சர்வதேச கிரிக்கெட் கவுன்ஸிலுடன் கலந்துரையாடி கிரிக்கெட் சட்டங்களை சீர்திருத்தம் செய்த பின்னர் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாக விளையாட்டுத்துறை அமைச்சர், இன்று (03) மேன் முறையீட்டு நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளார்.
கடந்த தேர்தலின் போது இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் திலங்க சுமதிபால சமர்ப்பித்த பெயர் பட்டியல் சட்ட வீரோதமானது என தீர்ப்பு வழங்கி அதனை இரத்து செய்யுமாறு கிரிக்கெட் நிறுவனத்தின் முன்னாள் செயலாளர் முன்வைத்திருந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது விளையாட்டுத்துறை அமைச்சர் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த பிரதி சொலிஸ்டர் ஜெனரல் சுமதி தர்மவர்தன தெரிவித்துள்ளார்.
குறித்த மனு விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில் சர்வதேச கிரிக்கெட் கவுன்ஸிலுடன் கலந்துரையாடி கிரிக்கெட் சட்டங்களை சீர்திருத்தம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக பிரதி சொலிஸ்டர் ஜெனரல் சுமதி தர்மவர்தன தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் கிரிக்கெட் தேர்தலை நடத்துவதற்கு சுயாதீனமான குழு ஒன்றை நியமிக்கவுள்ளதுடன் அதற்கு ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவரை அல்லது பிரதான பதவி வகிக்கும் இருவரையும் தேர்தல் ஆணைக்குழுவில் தேர்தல் தொடர்பில் அனுபவம் வாய்ந்த ஒருவரையும் நியமிக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
செப்டம்பர் மாத முடிவிற்குள் கிரிக்கெட் சட்டங்களை திருத்தி முடிக்க எதிர்ப்பார்ப்பதாகவும் அதன் பின்னர் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். குறித்த மனு தொடர்பான அடுத்த கட்ட விசாரணையை நவம்பர் மாதம் 30 ஆம் திகதி மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment