என்னால் முனவைக்கப்பட்ட தியாவட்டவான், நாவலடி, நாசிவன்தீவு போன்ற பின்தங்கிய கிராம மக்களின் குடிநீர்ப் பிரச்சினைக்கு உடனடித்தீர்வினை தற்காலிகமாகப் பெற்றுத்தந்த நகரத்திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சர் றவூப் ஹக்கீம் அவர்களுக்கு எனது பிரதேச மக்கள் சார்பாக மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவிப்பதாக கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் ஏ.ஜி.அஸீஸுல் றஹீம் குறிப்பிட்டார்.
நேற்று 03.09.2018ம் திகதி திங்கட்கிழமை கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் எச்.எம்.முஸம்மில் தலைமையில் நகர திட்டமிடல், நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்ற வாழைச்சேனை-ஓட்டமாவடி வீதி அபிவிருத்தி மற்றும் சுத்தமான குடிநீர் வழங்கல் தொடர்பான மீளாய்வுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்படி கோரிக்கையை முன்வைத்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய பிரதேச சபை உறுப்பினர் ஏ.ஜி.அஸீஸுல் றஹீம், யுத்தப்பாதிப்புள்ளாகி மீள்குடியேறியுள்ள எனது பிரதேச மக்கள் பல்வேறு தேவைப்பாடுகளுடன் வாழ்ந்து வருவதுடன், அடிப்படைத்தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியாமலும் சுத்தமான குடிநீரின்மையாலும் பல்வேறு அசெளகரியங்களை, நோய்களையும் எதிர்நோக்கி வருகின்றனர்.
அத்துடன், இப்பிரதேசத்தில் காணப்படும் பாடசாலைகள், சமய கல்வி நிறுவனங்களும் பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதுடன், இங்கே கல்வி பயிலும் மாணவ, மாணவிகள் தங்களது அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியாத நிலையும் இடைவிலகலும் சரியான கல்வியைப்பெற முடியாத நிலையும், இப்பிரதேசம் கல்வியில் பின் தங்கிப்போவதற்கும் இது காரணமாக அமைந்துள்ளது.
எனவே, இப்பிரதேச மக்களின் நன்மைகருதி கல்குடாவில் மேற்கொள்ளப்படும் சுத்தமான குடிநீர் வழங்கும் திட்டத்துற்குள் தியாவட்டவான் பிரதேசங்களை உள்வாங்க அமைச்சர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென கோரிக்கை முன்வைப்பதுடன், தற்போதுள்ள சூழ்நிலையில் உடனடிதீர்வுகளைப் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக் கொண்டார்.
அதே நேரம், இக்கூட்டத்தில் கலந்து கொண்ட தியாவட்டவான் கிராம அபிவிருத்திச் சங்கத்தலைவர் எம்.ஐ.எம்.றிஸ்வான், செயலாளர் நஜீம் மெளலவி ஆகியோரும் எனது கோரிக்கைக்கு வலுச்சேர்க்கும் வகையில் குறித்த தேவைப்பாடு தொடர்பில் தமது கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர் அவர்களுக்கும் இப்பிரதேசம் மக்கள் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
அத்துடன், கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு உடனடியாக காவத்தமுனை, தியாவட்டவான், நாசிவன்தீவு போன்ற பிரதேசங்களுக்கு நிலக்கீழ் நீரை சுத்திகரித்து வழங்குவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்த அமைச்சர் ஹக்கீம் அவர்களுக்கும் இப்பிரதேச மக்கள் சார்பாக மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இது இப்பிரதேச மக்கள் சார்பாக வைக்கப்பட்ட கோரிக்கைக்கு கிடைத்த முதல் வெற்றி என்பதுடன், தொடர்ந்தும் இப்பிரதேச மக்களின் நலனைக்கருத்திற் கொண்டு முயற்சிகள் முன்னெடுக்கப்படுமெனவும் கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் ஏ.ஜி.அஸீஸுல் றஹீம் மேலும் தெரிவித்தார்.
thehotline.lk

No comments:
Post a Comment