மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும் போகச் செய்கைக்கான ஆரம்பக் கூட்டங்களை எதிர்வரும் வாரங்களுக்குள் நடத்தி முடிக்கவுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் தெரிவித்தார். மாவட்ட செயலகத்தில் இன்று (04) முற்பகல் நடைபெற்ற மாவட்ட விவசாயக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
கடந்த வருடத்தில் நடைபெற்ற சிறுபோகம், வரவுள்ள 2018-19 பெரும்போகம், விவசாயிகளது பிரச்சினைகள், விவசாயிகளுக்கான மேம்பாட்டுத்திட்டங்கள், நீர்ப்பாசனம், நெல் கொள்வனவு, உரம் வழங்கல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டன.
மண்முனை மேற்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட உன்னிச்சை, சிறிய நீர்ப்பாசனத்திட்டங்கள், ஏறாவூர் பற்று பிரதேச செயலகப்பிரிவில் உறுகாமம், கித்துள்வெள, வெலிகாகண்டி, சிறிய நீர்ப்பாசனத்திட்டங்களுக்கான கூட்டங்கள் எதிர்வரும் 08ஆம் திகதி சனிக்கிழமை நடைபெவுள்ளன.
போரதீவுப்பற்று - நவகிரி, தும்பங்கேணி, சிறு நீர்ப்பாசனத்திட்டங்கள், மண்முனை தென்மேற்கு - கடுக்காமுனை, புழுக்குணாவி, அடைச்சகல், சிறிய நீர்ப்பாசனத்திட்டங்களுக்கான ஆரம்பக் கூட்டங்கள் எதிர்வரும் 10ஆம்திகதி இடம்பெறவுள்ளன.
அதேபோன்று 11ஆம் திகதி கோரளைப்பற்று தெற்கு வாகனேரி, புணானை, தரவை, வடமுனை, சிறிய நீர்ப்பாசனத்திட்டங்கள், கோரளைப்பற்று வடக்கு - கட்டுமுறிவு நீர்ப்பாசனம், மதுரங்கேணி, கிரிமிச்சை, சிறு நீர்ப்பாசனத் திட்டங்களுக்கான பெரும்போக விவசாயச் செய்கைக்கான ஆரம்ப கூட்டங்கள் நடைபெறவுள்ளன.
இக்கூட்டங்களின் போது பெரும்போக விவசாய செய்கைக்கான திகதிகள் தீர்மானிக்கப்படவுள்ளன.
அந்தந்த விவசாய பிரதேசங்களின் திட்ட முகாமைத்துவக் குழுக்களில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கமைய வயற்காணி உழுதல், விதைப்பு தொடங்குதல், வேலி அடைத்தல், கால்நடைகள் அகற்றல், நீர் முகாமைத்துவம் உள்ளிட்ட அனைத்து விடயங்களுக்கான தீரமானங்களும் நிறைவேற்றப்படவுள்ளன. மேலும் பெரும்பொகத் தீர்மானங்கள் ஆரம்பக்கூட்டங்களில் எடுக்கப்படும்.
இதன் போது வங்கிகளின் கடன்கள், விவசாயம், மீன்பிடி, கால்நடைப்பிரச்சினை, யானைப்பிரச்சனைகள், காடுகள் அழிப்பு போன்ற பிரச்சனைகள் தொடர்பிலும் ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வில் மாவட்ட விவசாயப் பணிப்பாளர் வை.பி.இக்பால், மாவட்ட மத்திய நீர்ப்பாசன பணிப்பாளர் வை.பி.அசார், மாவட்ட செயலக பிரதம கணக்காளர் கே.ஜெகதீசன் , திட்டமிடல் பணிப்பாளர் சசிகலா புண்ணியமூர்த்தி உள்ளிட்ட பிரதேச செயலாளர்கள், உதவித் திட்டமிடல் பணிப்பாளர்கள், திணைக்களத் தலைவர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், வங்கிகளின் பிரதிநிதிகள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment