நேபாளத்திற்கு அரசமுறை பயணமொன்றை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிற்கும் சார்க் அமைப்பின் பொதுச் செயலாளர் அம்ஜாட் ஹுசைன் பீ. சியால் [Amjad Hussain B. Sial] அவர்களுக்குமிடையில் சந்திப்பு இடம்பெற்றது.
காத்மண்டு நகரின் சார்க் செயலகத்தில் நேற்று (02) முற்பகல் இடம்பெற்ற இந்த சந்திப்பில் செயலகத்திற்குச் சென்ற ஜனாதிபதியை பொதுச் செயலாளர் மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்றார். அதனைத் தொடர்ந்து ஜனாதிபதியும் சார்க் அமைப்பின் பொதுச் செயலாளரும் சுமுகமாக கலந்துரையாடினர்.
பிராந்திய கூட்டுறவுக்கான தெற்காசிய அமைப்பான சார்க் அமைப்பில் இலங்கையை முக்கிய நாடாக தான் கருதுவதாக குறிப்பிட்ட சார்க் அமைப்பின் பொதுச் செயலாளர், சார்க் அமைப்பின் நோக்கங்களை அடைந்துகொள்வதற்கு இலங்கை தொடர்ச்சியாக வழங்கிவரும் ஒத்துழைப்புக்களை பாராட்டியதுடன், அது தொடர்பில் ஜனாதிபதி அவர்களுக்கு தனது நன்றியைத் தெரிவித்தார்.
சார்க் பிராந்திய நாடுகளுக்கிடையில் ஒத்துழைப்பையும் பிணைப்பையும் மேலும் பலப்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தினார்.
மேலும் சார்க் அமைப்பு தொடர்பாக தாம் வைத்திருக்கும் உயர்ந்த மதிப்பின் காரணமாக இந்நிகழ்வில் பங்குபற்றியதாகவும் சார்க் அமைப்பின் நடவடிக்கைகளை முன்கொண்டு செல்வதற்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தனது முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
சார்க் செயலகத்தில் வைக்கப்பட்டுள்ள விசேட விருந்தினர் புத்தகத்தில் ஜனாதிபதி நினைவுக் குறிப்பொன்றை பதிவுசெய்ததுடன், அலுவலக வளாகத்தை சுற்றிப் பார்வையிட்டார்.
சார்க் செயலகத்திற்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் வருகையை நினைவுகூரும் வகையில் அவ்வளாகத்தில் மரக் கன்றொன்றும் இதன்போது நாட்டப்பட்டது.
No comments:
Post a Comment