வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை தபால்காரர் என விமர்சித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், விக்னேஸ்வரனை முதல்வராக நீடிக்கவிட்டதுதான் கூட்டமைப்பின் தலைமை செய்த தவறு என்றும் குறிப்பிட்டார். யாழ்ப்பாணத்தில் நேற்று (03) ஊடகவியலாளர்களுக்கு வழங்கிய செவ்வியின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை தவறிழைத்துள்ளது என வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூறியிருக்கிறாரே. அது தொடர்பில் உங்கள் கருத்து என்ன? எனச் சுமந்திரன் எம்.பியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர்,
“எங்கள் கட்சியின் பெயரே சமஷ்டிக் கட்சி. அண்ணண் மாவை சேனாதிராஜாவுக்கு எதிராக உயர் நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கில் வாதாடியவன் நான். அந்த வழக்கில் எங்களுக்கு ஒரு தீர்ப்பு கொடுக்கப்பட்டிருந்தது. அவ்வாறு உயர் நீதிமன்றத்தில் கொடுக்கப்பட்ட தீர்ப்பு ‘சமஷ்டியை இவர்கள் கோர முடியும்’ என்றுதான் வந்திருக்கின்றது.
இந்தத் தீர்ப்பு வந்த கையோடு முதலமைச்சர் விக்னேஸ்வரன் அந்தத் தீர்ப்பின் பிரதிகளைக் கையில் எடுத்துக் கொண்டு கண்டியில் உள்ள மகாநாயக்க தேரர்களை ஓடிப் போய்ச் சந்தித்தார். தீர்ப்பை அவர்களிடம் கொடுத்தார். அது சிலருக்கு ஞாபகம் இருக்கலாம். அதனைக் கொடுத்து இது அருமையான தீர்ப்பு என்றும், இதனை உங்கள் உயர் நீதிமன்றமே சொல்லியிருக்கிறது என்றும் கூறியிருந்தார்.
நாங்கள் சமஷ்டியைக் கோர முடியுமென்று கூறி தீர்ப்பைத் தேரர்களிடம் கொண்டு சென்று கொடுத்தவர்தான் முதலமைச்சர். ஆனால், அந்தத் தீர்ப்பைக் கொண்டுபோய் கொடுப்பதற்கு ஒரு தபால்காரர் போதும். ஆனால், நீதிமன்றத்தில் வாதாடுவதை ஒரு தபால்காரர் செய்ய முடியாது. நான் செய்தது நீதிமன்றில் வாதாடி அந்தத் தீர்ப்பைப் பெற்றது. ஒரு தபால்காரர் செய்கின்ற வேலையை நான் செய்யவில்லை.
நான் வாதாடிப் பெற்ற தீர்ப்பை நல்ல தீர்ப்பென்று ஓடிப் போய் அங்கு கொடுத்தவர் இன்றைக்கு எனக்கு சமஷ்டியைப் பற்றிப் போதிப்பதற்குத் தலைப்பட்டிருக்கிறார். இதுதான் இன்றுள்ள துரதிஷ்டவசமான நிலைப்பாடு.
கூட்டமைப்பின் தலைமை தவறிழைத்திருக்கிறதென்று முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூறுகின்றார். என்னைப் பொறுத்தவரை அவரை முதலமைச்சராக நீடிக்கவிட்டதுதான் கூட்டமைப்பின் தலைமை செய்த தவறு” – என்றார்.
No comments:
Post a Comment