முன்னர் ஆட்சியில் இருந்தவர்களுக்கோ அல்லது தற்பொழுது ஆட்சியில் இருப்பவர்களுக்கோ மீண்டும் ஆட்சி செய்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படக் கூடாது என்ற தெளிவான நிலைப்பாட்டில் தமது கட்சி இருப்பதாக ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
அரசாங்கத்துக்கு எதிராக போராட்டம் நடத்தும் உரிமை எந்தவொரு கட்சிக்கும் உள்ளது. எனினும், ஒரு திருடர்களுக்குப் பதிலாக மற்றுமொரு திருடர்கள் ஆட்சிக்கு வருவதற்கு இடமளிக்க முடியாது.
ஜே.வி.பியின் தலைமையகத்தில் நேற்று (04) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், மஹிந்த ஆதரவு அணியால் இன்று நடத்தப்படவுள்ள அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஜே.வி.பி கலந்துகொள்ளுமா என எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அநுரகுமார திசாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் பதிலளிக்கையில், இது மற்றுமொரு அரசியல் கட்சியினால் முன்னெடுக்கப்படும் எதிர்ப்புப் போராட்டமாகும். எந்தவொரு கட்சிக்கும் தமது நிலைப்பாடு மற்றும் அரசாங்கத்துக்கு எதிராகக் கொண்டுள்ள எண்ணப்பாடுகளை முன்வைத்து போராட்டங்களில் ஈடுபடுவதற்கும், விமர்சனங்களை முன்வைப்பதற்கும் உரிமை உள்ளது. அப்படியானதொரு போராட்டங்களில் பங்கெடுப்பதையோ அல்லது அவற்றுக்குத் தலைமை தாங்குவதோ எமது கட்சியின் நோக்கம் அல்ல என்றும் கூறினார்.
மீண்டும் ஒருமுறை ஆட்சியைப் பிடிப்பதற்கோ அல்லது ஒரு திருடர்களுக்குப் பதிலாக மற்றுமொரு திருடர்களை ஆட்சிக்குக் கொண்டுவருவதற்கு இடமளிக்கப்படக் கூடாது என்பதே எமது நிலைப்பாடாகும் என்றார்.
இரண்டு தரப்பினருக்கும் எதிராக மாற்று அரசியல் சக்தியொன்றைக் கட்டியெழுப்புவதே எமது குறிக்கோளாகும். அப்படியான நிலையில் மற்றுமொரு கட்சியின் போராட்டத்தில் அல்ல ஆர்ப்பாட்டத்தில் தாம் கலந்துகொள்ளப்போவதில்லையென்றும் கூறினார்.
இந்த இரண்டு தரப்பினருக்கும் நாட்டை நிர்வகிக்க முடியாது என்பது தெ ளிவாகப் புலனாகியுள்ளது. இதனாலேயே நாடு பாரியதொரு கடன்சுமைக்குள் புதையுண்டிருப்பதுடன், உற்பத்தி வீழ்ச்சியடைந்து, இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்புக்கள் இல்லாமை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் காணப்படுகின்றன.
தினகரன்

No comments:
Post a Comment