கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரம் உயர்த்துவதால் எவருக்கும் பாதிப்பில்லை - மக்களை குழப்பி இனவாத கருத்துக்களை வெளியிட வேண்டாம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, September 4, 2018

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரம் உயர்த்துவதால் எவருக்கும் பாதிப்பில்லை - மக்களை குழப்பி இனவாத கருத்துக்களை வெளியிட வேண்டாம்

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரம் உயர்த்தப்பட்டால் கல்முனை பிரதேச முஸ்லிங்களுக்கு பாதிப்பு ஏற்படுமென மக்களை குழப்பி இனவாத கருத்துக்களை வெளியிட்டு, முஸ்லிம் மக்களிடம் தனது அரசியல் காய் நகர்த்தலை தக்க வைக்க பிரதி அமைச்சர் ஹரீஸ் முற்படுகிறார் என கல்முனை மாநகர சபை உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சியான தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) உப தலைவருமான கென்றி மகேந்திரன் தெரிவித்தார்.

மிக நீண்ட காலமாக தரம் உயர்த்தப்படாமல் இயங்கி வரும் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரம் உயர்த்தல் தொடர்பான சந்திப்பு ஒன்று அமைச்சர் விஜிர அபேயவர்த்தவுடன் இடம் பெற்றிருந்தது இதில் எதிர்க் கட்சித் தலைவர் இரா சம்மந்தன் உள்ளிட்ட த.தே.கூட்டமைப்பு பிரதிநிதிகள் முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகளும் பங்கு பற்றியிருந்தார்கள்.

இதில் பங்குபற்றியிருந்த கல்முனை மாநகர சபை உறுப்பினர் கென்றி மகேந்திரன் இச்சந்திப்பின் பின்னர் பிரதி அமைச்சப் ஹரீஸ அவர்களின் ஊடக பிரிவு வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பாக மேலும் தெரிவிக்கையில், இயங்கிக் கொண்டிருக்கும் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரம் உயர்த்துவதால் எந்த சமூகதத்திற்கும் பாதிப்பில்லை. 

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் கட்டிடம் தனியான நிருவாகம் ஆளணியுடன் நீண்ட காலமாக இயங்கிவருகிறது. இப்பிரதேச செயலகம் 29 கிராம சேவகர் பிரிவுகளை நிருவகிக்கின்றது ஆனால் மிக நீண்ட காலமாக தரம் உயர்த்தப்படாமல் உள்ளது. அதற்கான கோரிக்கையினை அரசாங்கத்திடம் தொடர்ந்து முன்வைத்து வருகின்றோம்.

கல்முனை பிரதேசத்தில் தமிழர்கள், முஸ்லிங்கள் வாழ்கின்றார்கள். தமிழ் மக்களுக்கான கிராம சேவகர் பிரிவுகள் உள்ளன. அதே போன்று முஸ்லிம் மக்களுக்கான கிராம சேவகர் பிரிவுகள் உள்ளன. தமிழ் மக்களுக்கான கிராம சேவகர் பிரிவுகளை கல்முனை வடக்கு பிரதேச செயலகம் நிருவகிக்கின்றது. இதில் சொற்பளவில் வாழும் சிங்கள மக்களும் உள்ளடக்கப்பட்டுள்ளார்கள். அதே போன்று முஸ்லிம் மக்களுக்கான கிராம சேவகர் பிரிவுகளை நிருவகிக்க என தனியான கல்முனை பிரதேச செயலகம் உள்ளது.

ஆளணி பௌதீக வளங்களுடன மிக நீண்ட காலமாக இயங்கிக் கொண்டிருக்கும் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரம் உயர்த்துவதால் முஸ்லிங்களுக்கு எந்த வகையிலும் பாதிப்பு இல்லை, ஆனால் இதனை வைத்து இன வாதமாக விடயங்களை பிழையாக உருவகப்படுத்தி பிரதியமைச்சர் ஹரீஸ் கையாளும் விதத்தை முஸ்லிம் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். கல்முனை பிரதேசத்தில் இரண்டு சமூகங்களும் இவ்வாறே ஒற்றுமையுடன் வாழ வேண்டும். சுய இலாப அரசியலுக்காக இன முரண்பாடுகள் தோற்றுவிக்கப்படுவது அனைவருக்குமே பாதிப்பாகும்.
இலங்கையில் நிலத்தொடர்பற்ற மூன்று பிரதேச செயலகங்கள் கல்முனை போன்று உள்ளன என்பதனையும் இங்கு சுட்டிக் காட்டுகின்றேன். அவ்வாறே கல்முனையில் உள்ள இரண்டு பிரதேச செயலகங்களும் இயங்குவதால் செயற்படுவதால் யாருக்கும் பாதிப்பு இல்லை.

எனவே யதார்ததமான விடயங்களை உண்மைகளுக்கப்பால் தவறாக சோடித்து, சுய அரசியல் இலாபங்களுக்காக மக்களை குழப்பி இனங்களுக் கிடையில் முரண்பாடுகளை தோற்றுவிக்க முயலுவதை பிரதியமைச்சர் ஹரீஸ் தவிர்க்க வேண்டும் என்றார்.

கல்முனை பிரதேச செயலக தரம் உயர்த்தல் தொடர்பான சந்திப்புக்கள் உள் நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன அவர்களுடனும் எதிர்க்கட்சித் தலைவர் இரா சம்மந்தன் அவர்களுடனும் இடம்பெற்றிருந்தன. 

இதில் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைமைக் குழு உறுப்பினருமான கவீந்திரன் கோடிஸ்வரன், கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான கென்றி மகேந்திரன், ராஜன், சிவலிங்கம், குபேரன், விஜயரெட்ணம், செல்வநாயகம் ஆகியோரும் பங்கு பற்றியிருந்தார்கள்

நேற்றைய (03) சந்திப்பில் பிரதேச செயலக தரம் உயர்த்தல் தொடர்பாக விளக்கமான அறிக்கைகளை அம்பாறை மாவட்ட அரச அதிபர் மற்றும் இந்த விடயங்களுக்கு பொறுப்பானவர்களிடம் கோருவது என்றும் அந்த அறிக்கைகளின் பிரதிகளை நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்வது எனவும் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்து கூட்டத்தை ஒத்தி வைத்திருந்தார்.

No comments:

Post a Comment