மிக அதிக விலை கொண்ட, புற்றுநோய் மருந்துகள் 10 மற்றும் நீரிழிவு (இன்சுலின்), ஆஸ்த்மா நோய்கள் உள்ளிட்ட 13 மருந்துகளின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.
நேற்று (01) பேராதெனிய பல்கலைக்கழகத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள, அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் 39 ஆவது மருந்தகத்தை (ஒசுசல) திறந்து வைக்கும் வைபவத்தின்போது, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்த இதனைத் தெரிவித்தார்.
இன்று நள்ளிரவு (01) முதல் அமுலாகும் வகையில், குறித்த விலை குறைப்பு அமுல்படுத்தப்படுவதற்கான, வர்த்தமானி அறிவித்தலில் நேற்றையதினம் (31) சுகாதார, போசணை மற்றும் சுதேஷ வைத்திய அமைச்சர் வைத்தியர் ராஜித சேனாரத்ன கையொப்பமிட்டுள்ளார்.
இதன் மூலம், மிக அதிக விலை கொண்ட புற்றுநோய் மருந்துகள் 10 இன் கேள்வி அறிவிப்புக்கான (டெண்டர்) விலை கட்டுப்படுத்தப்பட்டுள்ளதோடு, தெரிவு செய்யப்பட்ட 13 வகை மருந்துகளின் உச்சபட்ச சில்லறை விலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.
உயிர்காக்கும் நோய் எதிர்ப்பு மருந்துகள், நரம்பியல் மருந்துகள், இன்சுலின் உள்ளிட்ட நீரிழிவு மருந்துகள், ஆஸ்த்மா நோய்க்காக பயன்படுத்தப்படும் மருந்துகள், வலிப்பு நோய் மருந்துகள், கொலஸ்ட்ரோல் கட்டுப்பாட்டு மருந்துகள் என்பன, தெரிவு செய்யப்பட்ட 13 மருந்துகளில் உள்ளடங்கியுள்ளன.
அத்துடன், இரத்த குளுக்கோஸ் அளவை அளவிடும் கருவி (குளுகோஸ்மானி) மற்றும் அதில் (குளுக்கோஸ்மானியில்) பயன்படுத்தடும் கடதாசி கீற்றுகள் ஆகிய உபகரணங்களின் உச்சபட்ச சில்லறை விலையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
இதன்போது கருத்துத் தெரிவித்த அமைச்சர் ராஜித சேனாரத்ன, புற்றுநோய் மருந்துகளில் 95% ஆனவை அரசாங்கத்தினாலேயே கொள்வனவு செய்யப்படுகின்றன. தனியாரினால் 5% ஆன மருந்துகளே விற்பனை செய்யப்படுகின்றன. புற்றுநோய் மருந்துகள் விலை அதிகமானவை.
எனவே, புற்றுநோயாளிகளுக்கு அம்மருந்துகளை வாங்குவது கடினமாக காணப்படுகின்றது. மருந்துகளை இறக்குமதி செய்வதற்காக, ஒரு வருடத்திற்கு ரூபா 7 பில்லியன் செலவிடப்படுகின்றது. புற்றுநோய் மருந்துகளின் விலையை குறைப்பதன் மூலம், அரசாங்கத்திற்கு ரூபா 2 பில்லியன் மீதமாகின்றது.
நல்லாட்சி அரசாங்கம் ஆட்சியமைக்கும்போது, 'டெப்சுமாப்' (Tabsumab) எனப்படும் மருந்து ரூபா 280,000 இற்கு விற்கப்பட்டது; அது ரூபா 144,000 ஆக குறைக்கப்பட்டது. எனினும், இன்று வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவிப்பின் படி, 'டெப்சுமாப்' மருந்து ரூ. 95,000 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வரும் வரை, சுகாதார அமைச்சினால், சுதந்திர சுகாதார சேவை எனும் பெயரில், மருந்து நிறுவனங்களுக்கே பணம் செலுத்தி வந்துள்ளது.
கடந்த 2016 ஒக்டோபர் 21 ஆம் திகதி, 48 அத்தியாவசிய மருந்துகளின் விலைகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டன. அதன் மூலம் பல்வேறு வர்த்தகப் பெயர்களுடனான 400 வகையான மருந்துகளின் விலைகள் கட்டுப்படுத்தப்பட்டன.
இன்று (01) மேற்கொள்ளப்பட்ட விலை நிர்ணயத்தையடுத்து, 74 மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களின் விலைகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.
அதற்கமைய, பல்வேறு வர்த்தக பெயர்களைக் கொண்ட சுமார் 1,000 மருந்துகளின் விலைகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.
அத்தியாவசிய மருந்துகள் 48 இன் விலைகள் நிர்ணயம் செய்யப்பட்டதையடுத்து, நோய் எதிர்ப்பு மருந்துகள், வலி நிவாரணிகள், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், இதய நோய்கள் தொடர்பான மருந்துகள் ஆகியவற்றின் விலைகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டன.
இன்று, மருத்துவர்களால் பரிந்துரை செய்யப்படும் அனைத்து மருந்துகளும் கொள்வனவு செய்யப்படுவதன் மூலம், மருந்துகளின் ஒட்டுமொத்த பயன்பாடு அதிகரித்துள்ளன. இந்த விலை நிர்ணயத்தின் மூலம் மருந்துகள் கொள்வனவு செய்யப்படும்போது நோயாளர்களால் மொத்தமாக மீதப்படுத்தப்பட்ட பணம், சுமார் ரூபா 4.4 பில்லியன் ஆகும் என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
அரச ஒசுசல திறப்பு நிகழ்வில், அரச மருந்தாக்க கூட்டுத்தாபனத்தின் சட்டத்தரணி, சரத் லியனகே, பேராதெனிய பல்கலைக்கழக உப வேந்தர் உபுல் திசாநாயக்க, பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள், வைத்தியசாலை பணிப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment