்டால், இழப்பினைப் பெறுவதில் பாரிய பிரச்சனை நிகழ வாய்ப்புகள் உண்டு. கடந்த காலங்களிலும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது.
தவிசாளரின் நன்மைகருதி சபையின் அதிகாரமளிக்கப்பட்ட சாரதியைப் பயன்படுத்துமாறு ஆலோசனை வழங்கப்பட்டதுடன், இதுவரை காலமும் சபையில் எடுக்கப்பட்ட எவ்விதத்தீர்மானங்களுக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை எனச் சுட்டிக்காட்டினார்.
அத்தோடும் தொடர்ந்தும் தமது வட்டாரத்தில் நிகழும் பிரச்சனைகள் குறித்து பிரதேச சபையின் உறுப்பினர் மெளலவி எம்.ஐ.ஹாமித் தனதுரையில் குறிப்பிட்டார்.
எம்.ரீ.எம்.பாரிஸ்
No comments:
Post a Comment