மலையகத்தில் உள்ள பல பாடசாலைகளில் வளங்களின் பற்றாக்குறை காணப்பட்ட போதிலும் எமது மாணவர்களினதும் ஆசிரியர்களினதும் பெற்றோர்களினதும் பாரிய அர்ப்பணிப்பினால் எமது கல்வி. ஓரளவுக்கு வளர்ச்சி கண்டிருந்த போதிலும் இந்த நல்லாட்சி அரசாங்கம் வந்ததன் பின் நாம் வைத்த கோரிக்கைகளுக்கு அமைய இன்று பாரிய அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக மலையகத்தில் மிக அண்மைக் காலத்தில் கல்வி முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கல்வி முன்னேற்றம் ஏற்பட்டால் தான் ஏனைய எல்லாத்துறைகளையும் விட நாம் மாற்றம் காண முடிவதோடு ஏனைய சமூகத்திற்கு எடுத்துக்காட்டாக வாழ முடியும்.
இன்று எமது பாடசாலைகளில் பல்வேறு திறமைகளை கொண்ட மாணவர்கள் இருக்கிறார்கள் அவர்கள் வள பற்றாக்குறை காரணமாக பிரகாசிக்க முடியாதிருப்பதாக மத்திய மாகாண சபை உறுப்பினரும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் உபதலைவருமான எம்.உதயகுமார் தெரிவித்தார்.
நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட மகா ஊவா தமிழ் வித்தியாலத்தில் சுமார் 20 லட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட புதிய கட்டடம் ஒன்று மாணவர்களின் பயன்பாட்டுக்கு கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் இது ஒரு பின்தங்கிய பிரதேசம். இந்த பாடசாலையும் ஒரு பின்தங்கிய பாடசாலை. இந்த சிரமத்திற்கு மத்தியில் ஆசிரியர்களும் மாணவர்களும் படித்து உயர்கல்வியினை தொடர்ந்துள்ளார்கள்.மலையககத்தில் பாடசாலைகளில் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் பொருளாதார வசதிகள் போதியளவு இல்லாததன் காரணமாக மலையக பாடசாலைகளில் மாணவர்களின் இடை விலகல் அதிகரித்துள்ளன.
அதனால் இந்த நல்லாட்சி அரசாங்கம் வந்தபின் மலையக பாடசாலைகளை அபிவிருத்தி செய்ய வேண்டும் அவற்றுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். ஆசிரியர் நியமனங்களை பெற்றுக்கொடுக்க வேண்டும் என பல கோரிக்கைகளை முன் வைத்தோம் அதற்கமைய இன்று அமைச்சர் திகாம்பரம் அவர்கள் ஒருசிலர் கூறுவதை போல வீடுகளை கட்டுவதில் மாத்திரம் அக்கறை கொள்ளாது பாடசாலையில் உட்கட்டமைப்பு வசதிகளையும் செய்து கொடுத்து வருகிறார்.
ஒரு சமூகத்தின் எதிர்காலம் கல்வியில் தான் உள்ளது. ஒரு சமூகத்தின் ஏற்றத்தினையோ அல்லது இறக்கத்தினை கல்வியினை வைத்து தான் எடை போடுகிறார்கள்.எனவே ஆசிரியர்களும் பெற்றோர்களும் கல்வியில் அக்கறை செலுத்த வேண்டும்.
நாங்கள் கட்சி தொழிற்சங்கம் ஆகியவற்றுக்கு அப்பால் சென்று சமூகத்தின் எதிர்காலத்தினை கருத்தில் கொண்டு எமது அனைத்து திட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றோம் இன்று மலையக எங்கும் வீடமைப்பு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதற்கு காரணம் மலையக மக்களின் அடையாளத்தினை உறுதிப்படுத்துவதாகும்.
என்னைப் பொறுத்த வரையில் சுதந்திரம் கிடைத்தது என்றால் சொந்தகாணியில் சொந்த வீட்டடில் வாழ்வது தான். இத்தனை காலங்கள் நாம் லயன் வீடுகளில் பட்ட கஸ்டங்கள் நீங்கி எமது எதிர்கால சமூகம் நிம்மதியாக சொந்த வீட்டில் வாழ வேண்டும் என்பது தான் எமது அவா என அவர் மேலும் தெரிவித்தார்.
இந் நிகழ்வுக்கு மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment