வடக்கில் 25,000 கல்வீடுகள், 2 -3 வாரங்களில் ஆரம்பம் - செயலணியின் செயலாளர் தெரிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Tuesday, September 4, 2018

வடக்கில் 25,000 கல்வீடுகள், 2 -3 வாரங்களில் ஆரம்பம் - செயலணியின் செயலாளர் தெரிவிப்பு

வடக்கில் 25 ஆயிரம் நிரந்தர கல்வீடுகள் நிர்மாணிக்கும் பணிகள் எதிர்வரும் 2 அல்லது 3 வாரங்களில் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வடக்கு கிழக்கு மாகாண அபிவிருத்திக்கான ஜனாதிபதி விசேட செயலணியின் செயலாளர் வே.சிவஞானசோதி தெரிவித்தார். இதற்கான ஒப்பந்தக்காரர்களை தெரிவு செய்யும் நடவடிக்கை நிறைவடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மைலிட்டி மீன்பிடித் துறைமுகத்தை அண்டிய ​கலைமகள் மகாவித்தியாலயத்தை இராணுவக் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு யாழ் மாவட்ட பாதுகாப்பு கட்டளை தளபதிக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்திருந்தார். இதன் பிரகாரம் இப்பாடசாலை பாதுகாப்பு கட்டளைத் தளபதியினால் செப்டம்பர் 6 ஆம் திகதி யாழ் மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகனிடம் கையளிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஏற்கெனவே 683 ஏக்கர் காணிகள் மைலிட்டியை அண்டிய பிரதேசங்களில் விடுவிக்கப்பட்டிருப்பதால் அங்கு மீள்குடியேறும் பாடசாலை மாணவர்களுக்கு இது முக்கியமாக அமையும்.

இது தொடர்பாக கடந்த 27 ஆம் திகதி ஜனாதிபதியின் தலைமையில் இடம்பெற்ற வடக்கு கிழக்கு மாகாண அபிவிருத்திக்கான ஜனாதிபதி விசேட செயலணி கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கான 50,000 வீடுகளில் 25,000 வீடுகள் தொடர்பான கேள்விகோரல்கள் முடிவடைந்து அதனடிப்படையில் UNHABITAT, UNOPS நிறுவனங்கள் தெரிவு செய்யப்பட்டு கட்டுமானப்பணிகளை முன்னெடுப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. 

மேலும் ஒப்பந்தக்காரர்களை தெரிவுசெய்யும் கடினமான செயற்பாடு முடிவுக்கு வந்தமையால் இத்திட்டத்தை விரைவாக அமுலாக்கும் செயன்முறை எதிர்வரும் 2 அல்லது 3 வாரங்களுக்குள் முன்னெடுக்கப்படும். இது ஒரு நிரந்தரமான கல்வீட்டுத்திட்டம் எனவும் செயலாளர் சிவஞானசோதி தெரிவித்தார்.

1847 கி.மீ நீளமான வீதிகளை அமைக்கும் வேலைத்திட்டம் தொடர்பாக கேள்வி கோரல் செயன்முறைகள் முடிவுறுத்தப்பட்டு அமைச்சரவை அங்கீகாரத்தைப் பெறுவதற்கான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மன்னார் , மடு தேவாலய பிரதேசத்தில் யாத்திரிகர்களுக்கான ஓய்வு விடுதிகளை நிர்மாணிப்பதற்கான செயற்பாடுகள் அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் வடக்கு, கிழக்கு மாகாண அபிவிருத்திக்கான ஜனாதிபதி விசேட செயலணியின் அடுத்த கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஒக்டோபர் பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் இடம்பெறவுள்ளது.

இது வடக்கு கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பான பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வை வழங்கும் ஒரு பொறிமுறையாக அமைவதுடன் அனைத்து அமைச்சர்கள் மற்றும் வடக்கு-கிழக்கு மாகாண பாராளுமன்ற உறுப்பினர்களினதும் பங்குபற்றுதலுடன் இடம்பெற உள்ளது.

தினகரன்

No comments:

Post a Comment