காணாமல் போனவர்களைக் கண்டுபிடிப்பதற்கும், அவர்களின் நிலை பற்றி அறிவதற்கும் நாங்களும் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கின்றோம். அதற்காக வாதாடிக் கொண்டும் இருக்கின்றோம். இந்த நாட்டின் அரச தலைவர்கள் அது சம்மந்தமாக அசமந்தப் போக்கில் தான் இருக்கின்றார்கள் என மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார்.
இன்று (02) இடம்பெற்ற ஈரளக்குளம் பிரதேச மக்களுடனான சந்திப்பில் காணாமற் போனோர் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த நல்லாட்சி அரசாங்கத்தின் ஜனாதிபதியாக இருக்கலாம், பிரதமராக இருக்கலாம் எமது காணாமற் போன உறவுகள் தொடர்பில் இன்னும் நியாயமான முடிவுகளைச் சொல்வதாக இல்லை.
இற்றைக்கு 500 நாட்களையும் கடந்து எமது வட மாகாண உறவுகளின் போராட்டம் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. அமைக்கப்பட்ட காணாமல் போனோர் தொடர்பான அலுவலகமும் இழுபறி நிலையில் இருக்கின்றது.
காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்க வேண்டும், அவர்களின் நிலை என்ன என்பது பற்றி அறிய வேண்டும் என நாங்களும் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கின்றோம். அதற்காக வாதாடிக் கொண்டும் இருக்கின்றோம். இந்த நாட்டின் அரச தலைவர்கள் அது சம்மந்தமாக அசமந்தப் போக்கில் தான் இருக்கின்றார்கள்.
நாங்களும் எமது மக்களுக்காகப் போராடிக் கொண்டிருக்கின்றோம். எமது மக்களின் துக்கங்கள், வேதனைகள் அனைத்தும் எமக்குத் தெரியும். எமது தலைவர் சம்மந்தன் ஐயா அவர்களும் இது தொடர்பில் பல பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்றார்.
அண்மையில் இம்பெற்ற வடக்கு கிழக்கு அபிவிருத்தி செயலணியில் கூட காணாமல் போனோர் தொடர்பிலான செயற்பாடுகள் தொடர்பில் வலியுறுத்தியுள்ளார். இது சம்மந்தமாக அவர் மிகத் தீவிரமாக இருக்கின்றார். நாங்களும் எம்மாலான விடா முயற்சிகளை செய்து கொண்டிருக்கின்றோம் என்று தெரிவித்தார்.
No comments:
Post a Comment